Thursday 30 December, 2010

திருவிழா

ஒவ்வொரு திருவிழாக்களிலும்
உனைக் கண்கள் தேடிடுதே
நீ எனக்கானவள்
இல்லையென்ற போதிலும்...

உன் வண்ணத்தில்
உடைகொண்டு செல்பவளைக்
கண்டிடும் வேளையிலும்,
நீயாகக் கூடாதா என
கெஞ்சிக் கேட்கிறது...

வேறொருத்தியின்
நடையில்
சாயலில்
உயரத்தின் அளவிலும்,
நீ கானல் நீராய்
காட்சி தந்து மறைகிறாய்...

கூட்டத்தில்
தொலைந்த குழந்தையாய்
தேம்பி அழுகிறது இதயம்,
எங்கேனும் உன்னைக்
கண்டிடமாட்டோமா என்று..

அழகு பட்டுடுத்தி
திருவிழா வீதியில்
அன்னமாய் நீ வருகையில்,
பவனியாகத் தானடி
காட்சியானது என் கண்களுக்கு...

என்னைக் கண்டதும்
உன் பளிர்முகத்தின் புன்சிரிப்பும்,
கள்ளத்தன பார்வைகளும்,
காற்றினில் வரையும் சைகைகளும்,
பிற பெண்கள் பார்க்கையில்
மிரட்டிடும் கண்களுமாய்
காட்சி தந்த தேவதையே,
உன் வரம் மீண்டும் கிடைத்திடுமா?

கடந்து போன
நொடிகள் எனத் தெரிந்தும்,
தேடித் தொலைக்கிறது மனம்....

இம்முறையும்
உன்னைக் காணாமல்
ஏமாந்த என் காதல்,
அக்கூட்டத்திலே
தொலைந்து போய்கிறது...

பலூன் கேட்டு கிடைக்காத
குழந்தையின் அழுகையாய்
நாம் சென்ற பாதையில்
இதயம் திரும்பி வருகிறது...


No comments:

Post a Comment