Sunday, 15 January, 2012

தனிமைத் தீவின் ஒற்றைப் படகாய்

ஆழிப் பேரலையாய்
உன் நினைவுகள்
என்னைத் தாக்கிட,
தனிமைத் தீவின்
ஒற்றைப் படகாய்
நொறுங்கித் தான் போகிறது
என் நிம்மதியும்..

உன் ஒற்றைப் பார்வையில்

அடங்காத திமிருடன்
அலைந்த என்னிதயம்
நொடியில் அடங்கிப் போகிறது
உன் ஒற்றைப் பார்வையில்...

திரணியற்ற என் காதல்

உன் திமிரான அழகைப் போலவே
உன் நினைவுகளுக்கும்
சற்றே திமிரு அதிகம் தான்.
அதனாலோ என்னவோ
திமிற வைத்து சுற்றவைக்கிறது
திரணியற்ற என் காதலை
உன் பின்னே..

நான் - நீ

மதம் கொண்ட யானையாய்
காதல் கொண்ட நான்.
அடக்கும் அங்குசமாய் நீ..

மறு ஜென்மத்தில் நம்பிக்கை

மறு ஜென்மத்தில்
நம்பிக்கை கொண்டு வந்தாயடி,
உன் காதல் பார்வையில்
ஒவ்வொரு முறையும்
ஜெனிக்க வைத்து...

மடத்தன அறிவாளியாய்

கடும் குளிரில்
வியர்வைக்கு விசிறி விற்கும்
மடத்தன அறிவாளியாய்
எதிர் பார்க்கிறேன்
கடுகளவும் கனியாத
உன் காதலை..

மனம் கொத்திப் பறவை

குடிகொள்ள
மரம்கொத்தும் பறவைக்கு நடுவில்
என் இதயத்துள் குடிகொண்டு
கலாப இம்சை பண்ணும்
மனம் கொத்திப் பறவை நீ..

பசியாறிக் கொண்டது

குழந்தைக்கு
போக்கு காட்டி
உணவூட்டும் உனதழகில்,
பசியாறிக் கொண்டது
என் கண்கள்..

முதல் எதிரியாய்

பகலில் காற்றிற்கும்
இரவில் இருளுக்கும்
முதல் எதிரியாய்
உனை அணைத்த நான்..

உன் முத்தம்..

அவ்வளவு பெரிய
நிலவின் குளுமைக்கு
இரண்டு அங்குலத்தில்
முற்றுப் புள்ளி.
உன் முத்தம்..

உணர்த்தியது அழுத்தமாய்

உன் பெருங்காதலை
உணர்த்தியது அழுத்தமாய்
என் மணிக்கட்டில் பதிந்த
உன் உள்ளங்கை ரேகைகள்
கை பிடித்து நடக்கையில்..

என் வாழ்க்கை

இரயில் ஏறிய
தண்டவாள நாணயமாய்
காதல் புரட்டிப் போட்ட
என் வாழ்க்கை...

இன்னும் முடிக்கப்படாமலே

எனது பெரும்பாலான
கவிதைகள் இன்னும் முடிக்கப்படாமலே
உன் ஒற்றை பதிலுக்காய்...

எந்தன் நினைவுகள்

இறந்த சடலம் சுற்றி
கதறி அழும் சொந்தங்களாய்
உன்னைச் சுற்றியே
எந்தன் நினைவுகள்..

உன் பார்வைகள்

இலக்கணங்களுக்குள்
வகுக்கப்படாத வார்த்தைகள்
உன் பார்வைகள்..

காதல்

சிலருக்கு
ஆகாய விமானப் பயணம்.
எனக்கோ
உன் நினைவுடனே
தனிமையில் நடை பயணம்...

மகிழும் இதயம்

கண்ணாடி ஜன்னலில் படிந்த
மழை துளியை விரலில்
இணைத்து மகிழும் இதயம்,
ஒவ்வொரு நாளின்
உன் அசைவுகளை
அடுக்கிப் பார்ப்பதிலும்...

நிலவுக்கான நிழல் காண,

ஒவ்வொரு பொருளுக்குமான
நிழல் பார்க்கையில்,
நிலவுக்கான நிழல் காண,

நடு இரவில்
உன்னை எப்படியடி எழுப்ப...

தங்கம்

மண்ணில் புதைந்தும்
உன் மீது ஆசை.
உன் கழுத்தோர பொன்னிற
பூனை முடிகளுக்கிடையே
புதைந்து போக..

உன் கழுத்தேறிய தாலி..

உன்னை
எனக்குச் சொந்தமாகிய
நிமிடம் முதலே,
என்னைவிட அதிகமாய்
உன்னை சொந்தமாக்கிட
வேண்டுகிறது...

Friday, 13 January, 2012

தேவதையொடு நகர்வலம்.

ஒற்றைக் கையில்
வடம் பிடித்து
தேவதையொடு நகர்வலம்.
உன் கரம் பற்றி நடக்கையில்...

காதல்.

உன்னைப் பற்றிய
பிம்பங்களை
எனக்குச் சாதகமாய்
பிரதிபலிக்கும் கண்ணாடி.


எங்கள் ஊடல்

இரைச்சல் மிகுந்த
பகலில் ஊமையாய்,

செவிடாகிப் போன
இரவில்

கட்டில் சப்தங்களாய்
எங்கள் ஊடல்..

கண்ணீர் துளியின் பாரம்

எனது கண்ணீர் துளியின்
பாரம் கண்டிட
புரட்டிப் பாரடி
என் பக்கங்களை...

சுவாசமாய் வாசிக்கப்படும்

படிக்கப்படாது
சுவாசமாய் வாசிக்கப்படும்
கவிதை
உன் பெயர்..

உன் பெயர்..

கவிதைக்கான அடையாளங்கள்
ஏதும் இன்றியும்,
வாசித்தவரால் பாராட்டப்படுகிறது
உன் பெயர்..

சரி பார்த்துக் கொள்கிறது

வெகுவாய் தெரிந்திருந்தும்
அடிக்கடி சொல்லி
சரி பார்த்துக் கொள்கிறது
மனம் - உன் பெயரை..

நிலவும் நீயும்

இரவில்
உயிர் முழித்திருக்க
நிழல் மட்டும் உறங்கும் விந்தை.
நிஜமான நிலவிலும்,
நிழலான உன்னிலும்..

ஒவ்வொரு நொடியும்

தன் கடைசி உயிரின்
நொடி வரையிலும்
புல்லிடம் - தன்
அதீத காதலை வெளிப்படுத்தும்
பனித்துளியாய் - என்
ஒவ்வொரு நொடியும் உன்னோடு...

விருப்பப் பட்டியல்

நீ விரும்பி ரசிக்கும்
ஒவ்வொரு பொருளுமாய்
நானாக மாறிட
வரம் கேட்கிறேன்,
உன் விருப்பப் பட்டியலில்
நானில்லாக் காரணத்தில்...

வெளிச்சத்திற்கு கருமை பூச

பகலின் வெளிச்சத்திற்கு
கருமை பூசி அழிக்கிறேன்.
இரவில் கிடைக்கும்
உன்னுடனான நெருக்கத்திற்காய்..

பாவனை

நீ கதையாக
சொல்லுகையில்,
படமாகிப் போகிறது எனக்கு
உன் பாவனையில்...

உன் பெயர்.

உன்வசம் உள்ள
கவிதை புத்தகத்தில் மட்டும்
முன்னுரைக்கு முன் பக்கத்திலேயே
கவிதை ஆரம்பித்து விடுகிறது.


உளி

களிமண் பொம்மை
செதுக்க உளியாம்,
உன்னை இழந்த எனக்கான
மரணம் போல்...

இன்னும் அதே இளமையோடு

காலம்
என்னைக் கடத்தி
வயோதிகனாய் மாற்றியும்,
இன்னும் அதே
இளமையோடு உன் நினைவு...

வலி

உன் இதழ்கள் சுழற்றிய
வார்த்தை சாட்டைகூட
இவ்வளவு வலி
தரவில்லையடி - உன்
இதழ் பூட்டிய
மௌனத்தைப் போன்று
...

நீ தந்த நினைவிலே

சூரியனின் இரவல் ஒளியிலேயே
இரவின் தனிமையில்
காலம் கடத்தும்
நிலவின் பிரதியாய்,
நீ தந்த நினைவிலே
நானும் வாழ்ந்துவிடுகிறேன்..

வாகன ஓட்டியாய் காற்று

இரவில் நம்மிடையே
நுழைந்து செல்ல,
காத்துக் கிடக்கிறது,
பச்சை விளக்கை
எதிர் பார்த்து காத்திருக்கும்
வாகன ஓட்டியாய்
காற்றும்...

நான்..

இரவு நேர நெருக்கத்தில்
உன் வியர்வையை
ஒற்றி எடுக்கும் கைத்துண்டு
நான்..

சகோதரி..

எந்தன் பெண்பால்.
சகோதரி..

தூங்காத மனம்

அதற்குள் விடிந்ததற்கு
கோபம் கொள்ளும் மனம்
எப்பொழுது விடியும் என்றே
உறங்கப் போகிறது
உனைக் கண்ட நாள் முதல்...

மௌனம் பேசும் காற்று

என் ஏக்கத்தினையும்
வேதனைகளையும்
தன்னில் ஏற்றிக் கொண்டும்
ஏனோ உன்னிடம் சொல்லாமலே
மௌனம் பேசுகிறது காற்று...

Wednesday, 11 January, 2012

பெயர் இல்லையே

உனக்குப் பிடித்த
கவிதைகளை எல்லாம்
கோடிட்டு காட்டு என
கவிதை புத்தகம்
ஒன்றினை தந்தாள்..

மறுநாள் பார்க்கையில்
எத்தனை கவிதை கோடிட்டாய்
எனக் கேட்கையில்,
எந்தப் பக்கத்திலும்
உந்தன் பெயர் இல்லையே
எனத் திருப்பிக் கொடுத்தேன்...

நீ

சிரிப்பழகின்
ஒட்டு மொத்த
குத்தகைக்காரிடி நீ..

இடம் இல்லையாம்

வாரத்திற்கு ஒருமுறை
நகம் கடித்து துப்படி.
புதையலை சேர்த்து வைக்க
இடம் இல்லையாம்
எறும்புகளிடம்..

புதையல்

பூமி போர்த்திய புதையலாய்
போர்வை போர்த்திய
நீ
புதையல் எனக்கு..