Monday 27 December, 2010

சரியா? தவறா?

என்னில் கலந்திருக்கும்
என் இதயத்தில் ஒளிந்திருப்பவளே..
நில்லாமல் துடிக்கும் என்னிதயம்
உன் பெயரினை சொல்லித் துடிப்பது
உனக்குத் தெரியவில்லையா...

உன்னைப் பார்த்த நாள் முதல்
நான் படும் அவஸ்தைகளை
உனக்கெப்படிச் சொல்லுவேன்...
நினைவில் ஒவ்வொரு நொடிகளையும்
நரகமாய் கழிப்பது உனக்கெப்படி புரியும்...

மண்ணிலே நீர் விழுந்தால்
மழையென்று மண்ணிற்குத் தெரியும்...
மேனியில் நீர் துளிர்த்தால்
பனியென்று மலருக்குப் புரியும்....
என் மனதில் உன் பார்வை விழ
காதலென்று தெரியவில்லை...

ஆரம்பத்தில் நேரமே கரையாமல்
அலுத்துக் கொண்ட நாட்கள் எத்தனையோ.
இன்றோ உன்னை நினைக்க ஆரம்பித்தால்
பாலையில் பெய்த மழையாய்
கரைகிறது என் நேரம்...

சொந்தமே இல்லையென்று பலர்
எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்,
உன்னை எந்தன் சொந்தமாக
எண்ண ஆரம்பித்த நாள் முதல்,
நெருங்கிய சொந்தங்களைக் கூட
அந்நியமாய் பார்க்கிறது கண்கள்...

என்னெதிரே என்னிடம்
யார் வந்து பேசினாலும்,
நீயே பேசுவதாய் பிரம்மை...

உன்னைக் காண்கிறேனோ இல்லையோ
உன் வீட்டினைக் கடக்கும் வேளையில்
மனதில் பொங்கும் மகிழ்ச்சிக்கு
வேறொன்றும் இவ்வுலகில் இணையில்லை...

வானில் மேகங்கள் ஒன்றையொன்று
துரத்திச் செல்லும் வேளையில்,
அதிலே மேகத்திற்க்குப் பதில்,
நீயும் நானுமாய் தோன்றும்...

இத்துணை நாட்கள் வாழ்வில் இல்லா
புதுமையான மாற்றங்கள் யாவும்
இப்பொழுது மட்டும் எப்படி?

மகிழ்ச்சியாய் சுற்றித் திரிந்த
நாட்கள் தான் போனதெங்கே?

நிலையிலே இல்லாத என் மனம்
போன இடம் தானெங்கே?

என் மனதில் எழும் வினாக்களுக்கு
விடையளி பெண்ணே - அப்படியே
நானுன்னை நினைத்து வாழ்வது
சரியா? தவறா? என்றும்...

No comments:

Post a Comment