Tuesday, 28 June, 2011

தைரியம்

உன்னிடம்
காதல் சொல்ல வருகையில்,
கடன்காரனை பார்த்தவனாய்
ஓடி ஒளிகிறது
எந்தன் தைரியம்...

வெப்பம்

நனைந்த பின்னால்
வெப்பம் என்னில்...
கன்னத்தில்
உன் இதழின்
எச்சிலால்...

கவிதை வரிகளாய்

உன் காதலில்
நிரம்பி வழிவது
என் இதயம் மட்டுமில்லை
என் பக்கங்களும் தான்
காதலின் நகலாய்
கவிதை வரிகளாய்...

ஒற்றை வார்த்தை

சொந்தமில்லா ஒன்றினை
சொந்தமாக்கிடச்
சொல்கிறது இதயம்.

ஓராயிரம்
முறை அன்பில்
காவியம் கொண்டாடியே
புரியாத
இக்கால
பெண்களிடம்
காதலெனும்

ஒற்றை வார்த்தை கூறி...

உன் காதல்

தேடிட வைத்திடும்
பொருள் யாவும்
எனக்கென்றே உருவானதோ
உன் காதலைப் போலவே...

அழையா விருந்தாளி

உனக்கு மாட்டும்
எப்படியடி முடிந்தது
அழையா விருந்தாளியாய்
என்னுள் வருவதற்கு...

அது
சரி.
அப்படி கேட்டு வரும் முறை
தெரிந்திருந்தால் தான்,
உன் இதயம் உள்ள வர
அனுமதி கேட்டு நிற்கும்
எந்தன் காதலுக்கு தெரிந்திருக்குமே...

துடிப்பு

இரவும் பகலும்
விழித்திருந்தும்
களைப்பின்றி இதயம்,
துடிப்பது
உனக்காய் என்பதால்...

வரம் வேண்டும்

உன்னை எந்தன்
காதலியாகப் பார்த்திடும்
ஊர் உலகில் ,
தோழியாய் பார்க்கும்
காதலி வேண்டுமெனக்கு...

நிம்மதி

அம்மாவாசை அன்று
நிலவை தேடும்
வானமாகிப் போனது,
காதலில்
நிம்மதி தேடிடும்
எந்தன் இதயம்...

விரதம்

நீ துயில் முடித்து
சோம்பல் களைக்கையில்
எந்தன் பிரம்மச்சாரி விரதம்
களைந்து போகிறது அன்பே...

Monday, 27 June, 2011

என் காதல் பயணம்

எப்பொழுதாயினும்
மழை பெய்திடுகையில்
வானவில் தோன்றிடுமாம்...

அன்றும் அப்படித் தான்
கொட்டும் அடைமழைக்கு முன்னால்
பவ்யமாய் வானவில்
என் பின்னால் வண்டியில்...

வானவில் கண்டு கைதட்டி
சிரித்திடும் குழந்தையாய்
உன்னை நெருக்கத்தில் கண்டதும்
உருமாறியது இதயம்...

எப்பொழுதும் போகும் பாதை எனினும்
அன்று மட்டும் வெகு சிறப்பாய்...

என் காதோரம் முகம் கொண்டு
மிக நெருங்கிப் பேசுகையில்
தெறித்திடும் எச்சில் துளியில்
சில்லீட்டு சிலாகித்த முகம்...

ஆரம்பத்தில் ஒருபுறம் காலிட்டு
தோள் பிடித்து அமர்கையிலும்,
பின்னர் தைரியமாய்
இருபுறமும் காலிட்டு என்னை
இறுக்க அணைத்தது அமர்கையில்,
மெல்லிதாய்
இழையோடுகிறது
தோழியாய் இருந்து
காதலியான உனது பரிமாற்றம்..

உனது இறுக்கத்தின் அளவு
அதிகரிப்பதற்காகவே கூடியது
எந்தன் வண்டியின் வேகம்...

தெரிந்த முகம் காணும் பயத்தில்
உன் இதயம் படபடத்ததை
தெரிந்து கொண்டேனடி
என் முதுகுப் பகுதியில்
உன் இறுக்கத்தில்...

பேச்சினிடையே சில நேரம்
என் கன்னம் பதித்த முத்தத்தில்
சூடாகித் தானடி போனேன்
வண்டி இஞ்சினைக் காட்டிலும்...

இப்பயணம் இப்படியே
நீளாதா என்று
வேகம் குறைக்கச் சொல்லி
மன்றாடிய இதயம்...

இப்பொழுதும் ஒவ்வொரு முறையும்
அவ்வழியே செல்லும் பயணத்தில்
பின்பக்கம் பார்த்தபடியே
பரிதவிக்கிறது ஏக்கங்களுடன்,
உனது இறுக்கத்திற்கும் முத்தத்திற்கும்
அந்தக் காட்சியை போலவே
என் இதயம் இறுக்கப் பிடித்திருக்கும்
நம் காதலுக்கும்....

எந்தன் காதல்

கூந்தல் சேரா
கல்லறை மலராகிப் போகிறது
நீ உணர மறந்த
எந்தன் காதல்...

நிலா

தன்னை காட்டி
சோறூட்டும்
தாய்மாரைத் தேடி,
இன்றைய இயந்திர உலகில்
அநாதையாகிப் போனது
நிலா..

திருநங்கைகள்

சிவனும் தன்னில்
இடம் தந்தும்,
அற்ப மனிதரிடத்தில்

மனமில்லை எங்களுக்கு...

முதிர் கன்னி

பருவத்தில் பூப்பெய்து,
வயதில் காய்த்து,
திருமண வேலியிட்டு
கணவனுடன் கணிவோமென்ற
எண்ணிய எங்களுக்கு
இலவம் பஞ்சாய் வாழ்க்கை...
கிட்டத்தட்ட நாங்களும்
கருவறை இருந்தும்
மலடிகள் தாம்...

மறுமணம்

நீ இறந்ததும்
என்னை மறுமணம்
செய்திடச் சொல்கிறார்கள்
எனக்காகவும் நமது
குழந்தைகளுக்காகவும்...
எப்படியடி முடியும் என்னால்
நான் இறந்தால்
நீ செய்து கொள்ளாதா
மறுமணத்தை...

இரவல்

அன்னை இல்லாக் குழந்தையாய்
தாய்ப்பாலையும் இரவலாக
பசுவிடம் பெற்றதாலோ,
பாசமும் அப்படியே
கிடைத்திடுமா என்றே ஏக்கம்..

என் காதலின் அருமையான நிமிடங்கள்...

என் காதலின்
அருமையான நிமிடங்கள்...
எனது கரம் பிடித்தும்
உயிராய் நீ துடித்தும்,
உள்ளங்கை நடுவிலே
கோலமிட்டு காதல் சொல்கையில்,

எனது தோள் சாய்த்தும்
உன் மடியினில் தலை வைத்தும்,
என்னில் பலமாய் காதலை
வேரூன்றி இறக்கியதும்,

விரல்களின் சொடுக்கிற்கு ஈடாய்
உனது தலை அசைவுகளும்
கடுகளவும் கண்ணை விட்டு அகலாது...

காதோரம் படர்ந்த முடியினில்
என் விரல்கள் பயணிக்க,
பதிலுக்கு என் தலை கோத,
எனது சட்டை பொத்தானில்
விரல்களின் விளையாட்டும்,
தாவணி ஓரத்தின்
என் விரல் சுற்றுகளும்,

விரல், கரம், கன்னம் என
முத்தப் பயணம் தொடங்கி,
முத்தத்தின் பிறப்பிடமாய்
இதழ்களில் முடிய...

பிரியப் போகும் நேரத்தினை
முட்கள் ஆயுதமாய் மிரட்டிட,
மயக்கும் மோகினி சூடிய மலரா
அல்லது சூடிக்கொண்ட கூந்தலா
என்னும் குழப்பத்திலே,

அந்நொடி நடந்தவை எல்லாம்
உடனுக்குடன் இதயம்
நகலெடுத்துக் கொள்கிறது
நீயில்லாத் தனிமையில்
என்னை மிரட்டிட...

சந்தோசம்

உனது
அன்பின் அடையாளமாய்
தரும் முத்தத்தில்
பெருமிதம் கொள்கிறாய்
காதலில் அதிகமாய்
சந்தோசப் படுத்துவது
நீ என்ற எண்ணத்தில்...
எந்தன் அன்பின்
பிரதிபலிப்பாய்
உந்தன் முத்தத்தை
ஈடு செய்கிறேன்
என் உயிரின் உனக்காய்...
இப்பொழுது சொல்லடி
யாரை யாரடி
சந்தோசப் படுத்துவது...


காதல்

மௌனத்தின்
உச்சக்கட்ட ஒலியில்
உந்தன் காதல்
ஒலிபரப்பாகையில்,
ஊமையாகிப் போன
எந்தன் கண்ணீரின் ஒலியில்
காதலும் ஓசையின்றி
அடங்கிவிடுகிறது...

நினைவுகள்

உன் நினைவுகள் என்னை
பத்திரத்தோடு பாத்தியப்படுத்தி
சொந்தம் கொண்டாடி
களிக்கும் வேளையில்,
எனக்கான நினைவுகள்
அனாதையாய் உலாவுகிறது
அதனைச் சொந்தம் கொண்டாட
உந்தன் காதல் இன்றி...

தவிப்பு

நேரம் போவதே தெரியாமல்
உன்னிடம் பேசிக்கொண்டிருக்கும்,
காலம் மட்டும் புலப்படாமல்
தவிக்கிறேன் ஒரு தலைக் காதலில்...

Sunday, 26 June, 2011

உன்னுடன்

நான் நேசிக்கும் காதலும்
உன் நெருக்கமான ஸ்பரிசமும்
நீ தந்திடாமலே அதிகமாய்
என்னிடம் உரிமையாகக்
கொண்டிருக்கிறேன்
உன்னுடன் நான் வாழும்
நிழலுலகில்...

முடியவில்லை

முடியாத ஒன்றை
முடித்துக் காட்டும்
எந்தன் மனதிற்கு,
முடியா தொடர்கதையாய் ,
உன் காதலை எனக்குச்
சொந்தமாக்கிடவோ அல்லது
உன் நினைவுகளை
என்னிடம் அந்நியமாக்கிடவும்...

வண்ணம்

நம் காதல் கரை
படிந்து போன
எந்தன் வெள்ளை
மனச் சுவற்றில்,
எந்த வண்ணத்தை
தீட்டி மறைக்க...

Monday, 13 June, 2011

இதழ் முத்தம்

எனது
கருத்த நிறம் பார்த்து
ஏளனம் செய்த
மருதாணி பூசிய விரல்கள்
இன்று மருகிப் போய்
பார்க்கிறது அன்பே...
உன் இதழ் முத்தத்தில்
சிவந்து போன,
கன்னங்கள் பார்த்து...

முத்தம்

உனது
முத்தத்தில் சிவந்த
என் கன்னங்களைப் பார்த்து,
உள்ளத்திலே ஒரு கேள்வி...
உடல் மொத்தமும்
சிவப்பாகி விடலாமா
உன் முத்தத்திலே என்று...

அம்மா...

தாயை பற்றி
கவிதை எழுதக் கேட்டார்கள்...
...அம்மா...
இதை விட
வேறென்ன சொல்லிட..
மொழியின் முதல் எழுத்தை
கொண்டவளிடம் தான்
அனைத்தும் அடங்கிவிட்டதே...

ஏமாற்றம்

நிலவைக் காட்டி
சோறுட்டும்
அன்னையின் இடத்தில்,
உன்னைக் காட்டி
ஏமாற்றுகிறது
காதல்...

விழி

விழி திறந்து
பார்க்கையில் தான்
உயிர் பறிக்கிறாய் என்றால்,
விழி மூடியும்
உறக்கம் கெடுக்கிறது
உன் நினைவு...

காதலித்துப் பார்.

காதலித்துப் பார்.
உன் பின்பம் பார்த்தே
கண்ணாடி உடையுமென
சொன்ன கவிப்பேரரசு,
அவள் வார்த்தையில்
வாழ்க்கை உடையுமென
ஏனோ சொல்ல தவறிவிட்டார்...

அதிகம்

வெந்த புண்ணில்
விரல் பாய்ச்சி
சுகம் காணும்
மிருகங்கள் தான் அதிகம்
நான் வாழ்ந்த காட்டினுள்..

அல்லல்

நாய் பெற்ற
தெங்கம்பழமாய்
அல்லல் படுகிறது
எந்தன் இரவுகள்
உந்தன் நினைவுகளில்...

பிறை நிலவு

அங்கே பாரடி
நீ கடித்து துப்பிய
நகத்தினை,
தேவதை தந்த
பிறை நிலவென்று
எறும்புகள் கொண்டாடுவதை...

அனுமதிச் சீட்டு

இப்பொழுதெல்லாம்
காதல் பேருந்தில்
பயணம் செய்திட தேவைப்படும்
அனுமதிச் சீட்டு:
தூங்க இரவுகள்,
ஏமாற்றம் தாங்கும் இதயம்,
கண்ணீர் கண்களும்,
பிரிவையே பழக்கமாய்
ஏற்றுக் கொண்ட வாழ்க்கையும்....


வாழ்க்கை

ஏமாற்றங்களும்
தோல்விகளும்
இல்லாத வாழ்க்கை,
ரசிக்கும் இயற்க்கை இல்லா
வெறிச்சோடிய
சாலைப் பயணமானது...

காதல்

விசித்திர கால சக்கரம்
காதல்..

உன்னுடன் இருக்கும் நேரத்தில்
எதிர் காலம் யாவும்
நிமிடத்தில்
நிகழ்காலமாய் மாறிட,
நிகழ்காலங்கள்
நொடியில்
கடந்த காலமாய்
சுழன்று விடுகிறதே...

சுமை

சுமைகள்
சுகம் தானென்று
நம்பி வந்தேன் பெண்ணே..
உன்னை நானும்
சுமக்கையிலே...

அந்தச் சுகமே
இன்று சொல்லமுடியா
சுமையாகிப் போனதடி
நீ இன்றி தனியே
தவிக்கையிலே...

உடன்கட்டை

என்னோடு ஒன்றாக
உடன்கட்டை
ஏறினாய் இன்று,
நாம் ஒன்றாய் வாழ்ந்த
புகைப்பட சிதையில்..

ஆசை

குழந்தையின்
கன்னம் பார்த்தால்
கிள்ளி முத்தமிட தோன்றும்...
இங்கோ உனது
கன்னம் பார்த்து
முத்தமிடும் குழந்தையின்
ஆசையில்,
உன்னுடனே இருக்கும்
எனது ஆசையும்..

கொஞ்சல்

நீ கொஞ்சுகையில்
சிரித்து மகிழ்ந்திடும்
மழலையைப் பார்க்கையில்,
யார் யாரை
கொஞ்சுகிறார்கள் என்றே
தெரியவில்லையடி...

இன்பம்

உலகின்
மொத்த இன்பமும்
ஒரு சேர
எந்தன் கைகளில்,
என் காதலியாய்...
ஆனாலும் சில நேரம்
தவிக்கிறது
கூடுதல் இன்பத்திற்கு,
என் மகளையும்
சேர்த்து சுமந்திட...

மௌனம்

காத்திருந்து
காத்திருந்து
கால்கடுத்த வார்த்தைகள்,
காதலை
உன்னிடம் சொல்லாமலே
மௌனமாய்
ஓய்வெடுக்கிறது..

Sunday, 12 June, 2011

காதலோடு

யாருமற்ற தீவில்
சுற்றிலும் கடலாய்
உனது காதலில்,
குறையாத துவர்ப்பாய்
என் கண்ணீரிலும்..
நான்.. நான் மட்டும்...
இல்லை இல்லை
எனக்கான உன்மீதான
காதலோடும்...

வாழ்க்கை..

வாழ்க்கை.
முரண்பட்ட போராட்ட களம்...

இங்கு வென்றாலும்
மட்டம் தட்டி
குறை கூறிடும்
கூட்டமே அதிகம்...

தோல்விகள் மட்டும்
அதீத பாதுகாப்பாய்,
ஆயுதமும் கேடயமுமாய்
கொண்டு போரிடும்
நிராயுதபாணியான
உன்னிடம்...

தீர்க்க முடிவும்
அனுபவ அறிவும்
தெளிந்த எண்ணங்களும்
உனக்கான ஆயுதங்கள்...

உனது நிழலுமே
உனக்கு எதிரியாய்
மாறிடலாம்..

இங்கு எதிரிகளின்
ஆயுதம் மட்டும்
கூர்மை இல்லை...

தடுமாறும் பொழுது
ஏசிடும் விமர்சனங்கள்
அதைவிட கூர்மையே...

உனக்கான உதவியாய்
மூன்றாம் கையாய்
தன்னம்பிக்கை
கொண்டிருந்தால் மட்டுமே
வெளியேறும் வீரனாவாய்...

காதலில் நான்

என்னுள் நானே
எரிந்து உணர்கிறேன்
கண்ணீராய்...

மனமென்னும்
மெழுகுவர்த்தியில்
காதல் திரி,
ஏற்றப்படுகையில் மட்டும்,
சந்தோஷ வெளிச்சம் மறைந்து
இருள் சூழ்கிறது...

தனிமைப் பொழுதுகளில்
மிகச் சரியாய்
போகும் மினசாரமாய்,
தொலைந்து போய்கிறது
என்னிலையும்
சூழ்நிலையில் கருகும்
மகிழ்ச்சிகளையும்...

பசி பிய்த்து தின்ற
உடலில் இன்று
அகிம்சாவாதியாய் உருமாற்றம்...

முன் ஜாமினற்ற
பிடி வாரன்ட்டில்
தானாய் சரணடைந்த
ஆயுள் கைதியாய்....

காதல் ரோஜா

ஒவ்வொரு நாளும் தனிமையில்
தற்கொலை செய்து கொள்ளும்
எனது ஆயுளின் நாட்களை தானடி
உரமாக்கிக் கொண்டு ,
வளர்ந்து நிற்கிறது காதல் ரோஜா..
அதிலும் முரணாய்
உனக்கு வாசம் வீசி
புன்னகையோடு பூத்துக் குலுங்க,
எனக்குள் குத்தும் முட்களில்
புலன்காகிதத்தோடு..

நீ, நான்,

என்னை வாசித்தாய்
உனது பொழுது போகும்
காலத்திற்கு மட்டும்...
நானோ உன்னை
படித்து வைத்தேனடி
வாழ்ந்து முடிக்கும்
காலத்திற்கும்...

Saturday, 11 June, 2011

அடையாளம்

வலி கண்டு
பக்குப்பட்ட மனமே
வாழ்வின் முதல்
வெற்றியின் அடையாளம்...

மௌனம்

மரணத்தை நினைக்கையில்
கெக்கலித்து சிரித்த
மனம்,
உன் மௌனம்
நினைக்கையில்
செத்தே விடுகிறது...

பெண்ணின் மனது

ஆண்களின் சவக்குழி
ஆறு அடியாம்..
யார் சொன்னது...
வாருங்கள் அளக்கலாம்
பெண்ணின் மனதை..

பார்வை

என் இதயம் பதுக்கி
வைத்திருந்த பலூனில்
ஒரு சிறு துளியாய்
உன் பார்வை...

Thursday, 9 June, 2011

காதல்

உன் மீது
நான் கொண்ட காதலை
சொல்லிட தமிழில்
வார்த்தைகள் இல்லை...
வாடி அன்பே
வாழ்ந்து காட்டுகிறேன்..

Saturday, 4 June, 2011

மெய் மறக்கிறது

இன்னிசை நிகழ்ச்சியில் லயித்து
உனது தொடை தட்டி தாளமிட,
எனது கள்ள விழிகளோ
நீ சுத்திக்கு ஏற்ப
அசைக்கும் தலையையும்
தட்டும் கரத்தின்
அழகியலின் இசையில்
மெய் மறக்கிறது...

விரலும் காதல் கொண்ட கதை

கைப்பிடி இறுக்கத்தில்
எனைக் காத்து
உனது நகக்கண்ணும்
எனைப் பார்த்துக்
அக்கறை கொள்ள...

இறுக்கத்தின் சூட்டிலே
என்னுயிர் கரைந்து
உன் ரேகையில் வழிந்து
உன்னுயிர் சேர...

தொடுவானம் தூரம்
கரம் பற்றி,
காதல் கதை பேசி,
கொஞ்சும் மொழியில்
கால் வலியும் நோக....

பட்டாம் பூச்சியின்
சிறகு கடன்வாங்கி
அதன் பார்வையில்
நாம் கடந்த பாதையினை
படம் பிடித்திட...

உன் விரல்களும்
என் விரல்களும்
மணற்பரப்பில்
சடுகுடு வீரர்களாய்
பின்னிக் கொள்ள...

என் நெற்றி வகிட்டில்
விரல்கள் பயணம் தொடங்கி
உதட்டு பள்ளத்தில்
தடுமாறி விழுந்து
உதட்டுப் பல்லில் கடி வாங்க...

உனது விரலும்
என்னிடம் புரிந்த காதலை
என்னுயிர் போகையிலும்
உடன் கொண்டு செல்ல
உன்னோடு விருப்பமா?

நானற்ற நீயும்
நீயற்ற நானும்
இலக்கண மில்லா தமிழாய்..
பிரிந்து இருத்தல் ஆகாது...

Thursday, 2 June, 2011

மனம்

வெற்றி எனும் கானல் நீர் நிறைந்த
வாழ்க்கை பயணத்தில்,
தோல்விகளில் களைப்பாகிட,
அந்தக் கானல் நீரின் காட்சியிலே
என் தாகம் தீர்த்துக் கொள்ளும்
மனம் எனது...

என் காதல்

முப்பொழுதும் உனது கற்பனையிலே
கழியும் என் நிமிடங்களை
நொடிப் பொழுதேனும்
எண்ணிப் பார்ப்பாயா பெண்ணே...
விடிந்தால் உன்னை காண
அடைந்தால் உன்னோடு
கனவில் வாழ என
மாற்றமே இல்லா அட்டவணையில்
சென்று கொண்டிருக்கிறதடி அன்பே
எனது வாழ்க்கை பயணம்...
எப்பொழுது நீ ஏறும்
நிறுத்தம் வருமென்ற
ஏக்கங்கள் பலவோடும்,
வாலிப வயதின் சஞ்சலம் தவிர்த்து
உனக்கென ஒரு
உன்னதக் காதலோடும்
காத்துக் கொண்டிருக்கிறேன்...