Thursday, 29 December, 2011

உருமாறத் துடிக்கிறது

என்னை வைத்துக் கொண்டு
அடிக்கடி குழந்தையை கொஞ்சாதே...
உருமாறத் துடிக்கிறது
இதயம்...

நொறுங்கிப் போனது

உன்னைப் பார்க்காது
நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
இத்தனை நாட்களும்
நொறுங்கிப் போனது
உன்னைப் பிரிந்த
இத்தனை நாளில்...

கேள்விப்பட முடியா ஏக்கத்தில்...

ராசிப் பலனில்
உனக்கான மகிழ்ச்சிகளைப் பார்த்து
மனம் ஆறுகிறேன்.
உன் நலம் பற்றி
கேள்விப்பட முடியா ஏக்கத்தில்...

திணறுகிறது மனம்...

நான் பார்க்கையில்
குழந்தையோடு நிறகாதே
அடிக்கடி...
யாரைக் கொஞ்சுவதென்று
திணறுகிறது மனம்...

காதல்

என்னையே அதிகமாய்
உணர வைத்தது
உன் காதல்..

உன்னையே அதிகமாய்
எண்ண வைத்தது
உன் பிரிவு...

நீயற்ற வாழ்க்கை

இதழ் ஒட்டா
வாழ்க்கையாய்,
அர்த்தமற்று திரிகிறது
நீயற்ற வாழ்க்கை...

விடுமுறைப் பலகை

சந்தோஷங்களை
மொத்தமாய் குத்தகைக்கு
எடுத்திருந்த விடியலுக்கு முன்னால்,
இப்பொழுது எல்லாம்
விடுமுறைப் பலகை மட்டுமே
தொங்கவிட்டுச் செல்கிறது
உனது பிரிவு...

இறவாத ஆயுள்

உனது
நினைவுகளுக்கு மட்டும்
எப்படியடி கிடைத்தது
இறவாத ஆயுள்...

காதல் வேண்டும்...

இப்படி சண்டை
போட்டிடத்தான் காதலித்து
திருமணம் செய்தோமா
என்றென்னும் உள்ளங்களுக்கு
நடுவிலே,
இத்தனை நாட்களாய்
திருமணம் செய்துகொள்ளத்
தவறிவிட்டோமென தவிக்கும்
காதல் வேண்டும்...

முத்தத்தின் விடியல் வரை...

உனது வெட்கத்தின் எல்லைகள்
நெடுவானமாய்
நீண்டுகொண்டே இருக்கிறது
எனது முத்தத்தின்
விடியல் வரை...

கணவரோடு நீ வருகையில்...

உன்னைப் பார்த்திட
நாள் வாராதா என
சுற்றித் திரிந்த
நாட்கள் எத்தனையோ...

பல நாட்களுக்குப் பின்
இன்றுன்னைக் கண்டும்
காணாதவனாய் கடந்து செல்கிறேன்

கணவரோடு நீ வருகையில்...

திருநீறு

தெய்வத்திடம் வைத்து
தந்த திருநீறு இல்லை இவை,
என் தேவதை
இட்டுக் கொண்டு
மீதம் விட்டுச் சென்றது
என் நெற்றியில்...

அர்ச்சகன்

நானும்
அர்ச்சகனாகி விட்டேனடி
பொழுதும் உன்னை
என் கவிதையில் அர்ச்சித்ததில்...

அர்ச்சகன்

நானும்
அர்ச்சகனாகி விட்டேனடி
பொழுதும் உன்னை
என் கவிதையில் அர்ச்சித்ததில்...

கண்டுகொண்டேனடி

நான் பருவமடந்ததை
கண்டு கொண்டேனடி,
எத்தனையோ பெண்கள்
பார்த்து வராத காதல்
உன்னைப் பார்த்த மட்டிலும்
வந்த பொழுது...

வான் நோக்கியே இருப்பது

நீ வீதியில் இறங்கி
நடக்கையில் மட்டும்
ஊரார் பார்வை
மொய்த்துவிடுகிறது- ஆமாம்
எத்தனை நாட்கள் தான்
நிலவினை பார்க்க
வான் நோக்கியே இருப்பது..

புரண்டுக் கொண்டிருக்கிறது எந்தன் பக்கங்கள்...

நம் காதலைப் பற்றி
எழுதிட ஆரம்பிக்கையில்
ஆர்வத்துடன் துள்ளி நடையிட்டு
அணிவகுத்த வார்த்தைகள்,

கவிதையின் நீளம் கண்டு
மலைப்பில் சோர்ந்து,

ஓய்வெடுக்கச் சென்றதில்
வெள்ளைப் பக்கங்களாய்
புரண்டுக் கொண்டிருக்கிறது
எந்தன் பக்கங்கள்...

அணிலாகிறேன்...

உன் மேல் படர்ந்த
என் முதுகில்
உனது விரல் நகல்கள்
கீறீ கோடிடுகையில்,
உனைக் கடித்துண்ணும்
அணிலாகிறேன்...

வாசித்த மயக்கத்தில்

வாசித்த மயக்கத்தில்
இடம் மாறிக் கிடக்கிறது
வார்த்தைகள் அர்த்தமற்று,
நீ படித்த புத்தகத்தில்...

Wednesday, 28 December, 2011

மேற்கு திசை

எனக்கு மட்டுமே
மேற்கு திசையில்
சூரியன் உதிக்கின்றது...
அத்திசையில் தானே
உள்ளது அவள் வீடு...

Monday, 5 December, 2011

வந்திட ஏங்கும்

பட்டப் பகல் வேளையில்
கையில் மெழுகு கொண்டு
தேடிடும் பொருளாய்,
திரும்பி வந்திட ஏங்கும்
நப்பாசைக் காதல்...

படுக்கையின் புலம்பல்

எந்தன் படுக்கையும்
புலம்பித் தவிக்கிறது,
உறக்கமற்ற இரவுகளின்
புரளாதஒரு நாள்
வராதா என...

என் தூங்காத உறவுகள்

நிலவிற்கும்
இப்பொழுதெல்லாம் சந்தோசம்,
அதன் துணைக்கு நிற்கிறதாம்
எனது தூங்காத
இரவுகள்...

எப்படிச் சொல்வது

அசையாமல்
ஒரே இடத்தினில்
படுத்திருக்கும் காரணத்தால்,
ஓயாது உன்
நினைவுகளின் பின்னே
அலைந்து கொண்டிருக்கும்,
எனது இதயத்தை
எப்படிச் சொல்வது
முழுச் சோம்பேறி என...

நம்ப மறுக்கிறது இதயம்

வாழ்க்கை அடைத்த பலூனை
பிரிவென்னும் ஊசி கொண்டு
துளையிட்டு மெல்ல
உயிரினை வழியவிட்டத்தை
கண் பார்த்தாலும்,
நீ எனநம்ப மறுக்கிறது
இதயம்..

Saturday, 3 December, 2011

முட்களில் பூக்கும் ரோஜா

எல்லா முட்களிலும்
ரோஜாக்கள் பூப்பதாய்
ஏமாறும் இதயம்,
இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது
உனது காதல்
எனக்கு மட்டுமே என...

காதல் தவறவிட்ட என் வாழ்க்கை...

உடைந்து போன
கண்ணாடிச் சிதறல்களில்
ஒற்றை உருவம் காணத்தான்
அழுது தொலைக்கிறது
உன் காதல் தவறவிட்ட
என் வாழ்க்கை...

Friday, 2 December, 2011

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

நல்ல மாட்டிற்கு
ஒரு சூடு என்பார்கள்..
இங்கோ சுடுபடுவதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது
ஒரு நல்ல மாடும்
உன் வருகை பார்த்து
நிற்கும் நானும்...