Monday 29 August, 2011

அனாதையாய் சுற்றித் திரியும் வாழ்க்கை

உன்னோடு சேர்ந்து
வாழ நினைத்த
வாழ்க்கை நிமிடங்கள் யாவும்
அனாதையாகத் தான்
சுற்றித் திரிகிறது...

புன்னகைப் பொய் வேடமிட்ட
எந்தன் பகல் வேளை நொடிகள்,
அரிதாரம் களைத்து,
நிஜ முகத்தில்
உப்பு கரித்த கன்னத்தோடு..

நாம் சந்தித்துக் கொண்ட
சமயங்களை மிகச் சரியாய்
நினைவு படுத்தி சுழற்றுகிறது
தோலுரிக்கும் சாட்டையினை
எந்தன் மனம் உரிக்க...

நெற்றிப் பொட்டில் வைக்கப்பட்ட
துப்பாக்கி முனையில்,
கழிகிறது வாழ்நாட்கள்,
பட படப்பிலும்
கண்ணீரில் வெளியேறும்
உயிரின் பரிதவிப்பிலும்...

உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள்

உன்னோடு
நான் வாழ்ந்த காலங்கள்,
விடியாத இரவாய்
நீண்டு கொண்டே தான் இருக்கிறது...

பனி கொண்ட இலையாய்
உன் உமிழ் நீர் கண்ட
கன்னங்களின்
சொந்தக்காரனாய்
சிறு கர்வம்...

ஏழைக்கு கிடைத்த
பொன் முட்டையிடும் வாத்தாய்
என் ஒவ்வொரு நாளும்
உன் புன்னகையில்
செழித்து வளர்ந்த நாட்கள்...

உப்புக்கும் வைரத்திற்கும்
வித்தியாசம் அறியாதவனிடம்
சிக்கிய வைரமாய்
உன் உண்மைக் காதல்...

உன் கன்னம்
பிய்த்து தின்று பசியாறி,
வருடல்களில் தொடங்கி
முத்த வார்ப்புகளில்
முடிந்த நாளிகைகள்...

உன் தெற்றுப்பல் சிரிப்பிற்காக
எண்பது வயதில் நீ சிரிக்கும்
பொக்கை வாய் சிரிப்பை
சிரித்துக் காட்டிட,
உன் சிரிப்பு அடங்க
ஆகிடும் நிமிடங்கள்...

உன்னுடன் கழிந்த
எனக்கான வாழ்க்கை யாவும்
கடலில் சேர்ந்த நதியாய்
உப்புக் கரித்தாலும்,
உயிர் வாழும் மீனாக
நீந்திக் கொண்டிருக்கிறது
மீதமுள்ள வாழ்க்கை...

மடிக்கப்படும் போர்வை

அர்த்த ராத்திரியில்
அர்த்தமற்ற நினைவுகள் வியாப்பிக்க,
வியர்வைப் பூக்கள்
மெல்ல எட்டிப் பார்க்கும்...

நொடி முள்ளின்
கட்டாய புரந்தள்ளல்களில்
வெறுமையோடு
நகரும் நிமிடங்கள்...

கண்கள் இறுக
மூடிப் படுத்தாலும்,
வெற்று திசையில்
நிலை குத்தும் பார்வை...

வடிந்து போகும் வடிகாலும்
தலை அமிழ்த்தி
மூழ்கிக் கிடக்கும்
கண்ணீரில்...

என் தூக்கமற்ற
இரவின் அடையாளமாய்
உடலின் அசைவுகளில்,
புரண்ட தடயங்களில்,
கசங்கிப் போன போர்வை
மடிக்கப்படுகிறது
என் மறுநாளுக்கான
உறக்கத்திற்கு...

Saturday 27 August, 2011

கண்டுகொண்டது காதல்

எதிர்பார்க்கும் பொழுதெல்லாம்
தேவையற்றுப் போய்,
பின் எதிர்பாரா நேரம்
கண்ணீரில் அமிழ்த்தும்
உந்தன் அழைப்புகளிலும்...

நெருங்கி கன்னம் கவ்விட
வரும் வேளைகளில் விலகி,
பின் நீயெனக்குத் தரும்
முத்தங்களிலும்...

வெறிச்சோடிய பொழுதுகளில்
நொடிகள் கடத்த,
அழைப்பின்றி கிறுக்கிடும்
உன் பெயர்களிலும்,

இரண்டு மணி நேரம்
உடனிருந்தது எல்லாம்
என் காதல் பசிக்குப்
போதவில்லை என
கிளம்பிடும் முன்
தலை திருப்பல்களிலும்...

எனக்கான உன் காதல்
பிரதிபலித்த அழகை
கண்டுவிட்டது அன்பே
சந்தோசக் கண்ணீரில்
நம் காதல்....

Friday 26 August, 2011

கனவுப் பட்டறை

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவாய்
உற்பத்தி செய்திடும்
அந்தப் பட்டறை...

கூரான கனவுகளால்
தினம் தினம் என்னை
பதம் பார்த்துச் செல்லும்...

அதன் நினைவை
கண்கள் ஓரம்
கண்ணீர் தடம்
விடுத்துச் செல்லும்...

என்னுயிர் பருகிட
புதுப் புது உருவில்,
என் காதலியாய்,
நெருங்கி அமர்ந்திடும் வேளையாய்,
தாலி கட்டிடும் தருணமாய்,
வாரிசு தந்திடும்
பிறப்பின் நேரமாய்,
ஒவ்வொரு அரிதாரம் கொண்டு
என்னை மயக்கும்...

நிரந்தரமில்லை
எனத் தெரிந்தும்
நிஜமாகத் தோன்றும்...

சில நேரம்
நிஜமாகிப் போனதாய்
மதி மயக்கும்...

என்னோடு
நீ இருந்த பொழுது
தலையில் வைத்து
கொண்டாடி,

இன்று ஏன் வரவில்லை என
உரிமைக் கேள்வி தொடுத்த
கனவுகளை,

நீயற்ற நாட்களில்
இரவின் பிடியில் சிக்கிடுகையில்
தற்கொலை செய்யக் கேட்கிறேன்...

சில நேரம்
கனவுகளை கொலை செய்ய
தைரியமும் இன்றி,
கனவுகள் தரும்
வலிகளைத் தடுக்கும்
வழி தெரிந்திடாமல்,
உறக்கமற்ற
இரவினைத் தேடுகிறேன்...

வாழ்க்கை

மரணமென்னும்
வெற்றிக் கோப்பை பெற
நடக்கும் மராத்தான் போட்டி...

கேள்விகள்

கேள்விகள் தான்
சாவிகலாம் - ஆனால்
உன்னிடம் கேட்டும்
திறக்கப் படா
உன் மனம்,,,

ஏமாறும் என் இதயம்...

ஆலமரம் சுற்றி வந்து
அடிவாயிற்றை
தொட்டுப் பார்க்கும்
பெண்ணின் நிலை தானடி,
உன் அழைப்பை
எதிர் பார்த்து ஏமாறும்
என் இதயம்...

அலாரம்

நீயில்லா நேரத்தில்
உறங்கிக் கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு அலாரமே
உன் வலையலோசையும்
கொலுசொலியும் தாண்டி...

அவுட் ஆப் கவரேஜ்

உன் தொடர்பின்றி
சோகமென்னும்
அவுட் ஆப் கவரேஜில்
இருந்த என் மனம்,
உன் ஒரு மிஸ் காலில்
சந்தோசக் கவரேஜுக்கு
வருவதெப்படி....

சுகமெனக்கு...

ஓராயிரம்
இன்கம்மிங் கால்கள்
சுகமில்லை எனக்கு..
கண்மணியின்
ஒரு மிஸ் கால் போல்...

மிஸ் கால்

உன் எண்ணில் இருந்து வந்த
ஒரு மிஸ் காலில் தான்
மிஸ் ஆகாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என் காதல்...

காண்கரீட் காடுகள்

விளை நிலங்களில்
உரமிட்டு பயிர் வளர்த்த
காலம் போய்,
பணமிட்டு வளர்க்கிறார்கள்
காண்கரீட் காடுகளை...

வேதனை கொடுமையடி...

உறக்கம் தவிர்க்கும்
பழக்கம் கேட்கிறேன்..
பகலின் நீயின்றி வாழும்
வேதனையை விட,
கனவில் உன்னுடன்
சேர்ந்து வாழ்ந்து,
விடிந்ததும் பிரியும்
வேதனை கொடுமையடி...

துறக்க முடியாத விரக்தியில்...

நாமிருவரும்
ஒன்றாய் இருந்த இடங்களுக்கு
செல்ல மறுக்கிறேன்.

நம் காதல் நினைவில்
மூழ்கி, மூச்சிரைத்து இதயம்
உயிர் துறப்பதைத் தவிர்க்க..

நீ என்னுடன்
ஒன்றாய் பயணித்த
வாழ்க்கையை துறக்க முடியாத
விரக்தியில்...

உன் மௌனத்தில்

இரண்டடி தூரத்தில்
நீ இருந்தும்
எங்கோ தொலைவாய்.
உன் மௌனத்தில்...

Tuesday 23 August, 2011

உனக்கான என் காதல்....

சுவற்றின் புள்ளியிலே
வெறிச்சோடிப் போன
என் பார்வைகள்...

சில நொடி மகிழ்ச்சிக்கு
ஏங்கி ஏங்கி விரக்தியில்
வெறுத்துப் போன மனம்...

தகித்துப் போன
உந்தன் பார்வையில்
வியர்வையாய் வெளியேறிய
எந்தன் தைரியம்....

ஒவ்வொரு முகமாய்
தன் தாய் தேடும் பறவையாய்,
உன் வருகை காணும்
என் நாட்கள்....

உன் நினைவுகள்
தின்று தீர்த்தத்தில் மிச்சமாய்,
உருவமற்று கிடக்கும்
உனக்கான என் காதல்....

திருப்பப் படும் இரவுகள்

இரவின் மையூற்றி
எழுதப்படும் இரவுகள்,
பெரும்பாலும்
படிக்கப்படாமலே
திருப்பப் படுகிறது
விடியலில்...

Tuesday 2 August, 2011

நான் - என் காதலில்

முரண்பட்ட அந்தி இரவு முழிப்பு,
உண்ணாவிரதம் இருக்கும் பசி,
கவிதையாகும் கிறுக்கல்கள்,
இடைவெளி இல்லாத நினைவு
அதில் பனிக்கட்டியாய் கரையும் நேரம்,
விரும்பி ஏற்கும் தனிமை,
நிழலும் துணை இல்லா
இடத்திலும் தனியாய் சிரிப்பு,
காணத் துடிக்கும் முகம்,
சொல்லிடத் துடிக்கும் காதல்
கண்டுவிட்டால் தொண்டைக்குழியில் சிக்கிடும்,
என் நிலையும் மறந்து
உன்னை பற்றி ஓடும் காட்சி,
உனக்குப் பிடித்தவைகள்
எனக்கும் பிடித்தவையாய் இடமாற்றம்,
கண்டிடும் பெண்டிரும் உன் சாயலில்,
உறக்கங்களை பட்டா எழுதிக்கொண்ட
உன் நினைவுகளுடன்,
தேர்தலின் தோற்ற வேட்பாளரை
எந்தன் நிஜங்கள்...

முத்தச் சுவை

நான் முத்தம் தந்த கன்னத்தை
உடனே துடைத்துவிட்டாள்...
என்னவென்று கேட்கையில்
உன் எச்சிலின் சுவை
எறும்பு, தேனிக்கு இல்லை,
எனக்கு மட்டுமே சொந்தமென
மறு கன்னம் காட்டினாள்....
சரி எதற்கு வீண் செய்ய என்று
காட்டிய கன்னம் புறம்தள்ளி
இதழ் பற்றினேன்..
அவள் மட்டுமே சுவைத்திட...

கன்னப் பூ

என் கன்னமும்
மலராகிப் போனதடி,
தேனிக்களும் தேடிடும்
உன் முத்த எச்சில் பட்டதால்...

தாகம்

தாகம் குறைக்க
தண்ணீர் பருகலாம்.
இங்கோ என் விழியால்
காதல் நீர்வீழ்ச்சி
உன்னை அப்படியே பருகினாலும்
அடங்க மறுக்கிறது
என் காதல் தாகம்...

ஊற்று

கர்வத்தோடு
தேடிக் கொண்டிருக்கிறேன்
ஆயுள் முழுவதும்
குறையாத ஊற்றை...
என்னுள் ஊறும்
அவளது நினைவு ஊற்றைப் போல...

அராஜகம் செய்திடும் நினைவுகள்

நேரம் காலம் தெரிந்திடாமல்
அனுமதியின்றி உள்ளே வந்து,
அராஜகம் செய்திடும் உந்தன்
மௌனப் போராட்டத்தில்,
உன் நிஜமற்ற நினைவுகளால்
அடிக்கடி வெளியேற்றப்படும்
என் நிஜங்கள்...

என்றும் உன் நினைவுகளுடன்

எத்தனை முறை எச்சிலில்
கன்னம் நனையத் தந்தாலும்
மீண்டும் மீண்டும்
கெஞ்சிக் கேட்கிறது இதயம்...

என் கேசம் களைத்து
விளையாடும் உரிமை
உனக்கு மட்டுமே என
மாற்றிக் கொண்டாய்...

கண்கள் மூடி
கண்ணடித்து இதயம்
கொள்ளை இடுகையில்,
காவல் நிலையம் சென்று
புகார் தரவும் மனமில்லை...

தனியே விட்டுச் செல்கையில்
கண்ணில் பனிக்கும் கண்ணீரில்
இதயம் கனத்துப் போகிறது...

உணவூட்டும் வேளையில்
பற்களில் சிக்கிய
விரல் கடித்து சிரிக்கையில்,
வலி மாறி சுகம் தானெனக்கு...

உன் உதட்டில் வழியும்
பருக்கையின் வருகை கேட்கும்
எந்தன் நாவும்...

மனம் சில நேரம்
தடம் மாறிப் போகையில்...
உன் நினைவுகள் நிலையாக்கி
ஒருவழிப் படுத்துகிறது...

அரைகுறை ஆடையணிந்து
உன் கொள்ளை அழகை
பார்த்து ரசிக்க அடிக்கடி
மனம் ஏங்குகிறது...

உன் விரல் பிடித்தே
நகர்வலம் வந்திடவும்
எந்நேரமும் தயாராக
எந்தன் பாதைகள்...

உன்னைப் பற்றி
சொல்லிட வேண்டுமாயின்
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிகளும்
வரிகளாய் மாறிக்கொண்டே
தானிருக்கும்...

என்றும் உன் நினைவுகளுடன்
உன் தந்தை....

கண்ணீர்

நீயென்னை
தனியே விடுத்துச் சென்றதும்
என் நிலை கண்டு,
நான் உயிரோடு வாழ்வதை
உலகிற்கு உணர்த்தியது
என் கண்ணீர்...

பொம்மையாகிப் போகிறேன்...

உனக்குப் பிடித்த
பொம்மையாகிப் போகிறேன் அன்பே...
தனிமையில் இருக்கும் நேரம்
உன் கரம் பட்டு உயிர்த்தெழுந்து
காதல் விளையாட்டு கொண்டு,
நீயில்லா நேரம்
உயிரற்றுப் போக...

கற்பூரம்

சொல்லப்போனால்
எனது ஆண்மையும்
கற்பூரம் தான்...
உன் பார்வையில்
எரிய ஆரம்பித்து
தடயம் இன்றி
எரிந்து போவதில்...

காதல் நெடுந்தொடர்

வாழ்க்கைத் தொலைக்காட்சியில்
ஓடிடும் என் காதலும்
கிட்டத்தட்ட நெடுந்தொடர் தான்...
முடிவே தெரியாமல்
நாட்கள் ஓடிக்கொண்டிருக்க,
கண்ணீர் மட்டும்
உறுதியாய் தினம் தினம்...