Sunday 17 June, 2012

உன் அருகாமை இன்றி

எல்லாமிருந்தும்
சொர்க்கத்தின் அருமை
தெரியவில்லையடி
உன் அருகாமை இன்றி...

எங்கே நீ...

எங்கேயடி நீ.
எனக்காக பிறந்தவள் நீ எங்கே.

என் தோள் சாயாமல்

தலையணை சாய்ந்திருக்கும் நீ எங்கே..

கார் கூந்தல் போர்வையில்

என்னை மறைத்திடும் நீ எங்கே...

முதல் முறை

பருவம் வந்த குழந்தையாய்
நான் தரப் போகும்
முத்தம் பெறும் நீ எங்கே...

நான் தந்திடும் காத்திருப்புகளில்

இன்பம் காணப்போகும்
என் இதயம் நீ எங்கே...

என் தோழிக்கும் அன்னைக்கும்

இடைப்பட்ட உறவைக் காட்டிடும்
புது உறவு நீ எங்கே...

என் முக பாவங்களில்

உன் செயல் காட்டிடும்
என் பிம்பம் நீ எங்கே...

எனக்காய் சேர்த்து வைத்த

செல்லக் கோப புதையல் நீ எங்கே...

கண்ணோடு உனை காணாமலும்

நெஞ்சோடு அணைக்காது வேளையிலும்
நான் தேடும் நீ எங்கே...

என் பகலின் காதலாய்

இரவின் காமமாய்
முரண்பட்ட குவியல் நீ எங்கே..

உனது அழகையும்,

எனது அறிவையும்
அச்சில் வார்த்து வரும்
வாரிசு தரும் நீ எங்கே...

சீக்கரம் வாடி அன்பே

உன்னில் கரைந்து
என் வாழ்வின் அர்த்தம்
முழுமையடைய

உனக்காய் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு

காதலின் வாக்கியத்திலே
நம் வாழ்வும் முடிந்திட
காத்திருக்கும் உன்னவன்.

மறைக்கும் பழக்கம்

பெண்களிடம்
மறைக்கும் பழக்கம் அதிகமென
பலபேர் சொல்லக் கேட்டுள்ளேன்.
ஆனால் இன்று தான்
புரிந்து கொண்டேன் தாயே
குடிகார தந்தையிடம் மறைத்து
எனக்காய் சேர்த்து வைத்த
திருமண நகைகளில்...

கண்டிடாத இடம் செல்ல

உன்னை கண்டிடாத இடத்திற்கு
சென்றிட வேண்டுமென
ஆசை பட்டேனடி..
கண் காணாமல் போனாலும்
அது நடந்திடாதென,
கனவிலும் உன் பிம்பம் தந்து
வெறுப்பேற்றுகிறது காதல்...

இரவுகள் கவிழ்த்திய நினைவுகள்

இருள் போர்வைகள் போர்த்திய
என் இரவினில் மட்டும்
ஒளி அடித்துக் காட்டுகிறது
தனிமை தந்த நிலவு.

இலை விரித்ததும் வந்தமரும்

பெரும் பசி கொண்ட மனிதனாய்
வந்து அமர்கிறது
உனது எண்ணங்கள்
என் படுக்கை விரித்ததும்...

தீர்ப்பு சொல்ல வேண்டிய

காதலும் என் மீது சுமத்துகிறது
ஆயுள் முழுவதிற்குமான
இரவு தண்டனையினை...

அழும் குழந்தையின்

பசியினை தீர்க்கும் பாலினை
கவிழ்த்துக் கொட்டிய பூனையாய்
எனது இரவுகள் கவிழ்த்திய
உன் நினைவுகள்...

தேடிட வைக்கிறான் இறைவன்

அளவில் பெரிய பூந்தோட்டத்தில்
அழகிய வண்ணத்துப் பூச்சியை
தேடுவதே பெரும்பாடாய் இருக்க,
உன்னைப் போலொரு அழகு ரோஜாவை
தேடிட வைக்கிறான் இறைவன்
இந்த நிஜ உலகில்
உன்னை தொலைத்த என்னை...

நீயும், நானும்...

வெயில் தாங்கி
குளிர் தாங்கிடாத
என் உடலுக்கு
நிம்மதி உறக்கம் தரும்
இரவினில் நான் போர்த்தும்
கம்பளி போர்வை நீ,,,

பெருமை பொங்க

உன்னை அழகுபடுத்த
பகலில் நீ உடுத்தும்
பட்டுச் சேலை நான்..

நினைவின்றியே முடிந்து போகிறது

என்ன பேசுவதென்றே
தெரிந்திடாமல் தொடங்கப்பட்ட
நம் பேச்சுக்கள்,
என்ன பேசினோம்
என நினைவின்றியே
முடிந்து போகிறது...

இதழுக்கான அடைமழை

வறண்டு போன
என் இதழுக்கான
அடைமழை
உன் அருகாமை...

வலியும், ஆனந்தமும் ஒரு சேர

பட்டுப் போன மரத்தின்
விழுந்துடப் போகும்
கடைசி இலையின் வலியும்,
துளிர்க்கும்
முதல் இலையின் ஆனந்தமும்
ஒரு சேர
உன் காதல் பார்வையில்..

உன்னை கரம் காட்டுகிறது

அன்பிற்கான
அர்த்தம் தேடுகையில்
உன்னை நோக்கி
கரம் காட்டுகிறது
அகராதி.

குத்திடும் முட்களின் சுகம்

என்னை முத்தமிடுகையில்
கன்னம் குத்திடும்
உன் உரோமங்களில்,
ரோஜாவினை குத்திடும்
முட்களின் சுகம் கண்டேனடா...

நீ...

பலவற்றிற்கு
ஓரே பொருள் கொண்ட
என் தமிழிற்கு அடுத்து
நீ...

மீளுகிறேன் நான்...

கடும் வெயிலுக்கு
பட்ட மரத்தினடியில்
ஒதுங்கிய பொழுது தானடி
கண்டுகொண்டேன்,
உன்னை இழந்து
பட்ட மரமான என்னில்
வாழும் குடும்பத்தின் தவிப்பை.
மீளுகிறேன் தளிர்க்க,
எனக்காய் அன்றி
என்னுள் ஒதுங்கிய
குடும்ப நெஞ்சங்களுக்காய்..

நீயின்றி பயணம்

நமக்குப் பிடித்த இள மாலை
நமக்குப் பிடித்த குளிர் வேளை
நமக்குப் பிடித்த வெயில் மறைத்த மேகம்,
நமக்குப் பிடித்த நீர் கோர்த்த காற்று
நமக்குப் பிடித்த மண் வாசனை,
நமக்குப் பிடித்த ஊசிச் சாரல்,
நமக்குப் பிடித்த நுழைவு வாயில் வானவில், 

நமக்குப் பிடித்த மணல் நடுவே தார் சாலை,
நமக்குப் பிடித்த கை கோர்த்த தனிமைப் பயணம்
நமக்குப் பிடித்த காதலோடு
உனக்குப் பிடித்த நான்
எனக்குப் பிடித்த உன்னை
எண்ணியபடியே பயணம் நீயின்றி...

காதல்

பாதுகாக்கப் பட வேண்டிய
காதல் - இன்று
கடற்கரை, பூங்கா சந்தைகளில்,
ஓசையின்றி விற்கப்படுகிறது,
பார்க்கும் வாடிக்கையாளரின்
முகம் சுளிக்க வைத்தும்,
இனிமேல் வாங்க எண்ணிடாத
எண்ணம் வளர்க்கும் வகையில்...

தலைப்பில் நீ..

தலைப்பினுள்
அடைபட்டுக்கிடக்கும் கவிதையாய்,
அடை பட்டுக்கிடக்கிறது
என் வாழ்க்கை உன்னில்.
 

மொத்த கவிதைக்கான
முகவரியாய்,
என் வாழ்க்கைக்கான
தலைப்பில் நீ..

பட்டால் தானா?

காதல் திருமணத்தின்
சந்தோசங்களை எல்லாம்
அனுபவித்திடாமலே
எழுதுகிறேன் கவிதையில்,
உன்னுடன் வாழ்ந்த
காதல் பூரிப்பிலே...

என் கல்லூரி நினைவுகள்.


மஞ்சள் வெயில் மாலையில்
நனைந்து கொண்டே
ஏதோ ஒன்றினை
தொலைத்த தவிப்பினில்,
இன்னதென்று சொல்ல முடிந்திடாத
நெருடல் நெஞ்சினுள்...

படபடப்பும்
வலியும் ஒரு சேர
இதயம் கவ்விக் கொள்கிறது.

இயக்கமில்லா இயந்திரமாய்
செயலற்று நிற்கிறது இதயம்.

உன்னைப் பார்த்த
முதல் நாளிலிருந்த பயம்
இப்பொழுதும் அப்படியே
உன்னைப் பிரிவதிலும்…

உன்னால் கிடைத்த
நட்புகளும், அன்புகளும்
அவ்வளவு தானாவென கேட்டவாறே
கண்களை கண்ணீர் மூடுகிறது
கடைசி நேரத்தினை...

எத்தனையோ முறை
உன்னில் தலை சாய்த்து
என் சோர்வு களைந்துள்ளேன்.

வெற்றி பெற்ற நேரங்களில்
காலடியில் முத்தமிட்டு
உன்னை கட்டி அணைத்துள்ளேன்...

முதன் முதலாய்
தாய் பிரிந்து பள்ளி செல்லும்
பிள்ளையின் பிரிவும் அழுகையும்
மொத்தமாய் உனை விடுத்து
இல்லம் செல்லுகையில்...

தொலைக்கப்பட்ட
குழந்தையின் அரற்றல்
என்னை நீ புறம் தள்ளுகையில்..

பிரிந்து விடாதே என
கெஞ்சிக் கதறுகையில்
வழிந்த கண்ணீர் துளிகள்
இன்னும் உன் காலடியில் தான்
சிந்திக் கிடக்கிறது...

என்னை விட உனக்கு
நேற்று வந்தவன்
முக்கியமாகிப் போனதை
எண்ணுகையில் தான்
தாங்கிட முடியாத வலி.

உன் பாதம் பதித்த முத்தங்களும்
உன் பெருமை கூறும் கவிதைகளும்
மர பெஞ்சுகளும், சுவர்களும்
தாங்கிய என் பெயர்கள் தான்
என் காதலை உன்னிடம் சொல்லும்
கடைசி சாட்சியங்கள்.

என்ன சொல்லி
என்ன ஆகப்போகிறது
நீ வேறு நான் வேறு
என்றாகிவிட்ட பின்.

உண்மைகளை எனக்குணர்த்தி
உன்னை மீண்டும் பெற இயலாத
ஆறாத் துயரில்,
அவ்வப்போது என்னில்
எழும் உன் நினைவுகள்
என்னைப் பதம் பார்க்கையில்
பார்த்துக் கொள்கிறேன் உன்னை
நிழற்படத்தினை...