Friday, 29 July, 2011

காதல் கோட்டை

காகிதத்தில்
கோட்டை கட்டினேன் என்றால்
சிரிக்கிறார்கள்...
என் காதலை
காகிதத்தில் எழுதி தானே
காதல் கோட்டையை
கட்டினேன் எனத் தெரியாமல்...

என்னடி கொடுத்தாய்

என்னுடன் இருந்து
கிளம்புகையில்
முத்தம் தருவாயடி,
மறுமுறை சந்திக்கும் வரை
நினைவு வேண்டுமென்று...
இப்படி ஒட்டுமொத்தமாய்
என்னைப் பிரிய
என்னடி கொடுத்தாய்...

சுனை

வற்றிடும் சுனையினை
யாரும் கேட்பதில்லை,
என் கண்ணின் சுனை
கண்ணீர் வற்ற வேண்டிடும்
என்னைப் போல...

உறக்கம்

நீ அங்கு விளக்கணைத்து
சுகமாய் உறங்கிட,
இங்கோ எனது
உறக்கம் அணைத்தது,
எரிய ஆரம்பிக்கிறது
உந்தன் நினைவு...

காற்று

மூச்சு முட்டிட
இறுக்க பற்றிய அணைப்பில்,
ரொம்பவே
திணறித் தாண்டி போனது
காற்றும்...

இதயம்

இருக்க பிடித்தபடி
என்பின்னால் நீ அமர்ந்து,
முன்னால் நான் வண்டி ஓட்ட,
என் இதயம் மட்டும்
பின் திரும்பி,
உன் இதயத்திடம் தனியே
காதல் கொஞ்சுகிரதடி...

நீயற்ற வாழ்நாள்

மலை ஏறும்
முதியவனாய்
செயலற்று ஊருகிறது
என் நெஞ்சம்,
நீ அற்ற மீதமுள்ள
வாழ்நாளைக் கழிக்க...

பொக்கிஷம்

நீ தூக்கி எறிந்த
பொருட்கள் எல்லாம்
பொக்கிசமாய் என்னிடம்...
அந்த வரிசையில்
அன்பும் காதலும் மட்டுமே
நிறைந்த என் இதயம்
வருங்கால துணைவிக்கு...

பெயர்

என பெயர் சொல்லி அழைக்க
ஆயிரம் பேர் உண்டடி...
பெற்றவருக்கு பிறகு
எனக்கென பெயர் வைத்த
அழைக்க நீ மட்டுமே...

முத்தம்

ஓரே ஒரு முத்தம் கேட்டிட
விறைப்பாய் முறைத்தாய்...
ஏன் மறுக்கிறாள் என
எண்ணிய என்னிடம்,
முத்தத்தில் என்னடா
ஒருமை பன்மை என்று
மொத்தமாய்
கொட்டித் தீர்த்தாள்
முத்த மழையை...

ஆதி.. அந்தம்

ஆதி என்றால்
அந்தம் நிச்சயம்...
விடாமல் துரத்தும்
உன் நினைவுகளுக்கு மட்டும்
ஏனடி முடிவின்றி
நீளுகிறது...

உன் வருகை தேடி

திருவிழாவில்
கடை விரித்து
ஒன்றுமே விற்காமல்
ஏமாற்றம் கொண்ட
வியாபாரியாய்,
உன் வருகை தேடி
ஓய்ந்து போன நான்...

கண்ணீர்

உன் வருகை காண
அங்கும் இங்கும் அலைந்து
ஏமாந்து, களைத்து,
வியர்வையாய் வெளியேற்றுகிறது
கண்ணீர்...

அப்பா..

எனது அசல்.
முதல் நாயகன்.
டா சொல்லா தோழன்.
வாழ்க்கை கற்பித்த ஆசான்.
கண்டிப்பு காட்டும் தாய்.
பாசம் மறைக்கும் நடிகன்.
தன்னம்பிக்கை தந்த விதை.
வளர்ச்சிக்கு உரமிட்ட உழைப்பாளி.
அனுபவ நிழல் தரும் ஆலமரம்.
முகத்தின் நேரில் திட்டி
முதுகின் பின்னால் பாராட்டும் விமர்சகன்.
தாய் பாசத்தில் கண்டுக்கப்படா பொக்கிஷம்.

சுயநலக்காரி

நீயும் ஒரு
சுயநலக்காரி தான் தாயே..
உன் உயிர் தந்து,
அன்பும், இரக்கமும்
மட்டும்
உன்னளவு
முழுமையாய் தந்திடாமல்...

Thursday, 28 July, 2011

என்ன செய்ய

உன்னை ஞாபகப் படுத்தும்
ஒவ்வொன்றிலும் இருந்து
விலகி இருந்து
மறக்கச் சொல்கிறார்கள்...
உன்னையே எண்ணி
நொடிகளாய் துடிக்கும்
என் இதயத்தை
என்ன செய்திட...

வண்ணத்துப்பூச்சி என நம்பி..

அங்கே பாரடி
பூக்கள் யாவும்
ஆர்வமாய் தேன் தர
பூத்திருக்க - உன்னை
வண்ணத்துப் பூச்சியென நம்பி...
உனது கண்ணிமையின் படபடப்பில்...

காதல்

ஒவ்வொரு முறையிலான
ஓரப் பார்வையில்
என்னுயிர் வெளியேற்ற...

என் உடல் நீ கடந்து
என்னருகில் நடக்கையில்,
என்னுயிர் உடல் விலகி
உன்னுடன் நடை பழக...

தட்டில் சோறிட்டும்,
வயிற்ருக்கு தண்ணி காட்டி
உன் நினைவில்
விரல்கள் கோலமிட,

படுக்கை விரித்து
தூங்க ஒத்திகை காட்டி
உறக்கத்தை ஏமாற்ற...

எதிரே நீ வர
தைரியமாய் நானும்,
கனவில் மட்டும்
சிரித்து பேச...

தெனாவட்டும்
துடுக்குப் பேச்சும்
உன்னிடம் மட்டும்
வாலைச் சுருட்ட...

தனிமையின் எதிரி
இன்று ரசிகனாய்...

நிஜமில்லை எனத் தெரிந்தும்
நினைவுகளோடு நேசம்...

உன் பெயர் கொண்ட
குழந்தையிடம் அலாதி பிரியம்...
இன்னும் சொல்லப் போனால்
மழலையின் முத்தம்
உன்னதாய் தெரியும்...

இதுவெல்லாம்
காதலின் அடையாளமோ...
இல்லை என் இதயத்தை
உரிமை கொண்டதற்கு
நீ தரும் பட்டா பத்திரமா....

தினம் தினம்
உன் ஓரப் பார்வையில்
கல்லூன்றி செல்லடி...
என் இதயத்தை
வேலிட்டுக் காக்கிறேன்
உன் காதல் காலடி
என் மீது படுவதற்கு...

என்னை மன்னித்துவிடு அன்பே..

என்னை மன்னித்துவிடு..

மூன்று நேரமும்
உணவருந்தச் சொல்வாய்
நேரத்திற்கு - இன்றோ
பசியினை மட்டும்
உணவாய்க் கொண்டிருக்கிறது
எந்தன் வயிறு...

என்னை மன்னித்துவிடு..

இரண்டு விரலில்
பணத்தை கொடுத்தால்
திட்டிவிட்டு முறைப்பாய்...
இன்றும் அப்படியே
கொடுக்கிறது விரல்கள்
உன் திட்டல்கள் வேண்டி...

என்னை மன்னித்துவிடு..

நேரத்திற்கு உறக்கம்
கொள்ளச் சொல்வாய்..
இருள் பரவத் தொடங்கினாலும்
எனக்கு மட்டும்
விடியலாய் விழிப்பு...

என்னை மன்னித்துவிடு..

வெயிலில்
அலையாதே என்பாய்..
வெயிலின் சூட்டிலாவது
என்னுயிர் என்னிடம் தான்
உள்ளதென்று உரைக்கட்டுமென்று
திரிகிறேன் அன்பே....

என்னை மன்னித்துவிடு..

பிறர் பொருள்
நமக்கு எதற்கென்று
சொல்வாயடி - இன்று
உன் கணவருக்குச் சொந்தமான
உன் மீதான காதலும்,
நினைவுகளும்
என்னிடம் உள்ளதடி...

என்னை மன்னித்துவிடு..

திட்டு

என் நினைப்பே
இல்லையா எனத் திட்டிடுவாய்...
இன்று
உன் நினைவிலே வாழும்
என் இதயம் திட்டுகிறது
நீ எங்கே என்று...

என்னவென்று சொல்ல

வெகு வருடங்களுக்கு பிறகு
சந்தித்தேன் அவளை.
முதன்முதலாய்
பார்த்த அதே கோவிலில்...

அன்று பார்த்த
அதே அழகி தான்...
குடும்பச் சுமையில்
அவளது உடலும் சற்று
சுமை சேர்த்திருந்தது...

காட்சியாய் கண்கள் கண்டதும்
இதயம் பின்னோக்கி செலுத்தியது
அவளுடையதான என் நாட்களை...
மூளை உண்மையை சொல்லி
முன்னோக்கி கொண்டு வந்தது...

என்னுடைய காதலியான
உருவத்தையும்,
மாற்றான் மனைவியான
உருவத்தையும் ,
வேறுபடுத்திக் காட்டியது
நெற்றிவகிட்டுக் குங்குமமும்
தாய்மையின் சாந்தமும்...

அவளைப் பார்த்ததும்
சந்திப்புகள் தவிர்க்க
வெளியேற எத்தனித்தேன்...
அதற்கு முன் அவள்
கவனித்துவிட்டாள்...
சிறு புன்னகை பூத்தேன்
உதட்டின் வழி(லி)யால்...

தயங்கித் தயங்கி
பேச்சுக்கள் ஆரம்பித்து
சம்பிராதய விசாரிப்புகள்...
எங்களின் கற்பனையின் படியே
ஆணும் பெண்ணுமாய்
இரண்டு குழந்தைகளாம்....

மனதில் சின்னதாய்
ஒரு ஏக்கம்...
எங்கள் காதல் அவளின்
நினைவில் உள்ளதா என
தெரிந்து கொள்ள அவளது
குழந்தைகளின் பெயரைக் கேட்டேன்...

என் பெயரோ
எங்களது கற்பனைக் குழந்தையின்
பெயரோ இருக்குமென
சின்னதாய் ஆசையில்..

அமுதன், இனியாள் என்றாள்.
ஒருபுறம் சந்தோசம்.
என்னை மறந்து
சந்தோஷ வாழ்க்கை
வாழ்கிறாள் என்று...
மறுபுறம் வருத்தம்
என் ஞாபகம் இல்லையென...

அலைபேசி அழைக்க
விலகிப் போனாள்...
அமுதன் எனை நெருங்கி
மெல்ல வினவினான்...
உங்கள் பெயரும்,
என் செல்லப் பெயரான
தமிழ்' என்று...

காதலும் நட்பும்

காதலுக்கும் நட்பிற்கும்
உள்ள ஒரே ஒற்றுமை
அன்பு காட்டுதலே...
வித்தியாசம்
காதல் காட்டும் அன்பை
ஏற்றுக்கொள்ளும் நட்பிலும்,
நட்பு காட்டு அன்பை
வெறுத்திடும் காதலிலும்...

பெண் நட்பு

பிழையாய் பார்க்கும்
பிறரின் கண்ணிற்கு
புலப்படாத இடைவெளி,
எங்களுக்குள்
இடை'வேலியாய்'...

Wednesday, 27 July, 2011

ஊமையின் காதல்

இன்றேனும்
உனது மௌனம்
கலையாதாவென ஏக்கம்...

வானவில்லாய் வியாப்பித்து
குதுகலம் செய்த பின்,
நிரந்தரமில்லை என
களைந்து போகும்
நியாயம் என்னடி...

தட்டுத் தடுமாறும் குழந்தையாய்
உன்னைத் தொடருகையில்,
விலகி ஓடிடும்
அவலம் ஏனடி...

உன்னைச் சுற்றியே
ஒளிபரப்பாகும்
என் நிலைவலைகள்
உனது அலைவரிசையில் மட்டும்
புலப்படவில்லையோ...

கண்ணீரின் மதிப்பு
பெண்களுக்கு காரியம்
முடியும் மட்டும்...
ஆணுக்கோ அவனது
கடைசி காரியமும்
முடியும் மட்டும்...

ஒருபோதும்
புரிவதில்லை உண்மைக் காதல்..
தொட்டிலில் உன்னை
தாலாட்ட எண்ணும்
என் மனம் தவிர்த்து,
உன்னை தொட்டில் கட்ட
வைப்பவனிடம் தானே
போகிறது உன் மனம்...

அடிப் போடி
ஊமையின் காதல்
எங்கே புரியப் போகிறது
செவிடாகிப் போன
உன் மனதிற்கு...

மறதிக்காரன்

எல்லோரும் சொல்கிறார்கள்.
நான் ஞாபக மறதிக்காரனாம்...
அவர்களுக்கு எங்கே
புரியப் போகிறது...
நாம் காதல் கொண்டு
வாழ்த்த நொடிகள்
ஒவ்வொன்றும் நீங்காது
நினைவில் நிற்பது...

மழலை

மன்னிக்கத் தெரிந்த
முதல் மனிதன்
மழலை ...
ஏறக்குறைய
கடைசி மனிதனும்
அவனே...

கூட்டஞ்சோறு

குழந்தைகளின்
ஜமா பந்தி
கூட்டஞ்சோறு...

Tuesday, 26 July, 2011

வரம்

இருபத்து நான்கு
மணி நேரமும்
சிரித்துக் கொண்டிருக்கும்
வரம் உண்டென்றால்,
என்னைப் போல்
அதிர்ஷ்ட்டக்கார ரசிகன்
எவனும் இல்லை...
என்னவள் சிரிக்கும்
அழகிலேயே லயித்து போக...

Tuesday, 19 July, 2011

நீ

நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ நீ

இப்படி நான் பார்க்கும்,
போகும் இடமெங்கும்
நீ தாண்டி அன்பே....

Saturday, 2 July, 2011

வேலை தேடும் பட்டதாரி

தோல்விகளும்
புறந்தள்ளல்களும்
விடாது மிரட்டினாலும்
நாங்களும் கஜினி தான்...

மீண்டு வருகிறது

யாரோ என்னை தட்டி
அழைக்கையில் மட்டும்
எனக்குச் சொந்தமென
மீண்டு வருகிறது
எனது சிந்தனை
உன் நினைவில் இருந்து...

காதல்

கனவுகளோடு வாழ்க்கை
கலையாத காதல்
நிஜமாகா கனவு
தீரா தாகத்தோடு
நீண்டதொரு சாலையில்
தனியாகப் பயணம்...

புன்னகை

சிரிக்கையில் விழும்
கன்னக் குழியில்
விழுந்த இதயத்திற்கு,
மறந்து போனது
எனக்கும் சொந்தமான
புன்னைகையும்...

தேடலுடன்

படிப்பையே ஒரு சில
தாள்களில் முடித்த நான்
உன்னைப் பற்றி
சொல்லிட மட்டும்
பக்கம் பக்கமாய்
எழுதிய பின்னும்
நிறைவேறா தேடலுடன்...