Friday, 30 September, 2011

மறதி

தனிமைக்கும்
ஞாபக சக்திக்கும்
நெருங்கிய தொடர்புண்டு போல்...
மிக முக்கிய விசயங்களும்
மறந்து போனாலும்,
நாமிருந்த பொழுதுகளில்
அரங்கேறிய காதலின்
நொடிகளும், வார்த்தைகளும்,
மறந்திடாமல்
மனத் திரையில் ஓடுகிறது,
தனிமையில் மட்டும்...

தாய்மொழி

பெரும்பாலான நேரங்களில்
அவளின் தாய்மொழி
மௌனம்...

மௌனம்

நடப்புக் காதலில்
பெரும்பாலான காதலர்களுக்கு
திருமணத்திற்கு முன்
பிடிக்காத மொழியும்,
திருமணத்திற்கு பின்
பிடித்த மொழியுமாய்
மௌனம்...

அழகு

அழுகையிலும்
சிரிக்கையிலும்
ஒப்பனை இல்லா
சிறந்த அழகு
மழலை...

எச்சில்

சிறு துளி
எச்சில் தெறித்திட்டாலும்
துடைத்திடும் மனம்,
ஏனோ துடைக்கவில்லை
மழலையின்
எச்சில் முத்தத்தில்...

மருமகள்

என்னிடம்
நல்ல மருமகள் கேட்ட
என் தாய்க்கு,
நான் மருமகன்
ஆகிவிட்டேன் போல்.
அவரிடம் நீ காட்டிய அன்பில்...

விடுப்பு

உன் கண்களை
நேர் எதிர் பார்த்து
காதல் சொல்கையில் மட்டும்,
ஏனோ எந்தன்
தைரியமும், ஆண்மையும்
சொல்லாது விடுப்பு
எடுத்துக் கொள்கிறது...

விதிவிலக்கான என் காதல் குழந்தை...

முதன் முதலாய்
வைரத்தை கண்டவனின்
அலட்சிய அறியாமையில் தான்,
நீ சற்றும் புரிந்து கொள்ளாத
என் காதல்..

ஏகாந்த பார்வையின்
வீரியத்தில் பெரும்பாலும்
அடங்கிப் போகும் நாணலாய்,
உருமாற்றம் கொள்ளும்
ஆலமரமாகிய என் ஆண்மை...

நுரை பொங்கும்
அலையின் ஆர்ப்பரப்பில்
ஓடி அடங்கும் ,
உந்தன் வருகைக்கான
ஏக்கங்களுக்குக் சொந்தமான்
என் இதயம்...

கூடு திரும்பாத
பறவையின் பரிதவிப்பில்
இரவுக்கு அடைய மறுக்கும்
உன் உருவம் காணாத
என் பகல் பொழுதுகள்...

அழும் குழந்தையின்
கண்ணீரை எவரும்
வெகு நேரம் பார்ப்பதில்லை.
விதிவிலக்காய்,
உன் பார்வையில் கருவாகி
பிறப்பெடுத்த என் காதல்
குழந்தையை தவிர்த்து...

நிறுத்த நிலையின்றி வாழ்க்கை...

எத்தனை பெரிய காயங்களும்
ஆற்றிடும் காலம்,
எதிர் வினை புரிகிறது
என் விதியில் மட்டும்...

வருடங்கள் ஆகா ஆகா
வயது ஏறுகையிலும்
இன்னும் அதே
இளமையோடு தான்
உன் நினைவுகள்
என்னுள் வளம் வருகிறது...

சிறிது சிறிதாய்
செல்லரிக்கும் கரையானாய்
உன் சிரிப்புகளின் சிதறல்கள்
இன்றும் - நீயற்று
சடலமாய் கிடக்கும்
இதய பிண்டத்தை
கூரு போடுகிறது...

ஒவ்வொரு இரவுகளின்
தனிமை கூடுகையிலும்
இருளில் பிறப்பெடுக்கும்
உன் பிரதியான காதல்
ஆக்கிரமிப்பு செய்கிறது...

நினைவுகளாகிப் போன
நம் காதலின் நிஜங்களிலே
கூரிய நங்கூரமிட்டு,
நினைவலைகளில் தத்தளிக்கும்
நீயற்ற நிஜமான வாழ்க்கை...

சீக்கரம் விடியாதாவென
இரக்கமற்ற இரவுகளாலும்,
சுருங்கிப் போக மறுக்கும்
பகல் வேலைகளாலும்,
மாறி மாறி பந்தாடப்பட்டு
நிறுத்த நிலையின்றி
ஓடிக்கொண்டிருக்கிறது
எந்தன் வாழ்க்கை....

Wednesday, 28 September, 2011

கற்கண்டு சாரலின்
இனிப்பில் நனைந்திட
மழையின் இரசிகன் நான்...

தாயின் உச்சி முகர்ந்த
முதல் முத்தமாய்
மீண்டும் பெறும்
மழையின் குழந்தையாய்
பிறப்பெடுப்பேன்...

தரையின் தேங்கிய
நீரில் தானும் விழுகையில்
நீர்க்குமிழ்கள் பிறப்பெடுக்கையில்
கூடவே அதனை ரசிக்க
உருமாற்றம் மழலையாய்...

ஒவ்வொரு முறையும்
கழிவுகள் அழித்து
புதிதாகும் பாதையை
மாறிடக் கேட்கும் மனம்
மழையில் நனைகையில்...

துளி துளியாய்
கோர்க்கும் வார்த்தைச் சாரலில்
கால் நனைக்கும் வாக்கியங்களில்
நானும் சங்கமித்து நனைகிறேன்
ஒரு குழந்தையின் சிரிபோடு...

Tuesday, 20 September, 2011

பழக்கம்

வெந்நீர் ஊற்றி
பயிர் வளர்க்கும் பழக்கம்

எங்குமே இல்லையாமடி

நீ மட்டும் சொல்கிறாய்
கண்ணீரில் வளர்க்கும் காதலை...

கரையாத உன்னிதயம்

விடியாத நீண்ட இரவுகளோடு
தினம் தினம்
மல்லுக்கட்டிக் கொண்டே
நகரும் எந்தன்
உறக்கமற்ற நாட்கள்...

காதோரம் காதல் மொழியில்
எனைக் கிறங்கடித்த
ரகசியப் பேச்சும்...

வாஞ்சையான சிரிப்பை
காணும் போதெல்லாம்,
தமக்கே சொந்தமாகாதவென
கண்களோடு இதயமும் கெஞ்சும்...

மௌனம் கூறும்
வார்த்தைகளின் ரணம்
வலி தாங்கா இதயத்தை
சிறுகச் சிறுக
செல்லரிக்கச் செய்திடும்...

எறும்பு ஊரக்
கல்லும் கரைகையில்,
நாட்களும் கரைய
கரையாத உன்னிதயம்
கல்லைவிட கடினமோ...

விடை தெரியாது புலம்பிடும்
என்னிதயம் என்ன விசனமோ...

அர்த்தமின்றி தவிக்கும் காதல்

இதுவரை
ஓசையே கேட்டிராத செவியினுள்
உரக்க கதறி
அழுகும் ஓசையாய்...

பார்வை கண்டிரா
விழிமுன் கண்ணீரும்..

பாலையில்
ஏர்பூட்டிடும் விவசாயமாய்...

உணர்ச்சியில்லா
மரப்பாச்சி பொம்மையிடம்
சொல்லியதைப் போல்

என் காதலும்
அர்த்தமின்றி தவிக்கிறதே..

பெண் நட்பு

ரகசியம் பரிமாறிய பொழுதுகளிலும்,
சிநேகம் வளர்த்த அன்பிலும்,
கண்ணீர் உடையும் பிரிவுகளிலும்,
அருகருகே அமரும் நெருக்கத்திலும்,

பகிர்ந்து உண்ட வேளைகளிலும்,
உடன்பிறப்பாய் செய்திடும் உதவிகளிலும்
தோல்வியில் கைதந்த நேரத்திலும்
ஆறுதலான தோள் சாயல்களிலும்

உரிமையில் பிறப்பெடுக்கும் கோபத்திலும்,
காதுமடல் திருகும் கண்டிப்பிலும்,
ஒளிவு மறைவிற்கான சண்டைகளிலும்
எதையும் செய்திடும் நட்பிலும்

தோள்களில் சாயும் தோழமையிலும்
தோழி சகோதரியாகும் வேளையிலும்
கண்ணீர் துடைக்கும் விரலிலும்
பாலுனர்வின்றி இருந்த தனிமைகளிலும்

வலியை உணர்த்திய பிரிவிலும்
இறுக கரம்பற்றிய ரகசியங்களிலும்
உணர்ந்த உன்னத நட்பு

நட்பறியா குருடர்கள் பார்வையிலும்
புறம்பேசும் புத்திமான்களின் பேச்சிலும்
சங்கடப் பட்டு வெளியே
எட்டிப்பார்க்க வேதனையோடு இன்று....

Monday, 19 September, 2011

அலங்காரம்

என்ன இவ்வளவு நேரம்
நிற்கிறாய் எனக் கேட்கையில்,
சாமிக்கு அலங்காரம்
நடக்கிறதாம் என்றாய்..
அடி அழகி
உன்னை நிற்க வைத்ததே
உன்னைப் பார்த்து
அலங்காரம் செய்திடத் தானே...

கோவில் நடை

ஒன்பது மணிக்குத் தான்
கோவிலில் நடை சாத்தப்படுமாம்...
எனக்கோ கோவிலை விட்டு
நீ வெளியேறியதுமே
சாத்தப்பட்டுவிட்டது...

குங்குமம்

நெற்றியில்
குங்குமம் வைத்திடுகையில்
மேலும் சிவந்து போகிறது
உனது நிறத்தில்...

பொறி

குளக்கரையில் அமர்ந்து
மீன்களுக்கு நீ
பொரி போடுகையில் தாண்டி
கயல்விழியால்
நீ எனக்கு வைத்த
பொறி புலப்பட்டது...

பொறாமை

சிற்ப்பங்களின்
அழகைக் கண்டு
நீ ரசிக்கையில்,
உனதழகில் மயங்கி
பொறாமையில் சிறுத்துப்
கறுத்தே விட்டது...

ஆராதனை

அர்ச்சகர்
தீபத்தட்டை நீட்டுகையில்
உன்னை தான்
தேவதை என்றெண்ணி
ஆராதனை செய்வதாய்
ஒரு பிரம்மை...

தரிசனம்

கோவிலை விட்டு
வெளியேறுகையில்,
சாமியின் தரிசனம் கண்ட
மகிழ்ச்சியில் நீ.
உன் அழகினை
அருகாமையில் கண்ட
சந்தோசத்தில் நான்...

அழகு - ரசனை - நீ...

நீ பிரகாரத்தில்
ஒவ்வொரு சிற்பமாய்
பார்த்து ரசிக்க - நானோ
நீ ரசிக்கும் அழகில்
சொக்கிப் போனேனடி...

தந்தையும், தாயும்...

மூளை தகப்பனாய்
இதயம் தாயாய்.

உத்தரவு மட்டுமே
இடத்தெரிந்த மூளைக்கு,
உணர்வுகள் புரிவதில்லை
தாயைப்போல்...

நீ வாழ என்றால்
உன்னில் விலகிப் போன
அவளை மறந்து,
நினைவுகளைத் துறந்துவிட
என உத்தரவு தந்தையிடம்...

நீ வாழவேண்டுமென்றால்
அவள் நினைவோடு வாழ் என
எனை உணர்ந்து கூறுகிறது
என் நிலை அறிந்த தாய்...

உன்னைப் பற்றி கவிதை எழுத

உன்னைப் பற்றி
கவிதை எழுத தோன்றிட,
எதைப் பற்றி எழுதுவதென
எனது எண்ணச் சாலையில்
சற்று பின்னோக்கி செலுத்தப்பட்டது
நம் காதல் பேருந்து...

தனியான பயணத்தில்
நீ துணையாக வந்ததில் தொடங்கி,
அழகு, காதல், கோபம்,
சண்டைகள், கண்ணீர், பிரிவு என
ஒவ்வொரு நிறுத்தமாய்
நின்று ரசித்தது மனது....

சில நிறுத்தங்களில் சிரிப்பும்
சில நிறுத்தங்களில் வெட்கமும்
சிலதுகளில் அசடும் வழிந்தபடியே
மெல்ல ஊர்ந்து போகிறது...

மீண்டும் ஒரு காதல்
மீண்டும் அந்த இன்பம்
மீண்டும் ஒரு பிறப்பாய்
சந்தோஷ ஊற்று என்னுள்...

பயணத்தின் போதே
இறுதியும் முடிவு செய்யப்படுகிறது...
இறங்குமிடம் வருகையில்
மீண்டும் வாழ்ந்த வாழ்க்கையின்
திளைப்பிலும் லேசான கண்ணீரிலும்
முற்றுப் புள்ளி வைத்தேன்
கவிதை எழுதும் எண்ணத்திற்கு...

இக்கவிதையோடு நம் காதல்
என்னை விட்டு நீங்காமல்
இன்னும் பலமுறை
இப்படியே என்னுள் ஓடிட...

என் கவிதை, அவள் கண்ணீர்

எனது கவிதையை படித்திருந்தால்
என்னை விடாது மீண்டும்
என்னையே சேர்ந்திருப்பாலாம்
சொல்கிறார்கள் என் நண்பர்கள்...

என் சோகம் வலியாவும்
வரிகளாய் படித்தால்
கலங்கி கண்ணீர் விட்டிடுவாள்...

காதலித்த நாட்களிலே அவளது
கண்ணீர் பார்க்கா என் மனம்,
இப்பொழுது மட்டும் பார்த்திடுமா
என் வரிகள் அதனை செய்திடுமா...

Friday, 16 September, 2011

இடைவெளி இல்லா நெடுந்தொடர்

தொலைகாட்சி பார்க்கும் பழக்கம்
இல்லையாடி உனக்கு...

பார்க்கும் பழக்கம்
இருந்திருந்தால் தான்
இடைவெளி பற்றி தெரிந்திருப்பாய்...

இடைவெளியே இல்லாமல்
என்னை மூவாறு மணியும்
பாடாய் படுத்தும்
உன் நினைவுகளுக்கு
இடைவெளி விட்டிருப்பாயே
காதல் நெடுந்தொடரில்...

காதலில் விழுந்த நான்...

தனியாய் வாழும்
எறும்பாய்
தரையில் மிதக்கும்
மீனாய்
பிறை இல்லா
நிலவாய்,
பொம்மை விரும்ப
குழந்தையாய்,
விடிய மறுக்கும்
இரவாய்,
பொன் பிடிக்க
பெண்ணாய்,
மரம் மறுக்கும்
குரங்காய்,
இரை விரும்பாத
விலங்காய்,
சோகம் தொலைத்த
கண்ணீராய்,
இவற்றுள் மனித இயல்பில்
தடம் மாறி பயணிக்கும்
காதலில் விழுந்த நான்


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் மனிதநேயம்...

பச்சை தண்ணீருக்கும்
விலை சொல்லிடுகையில்
மனிதனின் மனதில்
எங்கே பார்த்திட
இரக்கமென்னும் நீரை...

மனிதன் இயக்கி வந்த
காலம் புதைந்து - இன்று
மனிதனை இயக்கும்
இயந்திரங்கள்...

கேட்டால் போட்டி உலகம்.
மனிதம் மறந்து,
நியாயம் புதைத்து,
அதன் மேல் ஓடி
வெற்றிக் கொடி நாட்ட,
யாருண்டு பாராட்ட...

கிராம் கணக்கில்
உதவி எதிர்பார்த்திட,
தங்கம் அளவு விலை....

அக்றினை யாவும்
பிறந்த பலனாய் உதவிட,
மனிதன் மட்டும்
ஏனோ மறந்துபோனான்
மனிதம் செய்திட...

பணம் காசு சேர்ப்பதோடு
நாலு நல்ல மனங்களையும்
சேர்த்து வையுங்கள் பத்திரமாய்...

பணத்திற்கு தரும் மதிப்பை
மனதிற்கும் கொடுத்து.
முடிவில் சேருமிடம்
கொண்டு செல்ல வேண்டி...

சின்னதாய் வேண்டுகோள்...
அழிந்து போன பட்டியலில்
மனித நேயத்தையும்
சேர்த்து விடாதீர்கள்...

Friday, 9 September, 2011

வேடம்

இதழுக்கு மட்டுமே
இரு வேடம்...
சிரிக்கையில்
புன்முறுவலிலும்,
வலியின் முனங்களின்
மருவலிக்கவும்...

முதுமை

கேட்பாரற்று கிடப்பது
காலம் கசக்கிப் போட்ட
உடல் மட்டுமில்லை,
அரை நூற்றாண்டு
அனுபவும் தான்...

கோலம்

நீ அரிசி மாவில் கோலமிடுவது
எறும்புகளுக்குஉணவிடத் தான் என்றாலும்,
தினம் தினம் உன் தரிசனத்தை
உணவாய்க் கொள்ளும் எனக்காகவும் என
உனக்குத் தெரிய வாய்ப்பில்லை...