Saturday, 29 January, 2011

மொழி

அன்றும் இன்றும்
பேசியது என்னவோ
மொழி தான்...
இதழ்கள் இணைந்து
பேசிய தாய்மொழியை விட,
காதலை உணர்த்த
இதழ்கள் இணைந்த
முத்தத்தின் வலிமொழி
பெரிதே...

இரவு

கரைந்து போன
நிலவும்
விடியலில் கரையேற,
அன்பே உனது
நினைவின் தண்ணீரில்
நீந்தி - எனது
இரவும் கரையேருகிறதே...

இமை

இனியொரு முறை
ஆடைகளையாதே அன்பே
எனது பிரம்மச்சாரி
விரதம் கேட்டு விடும்...
கண்களிடம் சொல்லிவை
இமை என்னும்
ஆடை போர்த்த...

விரதம்

உன் பார்வையை
இரையாக்கி,
தனிமையை துணையாக்கி,
கண்ணீரில் நீர் பருகும்,
விரதம் இருக்கும்
என் இதயத்திற்கு
எப்பொழுது தருவாய்
அன்பே
காதல் வரத்தை...

பூதம்

பொக்கிஷம் காக்கும்
பூதமானேன்...
நீ தந்த
காதல் நினைவுகளைக்
காக்கும் நானும்...

பைத்தியக்காரி

புதையலை புறம் தள்ளும்
பைத்தியக்காரியாடி நீ?
உன் நினைவுகளை
புதைத்து வைத்திருக்கும்
எனது இதயத்தினை
புறம்தள்ளுவதேனோ?

கோரிக்கை

என் முகத்தோடு
உன் முகம் கொண்டு
கன்னங்கள் உரசிடும் வேளையில்,
முத்தம் வேண்டுமென்ற
உனது கோரிக்கையினை,
உனக்கு முன்பே
சொல்லிவிட்டன அன்பே
உன் இரத்த நாளங்கள்
எனது மீசையின் ரோமத்திடம்..

Friday, 28 January, 2011

நினைவு

இரவிலும்
என்னைத் தொடரும்
நிழல்
உன் நினைவு...

Thursday, 27 January, 2011

பிளாட்

அப்படி என்ன தான்
உரமிட்டார்களோ?
விவசாய நிலத்திற்கு..
இவ்வளவு வேகமாய்
வளருகின்றதே
கட்டிடங்கள்...

கவிதை

கவிதை எழுதுயதும்
என பெயரை போடாமல்
யாரோ ஒரு பெண்ணுடைய
பெயரினை போடுகிறாயே என்று
கேட்கிறான் என் நண்பன்...
அவனுக்கெப்படி தெரியும்
கவிதைக்கு சொந்தக்காரியான
உனது பெயரைப் போடாமல்
எனது பெயரைப் போடுவதென்று...

லஞ்சம்

ஒவ்வொரு முறை
நீ பெறும் லஞ்சத்தில்
காந்தியும் சிரிக்கிறார்
எனது மக்களின் கண்ணீரில்...

சேர்ப்பது பணத்தை அல்ல
மனங்களின் சாபங்களையும் தான்..

வாங்கும் ஊதியத்திற்கு மேலும்
ஆசைப்படும் உனக்கும்
ரத்தம் உறிஞ்சும் அட்டைக்கும்
ஏது வித்தியாசம்...

உன் மனைவியின்
நிழலுக்கும் சேர்த்தே
வரதட்சணை கேட்பவன்,

உனது பிள்ளைகளின்
இனிஷியலுக்கும்
லஞ்சம் கேட்கும் அளவிற்கு
நீ மாறிட்டாலும்
வியப்பதற்கு ஏதுமில்லை...

Tuesday, 25 January, 2011

தனிமை

எனது அடிமை தனிமையும்
இன்று எனக்கு
தலைவன் ஆனது...
அன்பே உந்தன் கண்கள்
காதல் போர்க்கொடி
காட்டியதும்...

Thursday, 13 January, 2011

பால்ய நாட்கள்

எங்கு போனது
பசுமை போர்த்திய
எனது பால்ய நாட்கள்...

செம்மண் சாயம்
பூசிக்கொண்ட உடலுமாய்,
காலெல்லாம் புழுதியோடு
கால்வலிக்க ஆட்டமும்,

காத தூரம் ஓடி வந்து
ருசித்த கள் மாங்காயும்,

தண்டவாள காசிற்க்காய்
பறிபோன மிட்டாய்களும்,

ஒன்றுமில்லா காரணத்திற்கு
அடிபிடித்த சண்டைகளும்,

கிரிக்கெட் ஆட்டத்திற்கு
பலியான ஜன்னல்களும்,

பங்குபோடும் பங்காளிகளாய்
பகுத்துண்ட பண்டங்களும்,

அடிக்கு பயந்து நானே போட்ட
அப்பாவின் கையெழுத்தும்,

அதையும் தவறாய் செய்து
அடி வாங்கிய தலையெழுத்தும்,

முதல் நாள் மட்டும்
முட்டிப் படித்த தேர்வுகளும்,

பரிட்சையில் பேப்பர் காட்டாத
பையன் வாங்கிய அடிகளும்,

வேலி ஓணான் பிடித்து
கழுவேற்றி ரசித்ததும்,

கபடி ஆட்டமும்
கண்ணாமூச்சி ஓட்டமும்,
மலையேறி விட்டன
எனக்கேறிப் போன வயதோடும்,

நான் மட்டும் கண்ட களித்த
கட்டுண்டு ஆடி திளைத்த
கட்டுப்பாடின்றி ஓடி திரிந்த
எல்லையின்றி பரந்து விரிந்த
பால்ய நாட்கள்

சுருங்கிப் போன
உருண்டையாய்,
இல்லமே உலகமாய்,
ஓய்வே பொழுபோக்காய்,

கால்களில் கேண்வாசும்,
கைகளில் வீடியோ கேம்சுமாய்,
கூட்டுப் புழுவாய்
வீட்டில் கிடக்கும்
என் சந்ததிக்கும் கிடைக்குமா?

Friday, 7 January, 2011

காத்திருந்தா காலமுண்டு
இந்த மொழி நெசமாக்க,
என் பொறப்ப நீ பாக்க
கஷ்டத்தோடு காத்து நின்ன...


பத்து
மாசம் நீ சுமக்க
பட்ட பாடு என்ன சொல்ல,
வாந்தி நோவுன்னு வந்தாலும்
என்னை நோவாமல் பார்த்தியே...

அம்மான்னு நா சொல்ல
என் ஆன்மா நு கேட்குதேமா,
அந்தக் கடவுளும் முன் வந்தா
உனக்கே தான் முதல் பூசை...


உன் உசிரை பாதியாக்கி
ஊன், உசிரு நீ தந்த,
பிண்டமாய் என்ன படைச்ச
நீ தானே முதல் கடவுள்...

குறை உசிர முழுசாக்கி
முழு உருவம் நீ தந்த,
போய் வந்த உசிரோடு
என்னைய நீயும் பிரசவிச்ச...

என் வளர்ச்சில
சுகம் நீ அடைஞ்ச,
என்னோட சிரிப்புல தானே
உன் சோகம் நீ மறந்த...

காசிருந்தா உலகமுன்னு
உறவெல்லாம் அத்துப் போக
கால் காசென்று தந்தாலும்
கோடியாய் நீ பாத்த...

தப்பென்று செய்கையிலே
தண்டிக்காத என் தாயே,
தண்டித்து பேரெடுத்த
மன்னரெல்லாம் உன் அடிம....

பசியென்று வந்து சொல்லி
உன் முன்னே நா நிக்க
இருந்த சோத்த எனக்கிட்டு
என் வயிறு நீ பாத்து
ஆத்தா நீ பசியாற...

எதிர்பாக்கும் பந்தமெல்லாம்
பாந்தமாய் என்னோடு,
என் பெரும மட்டும் போதுமென
நிறைஞ்ச உன் மனசோடு...

உருவத்தில உன்னவிட
உசரமாத்தான் வளர்ந்தாலும்
அண்ணாந்து பாக்க வச்ச
பாசத்துல ஆகாசம் நீ...

நீ பட்ட கஷ்டமெல்லாம்
எனக்காக ஏத்துக்கிட்ட
உன் புள்ள பெரும சொல்லி
கோபுரமாய் உசந்து நின்ன...

நோவுன்னு நான் படுத்தா
குளமாச்சு உன் கண்ணு,
எனக்காக நீ பட்ட வலியைவிட
இதுவொன்னும் பெருசில்ல...

வளமான நிலத்துக்கு
மழை தான் கடவுள் னா,
என்னையும் மனுசனாக்கிய
ஆத்தா நீயும் மழைதானே....

பொன்னு, மண்ணுன்னு
என்னவெல்லாம் நீ கேளு,
என் உசிர மட்டும்
என்னோட விட்டு விட்டு...

கேட்டதெல்லாம் நெசமாக்கி
என் கண்ணீரில் கால் கழுவி
நீ தந்த உசுருக்கும்
அர்த்தமொன்னு தேடிக்கொள்ள...

உன் நிலை நான் எட்ட
எத்தன சென்மம் நானெடுக்க
எவ்வளவு தான் செஞ்சாலும்
உன் கால் தூசி ஆவேனோ?

அடுத்த சென்மமுன்னு
நிச்சயம் நமக்கிருந்தா,
என் மகளா நீ வந்து
என் வயித்துல பிற தாயீ...
கடவுள சுமந்த வரத்த
எனக்கும் தந்திடு தாயீ....

Wednesday, 5 January, 2011

நாய்க்குட்டி

நானொரு நாய்க்குட்டி தானடி..
உனக்கு பிடித்த நாய்க்குட்டி.
உன் ஓரப்பார்வை கொஞ்சமாய்
பிய்த்து போட்டதர்க்காய்
ஓய்வில்லாமல் உன்பின்னே
சுற்றித் திரியும் நாய்க்குட்டி...

உன் எண்ணங்களை
மோப்பம் பிடித்துக் கொண்டு,
சென்றுவந்த இடமெல்லாம்
அலைந்து திரிந்து
ஏமாற்றத்தை இரையாய் கொண்டு
உலவிடும் நாய்க்குட்டி...

கொஞ்சல் மொழிக்கும்
அன்பு அணைப்பிற்குமாய்,
துள்ளல் நடை போட்டு
ஓடி வந்திடும் நாய்க்குட்டி...

உன் தலை கோதளுக்கும்
காதுமடல் திருகளுக்கும்
கண்கள் சொருகியபடி உன்னிடம்
தலை காட்டிடும் நாய்க்குட்டி...

உன் உருவம் தராமல்
பிரிவில் பட்டினி போட்டாலும்
இன்ப நிஜங்களை இரையாக்கி
உன்னைக் கண்டதும்
கட்டியணைக்கும் பாச நாய்க்குட்டி...

உன் வார்த்தையாகும் சங்கிலிக்குள்
என வாழ்க்கையை இட்டு
கட்டுப்பட்ட நாய்க்குட்டி

உன் குடும்பத்தால்
தூக்கி வீசப்பட்டாலும்
சகோதரனால் விரட்டப்பட்டாலும்
உன் பாசத்திற்காய்
பொறுமை காத்து நிற்கிறேன்
இன்றும் உனக்கு பிடித்த
அதே நாய்க்குட்டியாய்...

படுத்துறங்க

இரவின் மடியில்
மெல்ல மெல்ல
தலை சாய்த்திட,
துயில் அணைக்கும் வேளையில்,
நினைவுகள் என்னை
போர்வை போர்த்தி
உறங்கிட வைக்கிறது...
கனவுகளில்
உன் மடியினில்
படுத்துறங்க...

கவிதை

கவிதை
சிலருக்கு
கற்பனையின் குழந்தை...
பிறருக்கு
வார்த்தைகளின் விளையாட்டு...
மிச்சம் இருப்போருக்கு
தான்கொண்ட நினைவுகளின்
நிதர்சன உண்மைகள்...
நம் காதலை
எண்ணியே வாழும் எனக்கோ
வலியின் மொழியாய்,
விழியன் வழியாய்,
வளிந்து வடியும்
கண்ணீரின் சுவடு...

உறக்கம்

மூன்றாண்டுகள்
தொடரும் நத்தையின்
உறக்கம் வேண்டுகிறேன்..
என்னருகில் நீயிருக்கும்
என் கனவுகள் நீண்டிட...

நாக்கு

நீ கையால்
அடிக்கும் பொழுதெல்லாம்
வலிக்கவில்லையடி அன்பே...
பிறகு தானடி
தெரிந்து
கொண்டேன்
உடலின் கடினத் தசை
நாக்கு தானாம் -
அதனால் தானோ
மறந்துவிடு என
நீ சொன்ன வார்த்தை தாண்டி
இரணமாய் வலிக்கிறது...

ஜென்மம் ஆறு

தலையின்று
நாட்கள் ஆறு
வாழுமாம் கரப்பான்..
அதுபோல் என்னையும்
எண்ணினாயா அன்பே
நீயின்று இனிவரும்
ஜென்மம் ஆறும்
வாழ்வேனென்று...

நீ

உன்னை
நதி என்றோ
மயில் என்றோ
கூவிடும் குயில் என்றோ
வருணிக்கும் எண்ணமில்லை...
அவைகளைப் பற்றி
பாடிடத் தானே
இறைவன் உன்னைப்
படைத்துள்ளான்...

Sunday, 2 January, 2011

நட்பும் காதலும்

எத்துணைப் பெரிய வலிக்கும்
சிறந்த மருந்து
காலமும், நட்பும் தான்..
அதனால் தான் என்னவோ
உயிர் பிரியும் நொடி வரையிலும்
இரண்டுமே உடன் வருகிறது...