Thursday 29 December, 2011

உருமாறத் துடிக்கிறது

என்னை வைத்துக் கொண்டு
அடிக்கடி குழந்தையை கொஞ்சாதே...
உருமாறத் துடிக்கிறது
இதயம்...

நொறுங்கிப் போனது

உன்னைப் பார்க்காது
நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
இத்தனை நாட்களும்
நொறுங்கிப் போனது
உன்னைப் பிரிந்த
இத்தனை நாளில்...

கேள்விப்பட முடியா ஏக்கத்தில்...

ராசிப் பலனில்
உனக்கான மகிழ்ச்சிகளைப் பார்த்து
மனம் ஆறுகிறேன்.
உன் நலம் பற்றி
கேள்விப்பட முடியா ஏக்கத்தில்...

திணறுகிறது மனம்...

நான் பார்க்கையில்
குழந்தையோடு நிறகாதே
அடிக்கடி...
யாரைக் கொஞ்சுவதென்று
திணறுகிறது மனம்...

காதல்

என்னையே அதிகமாய்
உணர வைத்தது
உன் காதல்..

உன்னையே அதிகமாய்
எண்ண வைத்தது
உன் பிரிவு...

நீயற்ற வாழ்க்கை

இதழ் ஒட்டா
வாழ்க்கையாய்,
அர்த்தமற்று திரிகிறது
நீயற்ற வாழ்க்கை...

விடுமுறைப் பலகை

சந்தோஷங்களை
மொத்தமாய் குத்தகைக்கு
எடுத்திருந்த விடியலுக்கு முன்னால்,
இப்பொழுது எல்லாம்
விடுமுறைப் பலகை மட்டுமே
தொங்கவிட்டுச் செல்கிறது
உனது பிரிவு...

இறவாத ஆயுள்

உனது
நினைவுகளுக்கு மட்டும்
எப்படியடி கிடைத்தது
இறவாத ஆயுள்...

காதல் வேண்டும்...

இப்படி சண்டை
போட்டிடத்தான் காதலித்து
திருமணம் செய்தோமா
என்றென்னும் உள்ளங்களுக்கு
நடுவிலே,
இத்தனை நாட்களாய்
திருமணம் செய்துகொள்ளத்
தவறிவிட்டோமென தவிக்கும்
காதல் வேண்டும்...

முத்தத்தின் விடியல் வரை...

உனது வெட்கத்தின் எல்லைகள்
நெடுவானமாய்
நீண்டுகொண்டே இருக்கிறது
எனது முத்தத்தின்
விடியல் வரை...

கணவரோடு நீ வருகையில்...

உன்னைப் பார்த்திட
நாள் வாராதா என
சுற்றித் திரிந்த
நாட்கள் எத்தனையோ...

பல நாட்களுக்குப் பின்
இன்றுன்னைக் கண்டும்
காணாதவனாய் கடந்து செல்கிறேன்

கணவரோடு நீ வருகையில்...

திருநீறு

தெய்வத்திடம் வைத்து
தந்த திருநீறு இல்லை இவை,
என் தேவதை
இட்டுக் கொண்டு
மீதம் விட்டுச் சென்றது
என் நெற்றியில்...

அர்ச்சகன்

நானும்
அர்ச்சகனாகி விட்டேனடி
பொழுதும் உன்னை
என் கவிதையில் அர்ச்சித்ததில்...

அர்ச்சகன்

நானும்
அர்ச்சகனாகி விட்டேனடி
பொழுதும் உன்னை
என் கவிதையில் அர்ச்சித்ததில்...

கண்டுகொண்டேனடி

நான் பருவமடந்ததை
கண்டு கொண்டேனடி,
எத்தனையோ பெண்கள்
பார்த்து வராத காதல்
உன்னைப் பார்த்த மட்டிலும்
வந்த பொழுது...

வான் நோக்கியே இருப்பது

நீ வீதியில் இறங்கி
நடக்கையில் மட்டும்
ஊரார் பார்வை
மொய்த்துவிடுகிறது- ஆமாம்
எத்தனை நாட்கள் தான்
நிலவினை பார்க்க
வான் நோக்கியே இருப்பது..

புரண்டுக் கொண்டிருக்கிறது எந்தன் பக்கங்கள்...

நம் காதலைப் பற்றி
எழுதிட ஆரம்பிக்கையில்
ஆர்வத்துடன் துள்ளி நடையிட்டு
அணிவகுத்த வார்த்தைகள்,

கவிதையின் நீளம் கண்டு
மலைப்பில் சோர்ந்து,

ஓய்வெடுக்கச் சென்றதில்
வெள்ளைப் பக்கங்களாய்
புரண்டுக் கொண்டிருக்கிறது
எந்தன் பக்கங்கள்...

அணிலாகிறேன்...

உன் மேல் படர்ந்த
என் முதுகில்
உனது விரல் நகல்கள்
கீறீ கோடிடுகையில்,
உனைக் கடித்துண்ணும்
அணிலாகிறேன்...

வாசித்த மயக்கத்தில்

வாசித்த மயக்கத்தில்
இடம் மாறிக் கிடக்கிறது
வார்த்தைகள் அர்த்தமற்று,
நீ படித்த புத்தகத்தில்...

Wednesday 28 December, 2011

மேற்கு திசை

எனக்கு மட்டுமே
மேற்கு திசையில்
சூரியன் உதிக்கின்றது...
அத்திசையில் தானே
உள்ளது அவள் வீடு...

Monday 5 December, 2011

வந்திட ஏங்கும்

பட்டப் பகல் வேளையில்
கையில் மெழுகு கொண்டு
தேடிடும் பொருளாய்,
திரும்பி வந்திட ஏங்கும்
நப்பாசைக் காதல்...

படுக்கையின் புலம்பல்

எந்தன் படுக்கையும்
புலம்பித் தவிக்கிறது,
உறக்கமற்ற இரவுகளின்
புரளாதஒரு நாள்
வராதா என...

என் தூங்காத உறவுகள்

நிலவிற்கும்
இப்பொழுதெல்லாம் சந்தோசம்,
அதன் துணைக்கு நிற்கிறதாம்
எனது தூங்காத
இரவுகள்...

எப்படிச் சொல்வது

அசையாமல்
ஒரே இடத்தினில்
படுத்திருக்கும் காரணத்தால்,
ஓயாது உன்
நினைவுகளின் பின்னே
அலைந்து கொண்டிருக்கும்,
எனது இதயத்தை
எப்படிச் சொல்வது
முழுச் சோம்பேறி என...

நம்ப மறுக்கிறது இதயம்

வாழ்க்கை அடைத்த பலூனை
பிரிவென்னும் ஊசி கொண்டு
துளையிட்டு மெல்ல
உயிரினை வழியவிட்டத்தை
கண் பார்த்தாலும்,
நீ எனநம்ப மறுக்கிறது
இதயம்..

Saturday 3 December, 2011

முட்களில் பூக்கும் ரோஜா

எல்லா முட்களிலும்
ரோஜாக்கள் பூப்பதாய்
ஏமாறும் இதயம்,
இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது
உனது காதல்
எனக்கு மட்டுமே என...

காதல் தவறவிட்ட என் வாழ்க்கை...

உடைந்து போன
கண்ணாடிச் சிதறல்களில்
ஒற்றை உருவம் காணத்தான்
அழுது தொலைக்கிறது
உன் காதல் தவறவிட்ட
என் வாழ்க்கை...

Friday 2 December, 2011

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

நல்ல மாட்டிற்கு
ஒரு சூடு என்பார்கள்..
இங்கோ சுடுபடுவதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது
ஒரு நல்ல மாடும்
உன் வருகை பார்த்து
நிற்கும் நானும்...

Friday 25 November, 2011

மரத்துப் போன தமிழனாய் நாம்

எங்கே போய் தேடுவது.
யாரை கண்டுபிடிக்கச் சொல்வது.
சுண்ணம் பூசி அழிக்கப்பட்ட அடையாளங்களை.

இரையும் காகங்களுக்கும்
அன்னமிட்டவர்கள் இன்று
பசியில் இரையும் வயிற்றுக்கு
உணவிட மனமில்லை...

ஊர் முழுதும் தெரிந்து வைத்திருந்த
அறிமுக எல்லைகள் ஏனோ
அடுத்த வீட்டினை கூட
எட்டிடாது சுருங்கிப் போனது...

விலங்கும் அடிபடுகையில்
துடித்து வலித்த மனம்,
சக மனிதன் துடிக்கையில்
நடந்தது அறியாது
கடந்து செல்கிறது...

பழமைகள் தூக்கி எறியும் பழக்கத்திலே
பெரும்பாலான வீடுகளில்
புறக்கணித்து எறியப்படுகிறார்கள்
வயதில் பழைய முதியோர்களும்...

மனம் கொண்டு வாழந்த
சந்தோஷங்களை யாவும்
பணத்திற்கு அடகு வைத்து
தனிக்குடித்தனம் வாழ்கிறார்கள்
தனி மரம் தோப்பாகாதாவென தெரிந்தும்...

அநியாயங்கள் நடப்பது
அடுத்த தேசத்திலாகவும்,
ஜன்னல் பார்வைகளே உலகம்,
குடும்பமே சுற்றம் என
சுருங்கிப் போனது வாழ்க்கை.

விருந்தோம்பல், களிவிரக்கம்
சிநேகம், பணிவு
மரியாதை, ரெத்திரம் என
பொங்கிக் தழைத்த மறத்தமிழனை இன்று
அருங்காட்சியகத்திலும் புத்தகத்திலும்
காணும் அவலத்தில்
மரத்துப் போன தமிழனாய் நாம்...

Tuesday 22 November, 2011

பிடித்த மழையும் பிடிக்காது

மிகவும் பிடித்த
அதிகாலை மழை
ஏனோ இன்று பிடிக்கவில்லை.
கோலம் அழிந்த
சோகத்தில் இருக்கும்
மகளின் முகம் பார்த்து...

நல விசாரிப்புகள்

அலை பேசியின்
குறுஞ்செய்தி வார்த்தைகளாய்
சுருங்கிப் போனது
இன்றைய நல விசாரிப்புகள்...

அழகி

அழகி என்ற வார்த்தை
உனக்காகவே
படைக்கப்பட்டது போல்...

அழுகை ஒலி...

ஒவ்வொரு
வெடி சத்தத்திலும்
அடங்கிப் போகிறது
உணவில்லாக் குழந்தையின்
அழுகை ஒலி...

நாமிருவர் நமக்கொருவர்

நாமிருவர் நமக்கொருவர்
என்பதில் இரு குழந்தைகள்.
மூத்தவள்
என் உயிரானவள்.
இளையவள்
என் உயிர் அவள்.

எரிகிறது மனம்...

ஏனோ வெடியோடு
எரிகிறது மனமும்.
எதிரில் பசிக்கு
ஏங்கிக் கிடக்கும்
மனிதனின் பசியினை
தீர்க்காத பணத்தில்...

கடைசி வரிசையில்

மலர்ந்த உன் பார்வை
பட வேண்டுமென
தவமிருக்கும் பொருட்களில்
அநேகமாய் கடைசி வரிசையில்
நின்று கொண்டிருப்பது
என் காதலாகாத் தான் இருக்கும்...

இயற்கை அழகி

நிழலையும் கூட
ரசிக்க வைக்கும்
இயற்கை அழகி நீயடி...

மருந்து

வாழவைக்கும் மருந்தே
சாகடிக்கவும் செய்வது
உன் பார்வை மட்டும் தான்...

பிடித்த நிழவோளியில்

தனிமை இரவில்
நான் நடக்க
உடன் வருகிறாய் நிழலாக
நமக்கு பிடித்த
நிலவொளியில்...

எந்தன் தனிமை

உடனிருக்கும் பொழுது
உனக்கும்
உடனில்லா நேரம்
உன் நினைவிற்கும்
பிடித்த பொருளாகிப் போகிறது
எந்தன் தனிமை...

மனம்

என்னைச் சார்ந்திருக்கும்
உன்னுடனே சேர்ந்திருக்க
எண்ணுகிறது மனம்...

துடிக்கிறது ஒன்று சேர

இடைவெளியற்ற நெருக்கத்தில்
தனிக்குடித்தனம் இருந்தது போய்,
ஒரு சேரத் துடிக்கும் இதயம்
ஒன்றிணைந்து...

பூமிக்கும் அச்சம்

சூரியனை சுற்றிடும்
பூமிக்கும் அச்சம்..
எங்கே நம்மைவிட
அதிகம் சுற்றியவனென
பெயர் எடுத்துவிடுவானோ என்று,
உன்னைச் சுற்றிடுதலைப் பார்த்து...

இரு வரிக் கவிதை

என் இதழ்களுக்கு
அடிக்கடி படிக்கப் பிடிக்கும்
இரு வரிக்கவிதை
உன் இதழ்கள்...

திண்ணிய தோள்கள்

பாரம் சுமக்க
தின்னிய தோள்கள்
வளர்த்த எனக்கு,
முதன்முறையாய்
தோன்றியது
பூவையும் தாங்கிடும்
இலகு வேண்டுமென்று
உன் தலை சாய்தலில்...

தூரம்

எனது அணைப்பிற்கும்
இறுக்கத்திற்குமான தூரம்
உன் கண்களில் தானுள்ளது...

உயிரோடு காட்சிப் படுத்துகிறது

கடிதம் தாங்கி வந்த
கிறுக்கல்களும் ஓவியங்களும்
உயிரோடு காட்சிப் படுத்துகிறது
உனது உணர்ச்சியினை...

கடிதத்தின் கடைசி வரிகள்

எனக்கான
அவளது கடிதத்தின்
கடைசி வரிகள்
தீர்மானிக்கப்படுவது
முற்றுப்புள்ளியில் அல்ல
இதழின் முத்தப் புள்ளியில்...

கைக்கு எட்டியது

கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாத நிலையில்
நான் இன்று...
என் விரல்களுக்கு
கிடைத்த உன்னிதழ்கள்
என்னிதழ்களுக்கு
எட்டாததில்...

ஓருயிராய்

ஈருடலான
நீயும் நானும்
ஓருடலாய்
ஓருயிராய் இங்கு
நம் குழந்தை...

குளிக்க ஆசை

குளித்து முடித்தும்
மீண்டும் குளிக்க ஆசை.
உனது தலை துவட்டலின்
சாரலில்...

குழந்தை

எங்களின்
அன்பின் உச்சத்திற்கு
கிடைத்த பரிசு
குழந்தை..

வெள்ளை நிற போர்க்களம்

அமைதிக்கான
வெள்ளை நிறக் களத்தில்
இருவரும் வெற்றி பெற்றிடும்
வினோதப் போராட்ட கள்ம்
படுக்கை...

காதலின் அன்போடும்...

குழந்தைகள்
தெய்வத்தின் ஆசி கொண்டு
மண்ணில் பிறக்கின்றனவாம்.
இங்கோ எங்களின்
காதலின் அன்போடும்...

சிவந்த மேனி

வெட்கத்தின் சிற(வ)ப்பையும்
காட்ட மறுக்கிறது
அவளது சிவந்த மேனி...

வெட்கம் தின்னும் இராட்சசன்

எனது வெட்கங்களை
பியித்து தின்னும் இராட்சசன்
உன் பார்வை...

படிப்பு

படிப்பு படிக்க
பணம் எங்கே இருக்கு...
படித்தபின்னால்
எதிர்பார்க்கும் வேலையை
இப்பொழுதே பார்க்கிறேன்.
நீ படித்துவிட்டு வா.
நீ தேடும் வேலையை
உனக்கு நான் தருகிறேன்...

பனைமரம்

தனியாக நிற்கும்
பனை மரத்தின்
விளங்காக் பயணம் தான்
ஏறத்தாழ
ஒரு தலைக் காதலிலும்...

செங்கல் சாமி - காதல்

குழந்தைகளுக்கு
கடவுளாய் தெரிந்திடும்
செங்கலாய்,
என் காதலும் ஏனோ
உனக்கு மட்டும்
செங்கலாய் வெறும் பார்வையில்...

விந்தை

கால் அடி ஆழக் கிணற்றில்
மூழ்கி உயிர் துறக்கும் விந்தை,
கால் அடி இதயத்தில்
மூழ்கும் சுயநினைவாய்....

கண்ணீர்

என்றுமில்லாமல்
இன்று எட்டிப் பார்க்கிறது
உன்னைப் பார்க்காத
ஏமாற்ற பரிதவிப்பில்
கண்ணீர்...

காதலின் உச்சம்

நம் காதலின்
உச்சத்தை கொண்டாடினோம்
தாம்பத்தியத்தில்...

காதலின் விசித்திர இரவுகள்.

படுக்கும் வரையில்
உறக்கம் கண் கட்டும்.
படுத்தால் ஏமாற்றி
பல் காட்டும்..

தலையணைக்கு
கை, கால் முளைத்து
அவள் உருமாறும்.

நினைவும் உருவம் கொண்டு
போர்வைக்குள் இறுக அணைக்கும்...

நாழிக்கொரு முறை
நகராத கடிகாரம் கண் பார்க்கும்...

மின்மினி ஒளி கண்டாலும்
விடிந்ததாய் எட்டிப் பார்க்கும்..

தொலைக்காட்சியின் அலைவரிசைகள்
நிலையின்றி நடை போடும்.

படுக்கையில் பயணிக்கும்
உடலும் தடம் புரளும்.

விரும்பிய நேரங்கள் உறக்கமற்று
விடியும் நேரம் நிலவோடு
கண் அயரும் காதலின்
காதலின் விசித்திர இரவுகள்.

மத்தாப்பு

உன் புன்னகைப் பொரிக்காய்
பொசுங்கிக் கருகும்
மத்தாப்பு நான்.

மஞ்சள் மழை

வெய்யிலினூடே பெய்யும்
மஞ்சள் மழையின்
ஆனந்தம் தானடி,
சொல்லாத காதலை
என்னுள்ளே வைத்து
உன்னிடம் பேசுகையில்...

கோமாளியாகும் வார்த்தைகள்

சகஜமான தோழியாய்
உன்னிடம் பேசிய
ஆயிரம் வார்த்தைகளும்
கம்பீரமாய் உன்னால் இரசிக்கப்படும்..

காதல் சொல்லிட
வருகையில் மட்டும்
ஏனோ திணறிப் போன
கோமாளியாய் சிரிக்கப்படுகிறது...

பட்டை தீட்டிய இடம்

பட்டை தீட்டிய இடத்திலே
கூர் பார்ப்பதாய்,
வரம் தரும் தேவதை உன்னிடமே
காதலை சொல்லிட எதிர்ப்பார்க்கிறேன்...

காட்டிக் கொடுக்கும் எண்ணிக்கை

உன்னைப் பற்றி
என்னமே இல்லையென
பொய் சொல்லிட
முடியவில்லை அன்பே..

உன்னைப் பற்றிய
எனது கவிதைகளின்
எண்ணிக்கையே
காட்டிக் கொடுத்துவிடும்...

என்னில் தன்னைக் காணும் அவள்

பிறரிடத்தில்
அதிகமாய் பேசுபவள் ஏனோ
அதிகமாய் பேசாத
என்னைத் தான்
பேசச் சொல்லி கேட்கிறாள்...

பூவாய் பூத்திடும்
புன்சிரிப்பின் சொந்தக்காரி,
பூட்டப்பட்ட என்னிதழ்களை
சிரிக்க வைத்து
இரசிக்கிறாள்...

எளிமையில் அழகி
படோபடத்தில் பேரழகி
எனக்கு உடை அணிவித்து
அழகு பார்க்கிறாள்...

அதிக காதல்
யார் எனப் பந்தயம்
நானே பெரியவன் என
ஒவ்வொன்றாய்
என் காதல் பெருமையை
எடுத்துக் கூற

வழக்கம் போலவே
என்னை ஜெய்க்க வைத்து
என் மகிழ்ச்சியில்
சந்தோசப்படுகிறாள்...

உறக்கம் கலையும் வரை பயணம்

எங்கு செல்ல வேண்டுமென
கேட்ட நடத்துனரிடம்,
எனது தோளில் சாய்ந்து
துயில் கொள்ளும்
என்னவளின் உறக்கம்
கலையும் தூரம்
பயணச் சீட்டு கேட்டதற்கு
ஏனோ முறைக்கிறார்....

சீட்டு

சீட்டு வாங்கியாச்சா
என நடத்துனர் கேட்கையில்
ஏனோ வாங்கிட
கேட்கத் துணிகிறது
நீ அமர்ந்த சீட்டினை...

பேருந்து

ஆறு சக்கர
தங்கரதம்
நீ பயணிக்கையில்...

உன் இதழ்

தேனின் ருசி பார்க்க
தேன் கூட்டிலே
இதழ் வைக்கும் தைரியம்
எனக்கு மட்டுமே..

தனிச் சிறப்பு

மலர்க் கண்காட்சியில்
எல்லோரும் உன்னைப் பார்ப்பதாய்
சங்கடப்படுகிறாய்..
இத்துணை பூக்களுக்கு அல்லாத
வெட்கம் கொண்ட மலரே
அது தானடி உன் தனிச் சிறப்பே..

தினமும் பிறப்பெடுக்கும் கோலம்

தினம் தினம்
இறந்து பிறப்பெடுக்க
தயாராகத் தான் இருக்கிறது..
நீ போடும்
உன் வீட்டுக் கோலம்..

நனைந்தேன் சிரிப்பில்

மழை ஓய்ந்த மாலையில்
மரத்தின் கீழ் அழைத்து
மரக்கிளை ஆட்டி
எனை நனைத்துச் சிரிக்கையில்,
தொப்பலாய் நனைந்து போனேன்
உன் சந்தோஷ சிரிப்பில்...

சிவப்பாகிறது

வலிக்கிறதோ இல்லையோ
நீ கடிக்கையில் மட்டும்
மேலும் சிவப்பாகிறது
ஆப்பிள்..

மருதாணி

எனது கன்னத்துக்கான
மருதாணி.
கருவா உனது
முத்தம் தானடா...

அணைப்பு

மழைக் கால தேநீராய்
மார்கழியில்
மங்கை உன் அணைப்பு...

சொல்லப்படாத காதல்

வழக்கம் போலவே
எல்லாம் தயாராய் இருந்தும்
அரங்கேற்றம் ஆகாத
கலைஞனின் விரக்தியில்
உன்னிடம் இன்றும்
சொல்லப்படாத காதல்...

என் வண்டி

எனக்கடுத்து
உன்னைச் சுமக்கும்
உரிமைத் தோள்கள்.
அதிலும் எனது
அருகாமையில் மட்டும்...

நான் தொலைத்த மௌனத்தை...

உன்னைப் பார்த்ததும்
மௌனமாகிப் போன
எந்தன் வார்த்தைகளை
தவற விட்டு,
ஏனோ இன்று
மெல்ல மூச்சுக் காற்றாய்
என் காதல் கசிகையில்,
நீ எடுத்து வைத்துக் கொண்டாய்
நான் தொலைத்த மௌனத்தை...

காத்து நிற்கும் பட்ட மரமாய்

ஒவ்வொரு கிளையாய் பட்டு
காய்ந்து விழும்
சூழ்நிலையின் முடிவிற்காய்
காத்து நிற்கும் பட்ட மரமாய்,
ஒவ்வொரு நாளும் பட்டுப்போய்
வாழ்க்கை முடிவை நோக்கிய நான்...

சிதறுண்டுப் போனது

முன்னறிவப்பற்ற
உன் பார்வைச் சூறாவளியில்
சிக்கி சிதறுண்டு போனது
எந்தன் பிரம்மச்சாரியம்..

வரம் வேண்டிடுது

உன் பல்லிடுக்கில்
சிக்கிக் கடிபடும் வேளையில்
உன் கழுத்துச் சங்கிலியாய்
உருமாற் வரம் வேண்டிடுது
எந்தன் மனம்...

நீ.. நான்..

உன் கை வளையல்களாய் நான்.
எனக்குள் பொருந்திய நீ.
உனது செயலில்
எனது சமாதானச் சிரிப்பு.
என் சிரிப்பொலியில் உன் புன்னகை...

கனவுக் குமிழ்கள்

அழகிய மழலை
சோப்பு நுரையில்
நீர்க் குமிழ் ஊதி,
ஒவ்வொரு குமிழையும்
உடைத்து மகிழும் இன்பம்,
என் ஒவ்வொரு விடியலையும்
உடைக்கும் உன்னுடனான
கனவுக் குமிழ்களிலும்...

Sunday 20 November, 2011

விடியலுக்காய் காத்திருக்கும் தெரு விளக்கோடு..

வழக்கம் போலவே
நான் படுக்கையில் படுத்ததும்
எழுந்து விடுகிறது படுக்கைவிட்டு
என் நினைவுகள்...

பூட்டப்பட்ட உடலைவிட்டே
வெளியேறிய நினைவிற்கு
பூட்டப் பட்ட
கதவுகள் பொருட்டல்ல...

வெளியேறி
வெறிச்சோடிய சாலையில் நிற்கையில்
வெளிச்சத்தில் அணைக்கிறது
என் சாயலின் தனிமையில்
தெருவிளக்கு...

அடி வைத்து
நடக்கத் தொடங்குகிறது
இரவுக்குள் மெல்ல...

அடிக்கடி பார்த்தும்
சலிக்காத காதல் படத்தை
பார்த்தபடி நடை போகிறது...

ஊரடங்கிப் போன
அர்த்த ஜாமத்தின்
சோம்பல் முறித்தபடியே,
நடை போட்டு அடைகிறது
பழக்கப்பட்ட நாயாய்
உனது வீட்டினை...

என் வருகைகளின் போது
ஜன்னல் வ்ழிப் பார்வையையும்
புன்னகைப் பரிசையும்
பெற்றுக் கொள்கிறது
நமது காதலின்
கடந்தகால நினைவிடம்...

களைப்பறியா உழைப்பாளி
என் நினைவுகள் என
தெரிந்து கொண்டது இரவும்..

உனது செய்கைகளை எல்லாம்
மறுசுழற்சியில் கண்டுவிட்டு
திரும்பி நடை போடுகிறது
கிளம்பிய இடம் சேர...

எந்தவொரு தடயமும் இன்றி
பயணத்தின் திருப்தியோடு
உறங்கிப் போகிறது,
அணைந்து போக
விடியலுக்காய் காத்திருக்கும்
தெரு விள
க்கோடு...

Friday 4 November, 2011

கோலம்

ஆரம்பத்தில்
புள்ளி வைக்கும்
அழகில் சொக்கிக் கிடந்த
என் இதயம்,
சிக்கிக் கொண்டது
கம்பி கோலத்தில்
கடைசியில்...

அழகி

அழகி எனும்
வார்த்தையின் எதிரில்
உன் பெயர் கொண்ட
அகராதி தேடுகிறேன்...

பார்வை

நீ தேவை இல்லை
என வீசியதில்
எனக்கு
சொந்தமாகிப் போனது
உன் பார்வை..

கருவிழி

அந்தக் கருவண்டு மட்டும்
எப்படி அந்த பூவிற்குள்ளே
வாழ்கிறது என,
உன் கருவிழி பார்த்து
கேட்டேவிட்டது
வண்டொன்று...

அர்த்தம் தேடி

ஏனோ உந்தன்
உதட்டின் சுழிப்பிற்கும்
அர்த்தம் தேடி
அலைகிறது எந்தன் இதயம்...

கால் சதவீதம்

உந்தன் அழகையும்
காதலையும் வருணிக்க,
எந்தன் வார்த்தைகளுக்கு
இன்னும் பக்குவம்
வந்து விடவில்லையோ.
எப்படிக் கூறினாலும்
கால் சதவீதம்
தாண்டவில்லையே..

மனப்பாடமான கவிதை

மரணத்தின்
கடைசி நொடி கேட்டாலும்
கூறும் அளவிற்கு
மனப்பாடமான கவிதையாய்,
அடிக்கடி படிக்கத் துடிக்கிறது
உன் பெயர் ...

தங்கம்

தங்கமே பிடிக்காத
எனக்குள்ளும் சில நேரம்
தங்கமாகிடத் தோணுகிறது..
உன் பற்களில் சிக்கிடும்
சங்கிலி பார்த்து..

பொறாமை

என்னைப் பார்த்து மழையும்
மழையைப் பார்த்து சூரியனும்
பொறாமை கொண்டுதான் நிற்கிறது..
உன்னை அணைக்கும் நேரங்களில்..

ரோஜா

பனியில்
மூழ்கிய ரோஜாவாய்
நீ குளித்து
தலைதுவட்டி வருகையில்..

உன்னைப் பற்றிய குறிப்புகள்

எனக்கான
வாழ்க்கை புத்தகத்தில்
பெரும்பாலும்
அச்சிடப் பட்டுள்ளதோ
உன்னைப் பற்றிய
குறிப்புகள் தானடி..

அழகு சேர்ப்பது

எனக்கு மேலும்
அழகு சேர்ப்பதில்
மூக்குத்தி, தோடு
புருவத்தின் வரிசையில்,
கன்னத்தில் பதிந்த
உன் இதழ்...

ஈடு

நான் பதித்த
இதழின் அச்சிற்க்கே
ஈடாகிப் போனதடி
உந்தன் நகக் கீறல்
எந்தன் முதுகில்...

சோம்பல்

நீ
சோம்பல் முறிக்கையில்
சுத்தமாய் முறிந்தே விடுகிறது
எந்தன் இதயம்..

அழகில் பொறாமை

சத்தியமாய் சொல்லடி.
எத்தனை தடவை
மாத்திருக்கிறாய்,
உன் அழகில்
பொறாமை கொண்டு
உடைந்த கண்ணாடியை..

இரண்டாம் கண்ணாடி

எனது அழகை
முழுமையாய் பார்க்கும்
இரண்டாம் கண்ணாடி.
நீ தானடா..

நீ

பொம்மைக்கும்
பிடித்த குழந்தையாய்
நீ..

தெரு பெண்கள்

பாவமடி
உன் தெரு பெண்கள்.
அனைத்து ஆண் பார்வையும்
தேடிடும் அழகியாய்
நீ இருக்கையில்..

உன்னில் மட்டும் தான்

மௌனங்களும்
உடல் அசைவுகளும்
கவிதையாகிப் போவது
உன்னில் மட்டும் தானடி...

பெயர்

கூப்பிடத் தான்
பெயர் வைத்துள்ளார்கள்
கண்மணியே உனக்கும்...
ஏனோ நேர் சொல்ல தைரியமற்று
நீ இல்லா
ஆள் அரவமற்ற இடத்தினுள்
உரக்க கத்திப் பார்க்கிறேன்...

நடிப்பு

எப்படியடி
உன்னால் மட்டும்
நடிக்க முடிகிறது
நட்பென்னும் போர்வையில்
காதலை மறைத்து...

Thursday 3 November, 2011

பாவம்

பிற உயிர்
வதைபடுவது பாவமாம்.
வேண்டாமடி உனக்கு
என் இதயம் படுத்தும் பாவம்.
போனால் போகட்டும்
வாழ்வளித்துவிடு
என் காதலுக்கு...

நடையோடு வார்த்தையும்

ஒரே மாதிரியான
சம்பவங்கள்
என் வாழ்வில் மட்டும்.
உன்னை நோக்கி சென்று
பார்வை கண்டு
அடங்கிப் போகும்
நடையோடு, வார்த்தையும்...

தவம்

யப்பப்பா
எவ்வளவு தவம் தான்
செய்ததோ
உந்தன் கைக்குட்டை...

இதயக் கருவறை.

ஈரைந்து மாதம்
சுமந்த கருவறைக்கடுத்து
அரை நூற்றாண்டு
உன்னைச் சுமக்க
காத்திருக்கிறது
என் இதயக் கருவறை.

எந்தன் கிறுக்கல்கள்...

நீ
படிக்கப்படும் வரையிலும்
கவிதையாகச் சித்தரிக்கப் படுகிறது
எந்தன் கிறுக்கல்கள்...
முடிக்கப்படா
பெரும் கவிதை தொகுப்பு
நீ..

புதையல்

காலம் கடந்து கிடைக்கும்
பொருட்கள் தாம்
புதையலாம்.
நீயும் புதையலைத் தான்
எதிர்ப் பார்க்கிறாயோ
காத்துக் கிடக்கும்
என் இதயத்தை...

நானொருவன் போதாதா..

ஏனடி இப்படி
குழந்தையையும் கெடுக்கிறாய்
முத்தம் கொடுத்து.
உன் முத்தத்திற்கு
ஏங்கிக் கிடக்கும்
நானொருவன் போதாதா..

குறுஞ்செய்தி வந்த பின்

மற்ற பகுதிகளை விட
உன் பகுதி தபால்காரன்
மிகப் பாவமடி.
கடிதங்கள் குறைந்து
குறுஞ்செய்தி வந்த பின்..

முதல் பார்வை

அதிகாலை பனியோடு
சில்லிட வைக்கிறது
அன்றைய நாளுக்கான
உந்தன் முதல் பார்வை.

வேண்டிடும் பழைய வாழ்க்கை...

இயந்திரதனமற்ற இயல்பு உலகம்.
நிலவொளியின் முற்றத்தின் உறக்கம்.
வாஞ்சனையான விசாரிப்புகள்.
பொய் வேசமிடாத புன்னகை.
அரட்டைகள் அரங்கேறும் திண்ணை.
மண் வாசனை துணைகொண்ட மழை.
தாத்தாவின் கண்டிப்பான பாசம்.
பாட்டியின் பாசக் கண்டிப்பு.
பொய்கூற வைக்கா அலைபேசி.
கணினி இல்லா சுதந்திர மனிதன்.
கூட்டுக் குடும்பத்தின் கூட்டாஞ்சோறு.
சுற்றம் அறிமுகம் கொண்ட தோழமை.
பிரதிபலன் பார்க்கா பங்காளிகள்.
பெரும் கதை கொண்ட ஒத்தையடிப் பாதை.
நினைவுகளை மெல்ல அசை போடும் மாட்டு வண்டிப் பயணம்.
அடுத்த ஊறும் மணக்கும் அம்மாவின் கை பக்குவம்.
உடலோடு உள்ளமும் பசியடங்கும் உபசரிப்பு.
உள்ளத்தில் வரும் வெளிப்படைப் பேச்சு.
வெள்ளந்தி மனிதர்களின் விசாரிப்பு கரிசனம்.
எழுத்துகள் தாங்கிய ஏக்க கடிதங்கள்.
ஊருக்கு பயந்த படபட காதல்.
இலை மறையான காமம்.
அலார கூச்சலற்ற சேவல் சத்தம்.
குளத்தங்கரை வேப்ப மரம்.
மனிதனை மனிதனாய் பார்த்த மனிதம்.

குறைப் பிரசவ வார்த்தை

பிரசவிக்க முடியா
வார்த்தையின் வலியோடு.
முனங்கிக் கொண்டிருக்கிறது
தொண்டைக்குழி...

எதிர்கொள்ளும்
அக்ரினையிடமும் கூறி
ஒத்திகைப் பார்க்கிறேன்
அதன் தலையாட்டல்களோடு...

உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
குறைப் பிரசவத்திலே
காதல் வார்த்தைகள்..

எப்படியும் ஒருநாளாவது
அறுவை சிகிச்சையில்
அறுத்தெறியும் முனைப்போடு
சுற்றிக் கொண்டிருக்கிறேன்...

நீ

சிற்பிகளும் கண்டிராத
அழகியல் அசைவுகள்
நீ...

Monday 24 October, 2011

ஆதிவாசி

நான் மட்டும் அணைக்கும்
உன் உடலை
உடையும் அணைக்க
குமுறும் இதயம்
ஆதிவாசியாய்
பிறப்பெடுக்க வேண்டியவன்
நான்...

மழை சாரல்

மழையில் நனைதலை விட
மழையின் சாரலில்
அதிகம் இன்பம் காணும்
இதயங்கள் சிலர்.
காதலின் நிஜங்களை விட
நினைவுகளில் இன்பம் காணும்
என்னைப் போல்...

சிதறடிக்கும் உன் நினைவு

பெருமழையில்
ஜன்னலின் தாழ்வார இடுக்கில்
நிரம்பி ஆர்ப்பரித்து விழுந்து,
வடிந்த பின்
சொட்டிக் கொண்டிருக்கும் துளியில்
என் கவனம்
சிதறடிக்கிறது உன் நினைவு...

மழையும் கண்ணீரும்

விழும் மழைத்துளியை போலவே
சுத்தமானது தான்
அரிதான ஆண்களின் கண்ணீர்.
ஏனோ இரண்டுமே மதிப்பின்றி
வீணாக்கப்படுகிறது...