Thursday 25 November, 2010

நினைவு தீக்குச்சி

வாழ்ந்த நிமிடங்கள் யாவும்
ஒவ்வொரு தீக் குச்சிகளாய்
என்னிதயத்தில் பத்திரமாய்...
உன் பெயர் கொண்டவளோ
உடல் வாகு, நடை உடையவளோ,
தென்றல் காற்றின் தொடுதலிலோ,
குழந்தை விரல் பற்றி நடக்கையிலோ,
நாம் வந்த பதிவை தாங்கி நிற்கும்
இடம் போகையிலோ,
இளம்பிள்ளையின் கெஞ்சல் பேச்சிலோ,
கண்ணில் குடியேறிப் போன கனவுகளிலோ,
பிடித்த பாடல் வரி பார்க்கையிலோ,
உன் அணைப்பை ஞாபகப்படுத்தும்
என் சட்டையின் இருக்கத்திலோ
அடக்க முடியா சிரிப்பின் கண்நீரிலோ,
படபடக்கும் பேச்சினில் தெறித்திடும்
எச்சில் துளியாய் மழைச் சாரலிலும்,
ஒவ்வொரு குச்சியாய் பற்றிட
காதல் நினைவுத் தீயில்
என்னிதயம் பற்றி
எரியத் தொடங்குகிறது அன்பே...

Saturday 20 November, 2010

தொலைந்து போன


நீ மௌனமாய் பார்த்திட்ட பார்வையில்
தேடிக்கொண்டிருக்கிறது என் இதயம்
உன் பார்வையில் தொலைந்துபோன
என் நிம்மதியை..

மூச்சின் உஷ்ணம்

என் காதுமடல் ஓரம்
உன் மூச்சுக் காற்றின் ஓசையில்
கையின் ரோமங்கள் யாவும்
பொசுங்கிப் போனது - உன்னால்
என்னில் வெளிப்பட்ட உஷ்ணத்தில்...
வேண்டாம் அன்பே - இனியொரு முறை
என்னை நெருங்கிடாதே காதலா
இம்முறை பொசுங்கிப் போவது
நானாய் கூட இருக்கலாம்...

எப்படி சொல்லுவேன்


உன் அணைப்பிற்காக
ஏங்கித் தவித்துத் கொண்டிருக்கும்
நான் எப்படி சொல்லுவேன்...
உன் அணைப்பின் இறுக்கத்திலும்
நெருக்கத்தின் தவிப்பிலும் நொந்து
ஏக்கப் பெருமூச்சோடு வெட்கப்பட்டு
முதுகுபக்கம் திரும்பி துடிக்க
தொடங்கியது என் இதயமென்று...

முத்தத்தின் சக்தி

என்னை வாரி அணைத்து
நெஞ்சில் புதைத்திடும் பொருட்டு,
மூச்சும் சில நொடிகள்
இறந்து பிறக்கும் அளவிற்கு
என்னை இறுக அணைத்து,
என் உச்சி முகர்ந்து
நீ தந்த முத்தத்தின் சுகம்
சில நொடிகள் தானாவென்று
சல்லிசாக எண்ணி விட்டேன்...
ஆனால் அதற்காக - என்
ஒவ்வொரு நொடித் தனிமைகளையும்
அந்தச்சுகத்திற்கே இரையாக்கிடும்
சக்தி உண்டென்று அப்பொழுது
தெரியவில்லையடா இந்த சிறுக்கிக்கு...

Wednesday 17 November, 2010

முத்தம்

காதலிக்க ஆரம்பிக்கும் முன்
பட்டினியாய் இருந்தேன்...
சிறிது காலத்தில் அவளின்
பார்வையை உணவாய் கொண்டேன்...
காதல் கூடிய பின்பு
அருகாமையில் வயிறு நிரப்பினேன்...
ஆனால்
மீண்டும் மீண்டும் பசிக்கும்
சாபத்தைப் பெற்றேன்...
முதன் முதலில் முத்தத்தில்
உன் இதழ்களைச் சுவைத்ததில்...

என் இதயம்


தேனேடுத்துச் சென்ற மலரில்
வேறொரு வண்டு தான்
அமர்ந்திடுமோ?
என்ற நிலையில்
நீ இருந்து சென்ற
என் இதயம்...

நான்


நிஜத்தை தொலைத்து விட்டு
நிழலான
உந்தன் நினைவுகளுடன்
கைகோர்த்து வாழும்
குருடன் நான்

தயக்கம்


வார்த்தைகள் சொல்லத்தான்
எத்தனிக்கிறேன் - ஏனோ
அடங்கி விடுகிறது...
உன் கண்ணின் மொழிக்கு முன்
இணையாவோமோ என்ற
தயக்கத்திலே...

காத்திருப்புகள்


உனது
ஒரு நொடிப்
பார்வைக்குத் தானடி
எனது ஓராயிரம் நிமிட
காத்திருப்புகள்...

வரி


சொத்திற்கு தானே வரி இடுவார்கள்...
அழகுக்கு வரி இல்லையே சகியே...
உன் உதட்டிற்கு இத்தனை
வரிகளா...

பருக்கள்


சமமான சாலையிலேயே சென்றிட்டால்
விரைவில் பயணமும் சலித்திடுமாம்...

உன்
கன்னமேன்னும் சாலையில்

என்
உதடுகள் பயணித்திடுகையில்

ஏற்ற
இறக்கமாய்
சிறு சிறு பருக்கள்
அதனால்
தானோ?

Sunday 14 November, 2010

முத்தம்

முத்தம்
அசைவம் தான் போலும்..
இதுநாள்வரை சைவமாய்
இருந்திட்ட நான்
அசைவத்திற்கு
மாறிவிட்டேன்...
இப்பொழுதெல்லாம்
சுவைத்திட தேடுவதெல்லாம்
உன் உதடுகளை மட்டும் தான்...
நீ தந்த முத்தத்தில்...

உண்மை


இன்று தானடி தெரிந்துகொண்டேன்
உன் தாவணி நெஞ்சைவிட்டு
ஏன் இறங்கவில்லை என்று...
ஒருமுறை உன்னை அணைத்ததற்கே
மறுமுறை வேண்டிடத் தோணுகையில்
நொடிப் பொழுதும் உன் அணைப்பிலிருக்கும்
தாவணியின் ஆசை நிதர்சன உண்மைதான்...

உசுப்பிவிட்டாய்

உன்னருகில் நானிருந்தும்
என்னை அணைக்காமல்,
தலையணையை அணைத்து
நித்திரையில் நீந்திய
உன் முதுகினில் படர்ந்து,
கேசத்தைக் கலைத்து,
தாடையின் ரோமத்தில்
என் கன்னம் உரசி,
கன்னத்தில் முத்தமிட்டு
உன் உறக்கத்தினை
கெடுத்தேன் என்பதற்காக,
இப்படியாடா செய்வது
என் காதுமடல் கடித்து
என்னுள் உள்ள என்னை
உசுப்பிவிட்டு - நீ மட்டும்
தூங்கச் செல்கிறாய்...

பொறாமையோ


இப்பொழுதெல்லாம்
என் மாராப்பின் போக்கே
சரியில்லை காதலா...
அடிக்கடி சரிந்து போகிறது
ஒருவேளை - நீ
என்மேல் படர்ந்து நெஞ்சோடு
அணைத்ததை பார்த்து,
போட்டியாளரை விரும்பாத
பொறாமையோ?

பிடிக்கும்

நிஜத்தில் பிடிக்காதது அனைத்தும்
காதலில் பிடிக்கத்தான் செய்கிறது...
உதட்டுச் சாயம் பிடிக்காதென்று
உன்னை திட்டி நோகடித்ததில்
கன்னியின் கண்கள் கலங்கிட,
விழிநீரை நிறுத்தும் பொருட்டு
என் மாரினில் சாய்த்திட்டேன்...
முகத்தினை புதைத்த படியே
நெஞ்சத்தில் இதயத்தின் நேராய்
சன்னமான ஒரு முத்தமிட்டதில்,
சட்டையில் பதிந்த உதட்டின்
தடம் மட்டும் ஏனோ பிடிக்கிறது
விரலால் வருடிக் கொடுக்க...


கலக்கம்


காதலிலே நான் படும்
வேதனைகளைக் கண்டு
கலங்கித் தவிக்கின்றது
என்னிதயம் - ஒருவேளை
நீ அங்கு இல்லை போலும்...
இருந்திருந்தால் கலங்கவா
செய்திடும் இதயம்...

சுமக்கவில்லை


மர பெஞ்சுகள் சுமந்த
நம் பெயரையும் காதலையும் கூட
நீ சுமக்க வில்லையடி...

காத்திருப்பு

காத்திருப்புகள் யாவும்
ஒரு நாள் கனியுமாம்...
உன் பார்வையில் விதைத்து
புன்னகையில் உரமிட்டு,
காத்திருப்பில் வளரவிட்டு,
பழுத்து மீண்டும் விதையாகி
பல்கிப் பெருகி - உன் நினைவுகள்
கூடிக் கொண்டே தாண்டி இருக்கிறது...

மிச்சம்

உன் பெயரினை விட
அழகான வார்த்தை வேண்டி
அகராதி புரட்டி பார்த்தேன்...
உன் பெயரினை விடவும்
அழகில்லை என நான்
திருப்தியின்றி ஒதுக்கி புறம்தள்ளிய
வார்த்தைகளின் பகைமையை
சேமித்தது தானடி மிச்சம்...

Saturday 13 November, 2010

புன்னகை


பூக்களுக்குப் பதில்
உன் புன்னகையை விதைக்க
எண்ணுகிறேன் அன்பே...
ஒரு முறை உன் புன்னகை
பார்த்த முதலே
எனக்கான வாழ்க்கை
பூக்கத் தொடங்கிவிட்டதே...

அவ்வளவு ஆசையா


தரமறுக்கும் குழந்தையுடன்
வம்படியாய் முத்தம் கேட்கிறாய்...
இம் என்ற சொல்லில் - உன்
கன்னம் சிவக்க வைத்திட இருக்கும்
என்னை அருகாமையில் வைத்துக்கொண்டே..
என் ஏக்கத்தின் சினத்தைப் பார்த்திட
அவ்வளவு ஆசையா அன்பே...

யாப்பு


கவிதை எழுத
யாப்பு வேண்டுமாம்...
என் கவிதைக்கு காரணமோ
காதலில்
நீ தந்த
ஆப்பு தாண்டி காரணம்...

கொஞ்சல்


நான் செய்த தவறுக்கு,
திட்டினால் கண் கலங்குவேன் என்று
உன்னை யாரடா கொஞ்சச் சொன்னது.
இப்பொழுது பாரடா
அடுத்தடுத்து தவறு செய்திட
துடிக்கிறது மனம்
உன் கொஞ்சலுக்காகவே...

நகையாடுகிறது

உன் உதட்டினைக் கவ்வி
முத்தமிட்ட நொடியில்,
என் மனம்
என்னைப் பார்த்து
எள்ளி நகையாடுகிறது...
எச்சில் பட்டதை
உண்ணாது போகும் பழக்கம்
இப்போழுதெங்கே போனதென்று...

கிடைத்திடுமா

சிவன்கோவில் பின்பக்கம்
அமைதியானதொரு சாலை...

என் வாழ்வில் எத்துணையோ முறை
தனியாக நானும்,
காதலிக்கும் நாட்களில் உன்னுடனும்,
இன்று மணமாகிப் பின்
உன் கரம் பிடித்தும்,
அந்த வழியே தான் கடக்கிறேன்...

சிறந்தது எதுவென்று கேட்கையில்
காதல் நாட்களில் நடந்தது தான்
மிகவும் பிடிக்கும் என்பேன்...

முன்பின் தெரியாத முகமும் கூட
தெரிந்த முகமாய் மிரட்டிடும்,

அடிக்கொரு முறை இதயம்
நொடிக்கு சதம் துடித்திடும்,

மரத்தின் கிளைகள் கூட
நாம் செல்லும் திசை காட்டி
தகவல் தருவதாய் தோன்றிடும்,

சுவர்களுக்கும் கண்கள் முளைத்து
நம்மையே பார்ப்பதாய் பிரம்மை,

வானின் செல்லும் பறவைகள் கூட
நம்மைப் பற்றி தகவல் சொல்வதாய்
எண்ணி பயந்த நிமிடங்கள்,

விட்டிற்கு சென்ற பின்னும்
சகஜ நிலைக்கு திரும்ப
மறுத்தே படபடக்கும் இதயம்,

ஆனாலும் ருசி கண்ட பூனையாய்
மீண்டும் உன்னுடன் நடந்திட
ஒற்றைக் காலில் தவம் கிடக்கும் காதல்,

இவை யாவும் இனிஒருபொழுதும்
கிடைப்பதில்லை என் வாழ்வில்..

கடவுளுடன் கேள்வி


கடவுளைக் கண்டு
கேள்விகள் கேட்டிட அழைத்தேன்...
என்னை ஏன் படைத்தாய்
எனக்கென சொந்தமாய் ஏதுமின்றி...

பார்த்திட நினைப்பதை கண்டிடாமல்
அவளைக் கண்டிடுவதையே
முதலாய தொழிலாய் செய்திடும் கண்கள்...

வார்த்தைகளுக்கு பதிலாய்
அவளது பெயரினையே

மந்திரமாய்
ஜெபித்திடும் உதடுகள்...

கவிதை எழுத மறுத்து
அவளது பெயரினை எழுதிடும் எண்ணம்...

என் சுயகுறிப்பு எழுதிடாமல்
அவளைப் பற்றிய விவரங்களை
எழுதித் தள்ளும் கைகள்...

பாடங்களைக் கேட்டிடாமல்
அவள் குரலினை வேதமாய்
தேடிக் கேட்டிடும் செவிகள்...

எனக்கென சிறிதும் நகர்ந்திடாமல்
அவளின் நினைவுகளை எண்ணியபடியே
ஊதாரித்தனமாய் கரைந்திடும் நிமிடங்கள்...

நான் வாழ துடிக்க மறந்து
அவளின் உருவத்தை தன்னுள் வைத்து
பெரு மூச்சு விட்டிடும் இதயம்...

என எனக்காய் படைத்தவை யாவும்
எனக்குச் சொந்தமில்லா நிலையில்,
எனக்காய் நீர் படைத்தது
எதுவென்று கேட்க...

அட மூடா இன்னுமா புரியவில்லை
அவளைப் படைத்ததே உனக்காய் தானே,
உன்னுள் உள்ளவை யாவும் அவளைக்
கண்டுகொண்டு சொந்தம் கொண்டாட
உனக்கின்னும் புரியவில்லையா?
என புன்னகைத்தே மறைந்து போனார்..

தட்டுப்பாடு

உன் நினைவுகளுடன்
கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்
இரண்டு நாட்களுக்கு
நினைவின் பிடியிலிருந்து
என்னை விடிவிக்கும் பொருட்டு
கவிதை எழுத தாளின்றி
பேப்பர் தட்டுப் பாடம்...

பெருமூச்சு


ஈரைந்து மாதம் சுமந்து
பிரசவித்த தாயின் பெருமூச்சினை
என்னில் இன்று கண்டேனடி
சேர்த்து வைத்திருந்த காதலை
உன்னிடம் சொல்லிவிட்ட நொடியில்...

பொக்கிஷம்

பெண்கள் வேண்டாமென்று
தூக்கி எறிந்த பொருட்கள் யாவும்
ஏதோ ஒரு ஆணின் இல்லத்தில்
பத்திரப் படுத்தப் பட்டிருக்கும்
நினைவின் பொக்கிஷமாய்.....
அவர்களால் தூக்கி எறியப்பட்ட
ஆண்களின் காதலும் விதிவிலக்கல்ல...

ஓரவஞ்சனை

கடவுளுக்கும் ஆண்களிடத்தில்
ஏனிந்த ஓரவஞ்சனை - பார்த்த
பார்வையில் இதயம் பறித்திடும்
வித்தையை யாரிடமும் கற்றிடாமல்
பிறக்கும் பொழுதே
வரமாய் பெண்களுக்கு...

Thursday 11 November, 2010

தோல்வி காதலில் அல்ல

இதயங்கள் கூடிய மாநாட்டில்
காதலில் வென்ற இதயங்களை
கை தூக்கிடச் சொன்னார்கள்...

நானும் தூக்கிடுவதைப் பார்த்து
உன் வாழ்வில் தான்
காதல் கை கூடவில்லைஎன
இடை மறித்துத் கேட்டது
என்னையறிந்த இதயம் ஒன்று...

நல்ல முகம் பார்த்து
இதயத்தில் குடியேறும் காதலில்
தூய மனம் பார்த்து கூடிய
காதல் தான் எனது...

காதலிக்கும் காலத்தில்
தொட்டதிற்கெல்லாம் சண்டையிடும்
காதல்களுக்கு மத்தியில்
சண்டையே வராதா என்று
எங்களையே ஏக்கம் கொள்ளசெய்த
காதல் தான் எனது...

இவர்களின் காதலின் சுகத்தை
நாமும் பெற்றிட மாட்டோமா?
இப்படியே இந்த நொடியிலேயே
நின்றிட மாட்டோமோ என்று
காலத்தையும் சஞ்சலப் படுத்திய
காதல் தான் எனது...

இதுவா காதல் என்ற
எழுந்த கேள்விகளுக்கு நடுவில்
இதுவல்லவா காதல் என்று
கேள்விக்கு ஆச்சரியக் குறியோடு
முற்றுப் புள்ளி வைத்திட்ட
காதல் தான் எனது....

காதலித்து
திருமணத்திற்குப் பின்
காதலைத் தொலைத்து விட்டு
காதலன் காதலியாய் இல்லாமல்
கணவன் மனைவியை வாழும்
இன்றைய காலத்து மனங்களில்,,

காதல் தந்த நினைவுகளை
நெஞ்சில் புதைத்து கொண்டாடி
அதன் நினைவுகளிலே வாழும்
என் காதல் சிறந்ததே...

என் தோல்வி காதலில் அல்ல...
வாழ்வில் அவளைப்
பெற முடியாததில் மட்டுமே...

வித்தியாசம்

உன் கழுத்தினில் தொங்கிடும்
தாலிக் கயிற்றில் தானடி
அன்பே உன் வாழ்க்கையும்
என் காதலும் இருக்கிறது...
ஒரு சின்ன வித்தியாசம்
அக்கயிற்றில் உன் வாழ்க்கை
ஊஞ்சலில் ஆடிட
என் காதலோ
தூக்கில் தொங்குகிறது..

முயற்ச்சித்திருப்பேனடி


உனக்கு பிடித்தது பிடிக்காதது
எதுவென்று தெரிந்திருந்த எனக்கு
எதுவெல்லாம் பிடிக்காமல் போகுமென்பதை
தெரிந்துகொள்ள மறந்து விட்டேனடி...
தெரிந்துருந்தால் நானும் அத்தகைய
வரிசையில் இருந்து தப்பிக்க
சிறிதேனும் முயற்ச்சித்திருப்பேனடி...

காதல் வாழ்க்கையே போதுமென்பேன்

உன் கொஞ்சல் பேச்சுகளை
எண்ணியே கரைந்து போய்விடும்
பெரும்பாலான தனிமைப் பொழுதுகள்...

என் தோளில் சாய்ந்தபடியே
எண்ணிப் பார்க்க மறந்துபோன
நிமிடங்களை தின்று தீர்த்த பேச்சுகள்...

சில்மீஷப் பார்வை தீண்டல்கள்...
எல்லை மீரா காதல் களியாட்டங்கள்...

எண்ணிக்கையில் தொடங்கிடச் செய்து
எண்ணம் தடுத்திடும் வரையிலான
காதல் முத்தங்கள்...

அர்த்தமற்ற கோபத்தினை
முடித்து வைத்திடும் அணைப்புகள்...

விரல் சொடுக்கியபடியே
நீ தெரிவித்திடும் விருப்பங்கள்...

நேரமாகிவிட்டதென கடிகாரத்திடம்
சொல்லிவிட்டு என் தோள் சாய்ந்தபடியே
நீ செய்திட்ட நிமிட நீட்டிப்புகள்....

இதோடு கடைசிஎன சொல்லிச் சொல்லியே
நடுநிசி வரையிலான குறுஞ்செய்திகள்...

தனக்கான விருப்பங்கள் இன்றியும்
எனக்காய் பிடித்ததை காட்டிடும் அன்பும்...

காய்ச்சலில் வீழ்ந்த என்னைவிட
என்னை எண்ணியபடியே
சோர்ந்து போன உன் முகமும்...

என் சிறுவயது புகைப்படம் பார்த்ததும்
நானும் உன்னிடத்தில் பெற்றிடாத
முத்தங்களும், கொஞ்சல்களும், வர்ணனைகளும்....

எதிர்காலம் முழுவதும் எல்லாம்
அனாயசயமாய் வார்த்தைகளிலே
வாழ்ந்து கழித்த நிமிடங்கள்...

என இப்படியே வாழ்ந்திடத் தோணுதடி
இதில் எவையேனும் ஒன்றினையும்
அனுபவித்திட முடியுமாஎன்ற எண்ணத்திலே
காதல் வாழ்க்கையே போதுமென
என்னிதயம் கெஞ்சி மன்றாடுகிறது என்னிடம்
திருமணம் பற்றி நீ பேசிய நொடிகளில்....

Wednesday 10 November, 2010

அறுவடை


உந்தன் நினைவுகள் என்ன
அட்சய பாத்திரமா பெண்ணே...

வார்த்தையால் கவிதை கொண்டு

அறுவடை செய்து விட்டேறிந்தாலும்

வளர்ந்து கொண்டே தானிருக்கிறது...

Wednesday 3 November, 2010

வெகுமதி


அப்படி என்னடி
வெகுமதி அளித்தாய்
என் இதயத்திற்கு...
நொடிக்கொரு முறை
என்னில் இருந்துகொண்டு
எனக்காய் துடிக்க மறந்து
உன்னையே நினைக்க?

வழி மறிக்கின்றன

தேவதை உன்னை
சாமி கும்பிட
அழைத்துப் போகையில்
சிற்பங்கள் யாவும்
வழி மறிக்கின்றன...
எங்களை விட
அழகிய சிற்பம் மூலம்
எங்களை விரட்டவா என்று...

குரு - சிஷ்யன்

உன்னை குருவாய் நினைத்திடும்
என்னை சிஷ்யனாய் ஏற்றுக்கொள்...
உனக்கு தெரிந்தவை யாவும்
கற்றுக்கொடு இந்த மாணவனுக்கு
என்ற கட்டுப்பாடு ஏதுமில்லை...
என் உத்தரவின்றி எப்படி
மனதில் காதலை விதைத்தாய்
எனபதினை மட்டும் கற்றுக்கொடு..
குருவை விஞ்சும் சிஷ்யனாய்
மாறிக்காட்டுகிறேன் விரைவிலே...

தனிமை


தனிமை என்னை
ஆட்கொள்ளும் வேளையில்,
உன் நினைவுகள்
மிகச் சரியாய்
தலை தூக்கி விடுகிறதே?

உனக்கேன் பொறாமை

உனக்கேன் பொறாமை என
சண்டை இட ஆரம்பித்துவிட்டாள்
கடிகாரத்துடன் என் காதலி...
தனிமையில் இருக்கும் பொழுது
பிடித்துத் தள்ளிட்டாலும் நகர்ந்திடாமல்.
கண்மூடி கண் திறக்கும்
நொடியில் கரைந்து போகிறாய்
என்னுடன் இருக்கையில் மட்டுமென...