Saturday, 26 February, 2011

உனக்காக வளர்த்த ஆசைகள் எல்லாம்
நீ எங்கே என்று கேட்குதடி..
நான் கொண்ட தேகம் மண்ணோடு போனால்
உன் நினைவில் மீண்டு உயிர்த்தெழுமே...

ஏக்கம்

விடை பெறும் நேரம் கண்டு
மருகும் இதயம்,
சில நேரம் அதற்காக
ஏங்கவும் செய்கிறது...
விடை பெற்று செல்லும் பொழுது
என்னைக் கண்ணுக்குளேயே
பூட்டி வைத்திருந்தும்,
காணத் துடித்திடும்
உனது பார்வையிலும்,
எனது திசை பார்த்திடும்
தலை திருப்பலிலும்,
உனது அதிகப்படியான
அடங்காத காதலைக் கண்டிட...

காத்திருப்பு

கடிகாரத்தின்
ஒவ்வொரு நொடியும்
நகர்த்தலாக..
உனது வருகைக்காய்
காத்திருக்கும் எனக்கு மட்டும்
மனம் படபடக்க
பெருகிச் செல்லும்
எடைக் கற்களாய்...

உன் காதலால்

அளவுக்கு மீறிய
உந்தன் நினைவுகளால்
நிரம்பி வழியும்
இன்பக் காதலில்,
எந்தன் மேனியும்
சுற்றமும் ஒருவித
பூரிப்போடு தான்
இயங்குகிறது ஒளிவீசும்
தாமரை இலைத் தண்ணீராய்...

ஆசை

உன் முகம் படரும்
கூந்தலாய்
மாறிப் போகவும் ஆசை
உன் விரலில் களையப்பட...

ஆவல்

நீ எப்பொழுது
தூங்குவாயென
காத்திருக்கிறதடி அன்பே
உனது கூந்தல்
முகம் படரும் ஆவலில்.
முழித்திருக்கும் போது தான்
ஒதுக்கி விடுகிறதே
உனது விரல்கள்...

வேண்டுகிறது

நீ துணி காயப்போட
ஆடை உதறியதில்
தெறித்த சாரலில்
சிலாகித்து தானடி போனேன்..
உன் அருகாமையோடு
குளுமையுமாய் திரும்பவும்
உள்ளம் வேண்டுகிறது...

புருவங்கள்

தற்காலிகமானதை எல்லாம்
வானவில் என்றால்
உனது புருவங்களை
என்னவென்று சொல்ல...

கெஞ்சல்

எழுத்துக்கள்
உயிரும் மெய்யும்
எனது பெயரில்
சேர்த்துக் கொள்ள
கெஞ்சுகிறது அன்பே,
உன் இதழ்கள்
என் பெயர்
உச்சரிக்கும் பொருட்டு..

பாக்கியம்

பிள்ளைகள் பெறாமலே
பெயர் வைத்துக் கொஞ்சும்
பாக்கியம் கொண்டவன் நான்
என் காதலிக்கு
செல்லப் பெயர் வைத்ததில்...

கர்வம்

யார் சொல்லி அழைத்தாலும்
எனது மூளைக்கு ஏற்றி
திரும்ப மறுக்கிறது அன்பே
எனது பெயர்..
நீ சொல்லி அழைத்தது போல்
இனிமை இல்லையென்ற
கர்வத்தில்...

முறையீடு

உன்னைப் பிடித்த
உன்னவளுக்கு என்னைப்
பிடிக்கவில்லையா என
முறையிடுகிறது அன்பே
எனது பெயர்..
செல்லப் பெயரில் நீ அழைக்க
அதுக்காகப்பட்ட தனிமையில்...

என் பெயர் நீ அழைக்க

சிலநேரம்
மயக்கத்தில் உள்ளவரை
தட்டி எழுப்பிட வேண்டித் தான்
பெயர் சொல்லி அழைப்பார்கள்...
முதல் முறையாய்
மயக்க நிலையில்
சொக்கிப் போனேனடி சகியே
என் பெயர் நீ அழைக்க .

காதல்

லட்சம் கவிதைகள்
தனக்குள் வைத்துக் கொண்டும்
கர்வமில்லா மூன்றெழுத்து
அன்புக் களஞ்சியம்
காதல்...

வேண்டுதல்

உண்மையான
அன்பை வேண்டிடும்
இதயத்தின் வெளிப்பாடு...
உன் உள்ளங்கையில் வைத்து
என்னைத் தாங்கிட கூட
வேணாமடி காதலி,
உன் உள்ளத்திலே
என் உண்மைக் காதல்,
உன் உயிருள்ளவரை
உணர்வோடிருந்தாலே போதும்...

பெயர்

படித்தவருக்கோ
வாசித்தவருக்கோ
புரிந்திடாமல்,
நெஞ்சில் நேசிக்கும்
எனக்கு மட்டும் இனித்திடும்
ஒரு வரிக் கவிதை
உனது பெயர்...

பெயர்

உனது பேனையில் எழுத்தாகி
வார்த்தையாகும் பொழுதே
இவ்வளவு அழகென்றால்,
உன் உதட்டில்
வார்த்தையாகி பிறக்கும்
எனது பெயருக்குள் தான்
எத்தனை அழகு
ஒளிந்துள்ளது என தெரிய
கூறடி அன்பே
ஒருமுறை எனது பெயரை...

Wednesday, 23 February, 2011

இமைகள்

வண்ணத்துப் பூச்சியின்
படபடக்கும்
சிறகினைப் பார்த்து
இப்படி பூரிக்கிறாயேடி..
அடி அசடே...
கண்ணாடி பாரடி தெரியும்..
வண்ணத்துப் பூச்சியா?
உன்னிமைகளா?

அழகு எதுவென்று..

அழகு

அழகும் சில நேரம்
பிரச்சனை தான் போலும்..
காற்றில் அடங்க மறுத்து
உன் முகத்தில் உலாவிட,
உன் விரலில் ஒதுக்கப்படுகையில்
அழகாகும் கூந்தலே,
சில நேரம் நான் இரசிக்க
உன் முகம் மறைக்கிறதே...

பொறாமை

எனக்கு முன்னதாய்
உன் கூந்தல் ஏறிவிட்டதாய்
பிதற்றிய ரோஜாவும்,
என்னைப் பார்த்து
பொறாமை கொண்டிருக்கும்,

வாடி போன பின்
உன்னை விட்டுப் பிரிகையில்,
உன் நெஞ்சில் என்னை
சூடிக்கொண்டது பார்த்து...

கூந்தல்

கிட்டத்தட்ட நானும்
உன் கூந்தலும் ஒன்று தானடி..
உன் முகம் படர வரும் கூந்தல்
ஒதுக்கித் தள்ளப்படுவதைப் போலவே
உன்னைத் தேடி வரும்
என் காதலும்...
இரண்டுமே உன் அழகிற்க்காய் என்று
ஏனடி புரியவில்லை உனக்கு..

வியர்வை

பூவின் மேல்
பனித்துளி அழகாமடி..
வியர்க்கும் படி
சிறிது நேரம்
நடை பயிற்சி செய்யடி..
நானும் பார்க்க வேண்டும்
அந்த அழகினை...

இயல்பு

இயல்பான ஒன்றே
ரசிக்கப்படும் என்பதை
இன்று தானடி கண்டு கொண்டேன்...
உனது ஒவ்வொரு செய்கையும்
வரிகளாய் மொழி மாற்றப்பட்டு
கவிதையாய் ரசிக்கப் படும் பொழுது...

இடையன்

எனது நாளின்
ஒவ்வொரு விடியலிருந்து
இரவு வரையிலான
பொழுதுகளை,
மிக அழகாய்
ஓட்டிச் சென்று காத்திடும்
நல்லதொரு இடையனடி
உனது நினைவுகள்...

நினைவுகள்

அடங்காப் பசியோடு
இரையைக் கண்ட பறவையாய்,
கொத்தி உண்கிறது அன்பே
எனது தனிமைகளை
உனது நினைவுகள்...
துடிக்கும்
இரைப் பிண்டமாய் நானும்,
வெளியேறும் குருதியாய்
எனது கண்ணீரும்...

Tuesday, 22 February, 2011

முன்னுரை

உனது ஒவ்வொரு செயலும்
கவிதையாய் எனக்கு.
ஒரு முன்னுரை
கொடுத்துவிடடி மொத்தமாய்
உன்னில் உள்ள
கவிதைகளுக்கு எல்லாம்...

மௌனம்

விழியிலே எனக்கு
காதலைக் கற்றுத் தந்தவளுக்கு
அதை நானும்
திருப்பிச் சொல்கையில்
புரிந்து கொள்ள இவ்வளவு
தாமதமா அன்பே...
இல்லை உனது
மௌனச் சுமையை
தாங்கி மருகும்
என்னிலை காணும் ஆவலா?

mozhi

ஒரு தலைக் காதல்
என வேண்டுமானாலும்
நிருபிக்கலாமடி
உனது விழி மொழி வைத்து...
நம் காதலென
பறை சாற்றிட தேவைப்படுவதோ
உன் இதழ் மொழி தானடி...

உப்பு

அதிக உப்பு
உடலுக்கு ஆகாதென்று
எப்பொழுதும் சொல்வாயடி
என்னுடன் நீ இருக்கையில்...
அதனால் தான்
வெளி ஏற்றுகிறாயோ
உப்பினை என்னில் இருந்து
கண்ணீராய்..
என்னுடன் நீ
இல்லாத பொழுதும்
உன் பிரிவில்...

எதிர்பார்ப்பு

என் பெயரினை
எப்படிச் சொல்லவதென்று
பண்பில் நீ நினைக்க...
எதிர்ப் பார்க்கிறது
என் இதயம்,
உன் கொஞ்சும்
காதல் மொழியில்
கேட்டு ரசிக்க...

கவிதை

எந்தக் கவிதையும்
படித்ததும்,
புரிந்தும்,
பிடித்ததுமாய்
இல்லையடி சகியே
உன் பெயரைப் போல..

பெயர்

நீ சொல்லும் பொழுது தானடி
என்னைத் திட்டும் வார்த்தைகளும்
ரசிக்கப் படுகின்றன.
அழகு வார்த்தைகள் இன்னும்
அழகாகிப் போகிறது...
ஏனோ எனது பெயர் மட்டும்
விசும்பலில் மறைகிறது...
பெயரை தவிர்த்து
நீ என்னை அழைக்கும்
செல்லப் பெயர்களில்...

பார்வை

நேரமாகிவிட்டதென
சொல்லிச் சொல்லி
என்னுடன் நீ இருந்த பல
அரை மணி நிமிடங்கள் கூட
நினைவில் இல்லையடி..
போகும் பொழுது
நீ பார்த்த ஆசையினது
காதல் ஏக்கப் பார்வை
தவிர்த்து...

உயிர் உறையும் நேரம்

காதலைச் சொல்லி
புரியவைத்தாய்
மனம் உறைந்த நேரத்தை.
இப்பொழுது
சொல்லாமல் புரியவைத்தாய்
உயிர் உறையும் நேரத்தை
உன் பிரிவில்...

Monday, 21 February, 2011

நினைவுகள்

பூமியை சுற்றும்
குளுமை தரும்
நிலவாய்
என்னைச் சுற்றும்
உன் காதல்
நினைவுகள்...

வெட்கம்

உன்னிடம்
எனக்காக மட்டும்
காத்திருக்கும்
அழகு தேவதை...

தேனீக்கள்

உன் பேச்சினைக் கேட்க
ஆவலோடு காத்திருக்கும்
தேனீக்கள்...
பேசுகையில் தெறித்திடும்
எச்சில் துளிகளுக்காக...
நேரடியாகவே
தேனெடுத்து விடலாமென்ற
நோக்கில்...

ஏக்கம்

நீ அடிக்கடி ஆடை
சரி செய்திடும் போதெல்லாம்
உன்னைத் தழுவ
இயலா ஏக்கத்தில்,
நகர்ந்து போகிறது காற்றும்
ஒருவித ஏக்க
வெப்ப மூச்சுக் காற்றோடு...

Thursday, 10 February, 2011

புதிய உலகம்

என்னை தனியே விடுத்துச் செல்லும்
என்னுயிர் எனச் சொல்லி
உன்னைப் பிரித்துப் பார்க்க
மனமில்லையடி எனக்கு...

நிழலைத் தொலைத்து
நிலையில்லா ஓடையாய்
தவித்த எனக்கு
உற்ற தோணியாகி,
உரித்தான தோழியாக,
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னோடு சேர்ந்திடும்
நிழலானாய்...

முடிந்து போன வாழ்க்கையென
முற்றுப்புள்ளி வைத்த என்னில்
முழுமையாய் ஆட்கொண்டாய்
முழுமனதாய் உனதாக்கினாய்....

உண்மையான அன்பிற்கு
உருவம் பொருட்டில்லை என
உன்னத மனதிலே ஒற்றிக்கொள்ள
உரிமை தந்த எனக்குரியவளே...

புதிதாய் பூக்க நிற்கும் காதலுக்கு
புன்முறுவல் காட்டிடத் தெரியவில்லை...
பட்டுப் போன செடிக்கு நீரெதற்கு,
விதி கண்ட கைம்பெண்ணிற்கு
வண்ணமாய் சேலை எதற்கு,
என எனக்கான கேள்விகள்
எனைச் சுற்றிய வேலியாய் என்னுள்ளே...

உன் அன்பென்னும் மழைக்கு
தாக்குப் பிடிக்கத் தெரியவில்லை அன்பே,
பட்டுப் போனபடியே வாடி நிற்க...
பாதியில் தொலைந்த பார்வையை
திரும்பப் பெற யாருக்கு ஆசையில்லை...

உன் உரிமைப் பேச்சும்
கள்ளமில்லா அன்பும்
எதிர்பார்ப்பில்லா அக்கறையும்
மெல்ல மெல்ல உரமிட
காதல் துளிர வித்திட்டாய்...

நாட்கள் அதிகரிக்க
உன் அடைமழை அன்பில்
தானாகவே கழன்று போனது
என்னைப் பிணைத்திருந்த கேள்விகளும்...

மண் முட்டி வளர்த்தோங்கும்
புது வெளிச்சம் பார்த்திட
தளிராய் மெல்ல துளிர்த்தது
காதல் புதிதாய் என்னுள்ளே...

வலிகள் வடுவாய் மாறிட
தயக்கங்கள் தானாய் விலக,
ஏக்கங்கள் உன்னிடம் சரணடைய,
உன்னை முழுதாய் எனதாக்கி
இன்று நாமாக்கி போகின்றோம்...

தொலைத்த வலிகள் தெரிந்தவனாய்
உன்னை காக்கும் வழி புரிந்தவனாய்
காதலை இறுகப் பிடித்துள்ளேன்
என் இதயக் கரத்தினுள்...

மறுமுறையும் தொலைத்து தவிக்க
நானொன்றும் அறிவீலி இல்லை.
நிருபிப்பேன் கரம் பிடித்து
உன் காதல் என்னைப் பிடித்ததில்...

ஜென்மங்களில் நம்பிக்கை
இன்றுவரை இல்லையடி எனக்கு...
வாடி என் காதல் துணைவியே
வாழ்ந்துவிடுவோம் காதலின்
இனிமைகளை மொத்தமாய்
இப்பிறவியிலேயே...

கனவு

ஒரே கனவே
திரும்பத் திரும்ப வந்திட
ஏதேனும் சாத்தியமுண்டா?
தெரிந்தவர்கள் கூறுங்கள் சீக்கரம்.
நிஜத்தில் பிழையான ஒன்று
இன்று நடந்தேறியது
எங்கள் திருமணம்...

விழிகள்

ஒலி இன்றி
பேசிடும் இதழ்கள்
உன் விழிகள்...

இறுக்கம்

ஒவ்வொரு நாளும்
உயர்ந்து வரும் காதலை
நீ கூறாமலே
தெரிந்து கொண்டேனடி
நீ விரல் பற்றும்
இறுக்கத்திலே...

உறக்கம்

விரோதியாகிப் போயிருந்த
உறக்கமும் என்னை
சீக்கரமே ஆட்கொள்கிறது அன்பே...
உறக்கத்திற்கும் உன்னைப்
பிடித்துவிட்டது போலும்...
கனவிலே நீ என்னைக்
கொஞ்சும் மொழி பார்த்து...

காதல் பார்வை

நேர் எதிரே இருந்தும்
காதல் மொழி
பேச முடியா நேரத்தில்,
விடைபெறும் பொழுது
உன் கண்கள் பிரசவிக்கும்
காதல் பார்வை
ஒன்றே போதுமடி,
அத்துணை வார்த்தைகளையும்
மண்டியிடச் செய்திடும்...

இனிப்பு

தினம் தினம்
அதிகமாய் இனிப்பு
எடுத்துக் கொள்ள கூடாது.
உடலுக்கு ஆகாதாம்...
மருத்துவர் திட்டுகிறார்.
அவருக்கு
எப்படிப் தெரியும் அன்பே...
நான் உன்
இதழ்கள் சுவைப்பது...

பூவின் ஆசை

என்னைச் சூடி
அழகுபார்த்த உன்னை,
நானும் சூடி
அழகு பார்க்க ஆசை...
இப்படிக்கு
ரோஜா...

அழகு

ஒரே நாள் ஆயுள் என்பதால்
பூத்துக் குலுங்குகின்றன
ரோஜாக்கள் எல்லாம்
அவ்வளவு அழகாய்...
நீயும் தினம் தினம்
எப்படியடி இவ்வளவு அழகாய்,
ரோஜாவும் சூட வேண்டிடும்
தேவதையாய்...

Monday, 7 February, 2011

தோழிக்கு வேண்டுகோள்

கண்ணோடு கண்
நேர் பார்த்திரா தோழியடி நீ...

அன்பு வளர்க்க
அருகாமை தேவை இல்லையென
நிருபித்த அன்புள்ளம் நீ...

நட்பென்ற வார்த்தையில்
உரிமையும், அன்பையும்
அடைக்காக்கும் தோழி நீ...

கிண்டல், கேலி, கோபம் என
உன்னை எது செய்திட்டாலும்
என்னிடமே தானாய் வரும்
நட்பு அலையடி நீ...

எத்தனையோ முறை
தெரிந்தோ தெரியாமலோ
கலந்கடித்தேன் உன் மனதை,
சினம் கொள்ளும் சிறுவனாய்...

உரிமை உள்ள இடத்திலே தானே
ஊடல் இருக்குமெனத் தெரியாத
தோழி உனக்கு...

பொய்களைவிட சிலநேரம்
உண்மைகள் என் வாழ்வில்
தடம் மாறியே பயணிக்கிறது..

உன்னிடம் எடுத்துச் சொல்ல
வார்த்தைகள் தெரியவில்லை..
அதற்கான நேரமும் அமையவில்லை...

என்றாவது ஒருநாள் தோழியே
நீ புரிந்து கொள்வாய் என
எண்ணம் மட்டும் என்னுள்ளே...

புறம் தள்ளிடாமல் ஏற்றுக்கொள்ளும்
என் நட்பென்ற நம்பிக்கையில்...

Friday, 4 February, 2011

புகை

தனக்கு தானே
வைத்துக் கொள்ளும்
கொள்ளி...

ஊரடங்கு உத்தரவு

உனது
கண்கள் திறந்து பார்க்கையில்
கலவர பூமியானது
எனது நெஞ்சம்..
சீக்கிரம் போடடி
ஊரடங்கு உத்தரவு
உன் இதழ் திறந்து...

மடித் தூக்கம்

மறந்து போன
தாயின் மடியினது சுகத்தினை
மீண்டும் நினைவுக்கு
கொண்டு வந்தது அன்பே
உன் மடித் தூக்கம்...

இழந்த காதல்

நீ
என்னை மறந்த
நாள் முதல்,
தூங்க மறந்த இரவுகள்
என்னிலை மறந்த நினைவுகள்
கனவுகள் இழந்த காதலில்..

முன்னுரிமை

என் கரம் பற்றி,
தலை கோதி,
அள்ளி எடுத்து,
கட்டி அணைத்தது,
முத்தம் தரும் வேளையில்,
பாரத யுத்தமே
நிகழ்கிறது என்னுள்ளே..
உன் முன்னுரிமை
என் கன்னத்திற்க்கா
இதழுக்கா என்று..

காதலன்

தோள் தரும் தோழன்
ஆசை நிறைவேற்றும் தந்தை
இதயத்தில் தாங்கும் கணவன்...

சட்டம்

உயிர்களை
வதைக்கு மனிதர்களுக்கு
உயிர்வதை சட்டம் உண்டாம்..
என்னடி சட்டம் இயற்றுவது
காதலில்
உன் பார்வையாலே
என்னை வதைக்கும் உனக்கு...

அமாவாசை

அமாவாசையன்று வெளியில்
செல்லாதே என்றால்
கேட்கவா செய்கிறாய்..
இப்பொழுது பாரடி
உன்னைக் கடத்தி
என்னோடு வைத்துக் கொண்டு
அமாவாசைக்கு காரணம்
நானென்று ஏசுகிறார்கள்...

அமுதம்

அமுதுண்டால்
மரணமில்லா வாழ்க்கையாம்...
அமுதொன்றும்
தேவையில்லை எனக்கு...
அன்னமவள்
அதர மதுவினை
சுவைத்திடும் வாய்ப்பு
கிட்டினாலே போதுமெனக்கு...

அழகு

என் காதலியின்
அழகிற்க்காய்,
ஓரிடம் பிறந்த
இரட்டைச் சகோதரிகள்
புன்னகையும் - கோபமும்..
இரண்டிலுமே
அவ்வளவு அழகு அவள்...

உண்மைக் காதல்

காதலிக்கும் பொழுது
கணவன் மனைவியாய்
திருமணத்திற்கு பின்
காதலன் காதலியாய்...

Thursday, 3 February, 2011

காதலி

முதல் தோழி
இரண்டாம் தாய்
மூன்றாம் குழந்தை

கோபம்

கோபமும் அழகு தான்
என்னவள் என்மீது
காட்டும் பொழுது...

மன்னிப்பு

தவறு செய்திடும்
மனங்களுக்கு
உண்மையான தண்டனை

கவிதை

கற்பனையின் செல்லக்குழந்தை
காதலின் அடையாளம்
நிஜத்தின் நிழல்

வேண்டுதல்

வயதேறிப் போனாலும்
குழந்தையாய்
வஞ்சமற்ற நெஞ்சம் கேட்டும்
நிறைவேறா வேண்டுதல்...

வெகுளி

இனிமையை உணர
அறிவுத்தனம்
காதலில் தேவையற்றது..
வெகுளித்தனமோ
முன்னிலை நிற்ப்பது

நட்பு

நட்பின் கடலில் மிதக்கும் நான்,
சொல்கிறேன் கரையேறிய பின்பு..
ஆனால் கரையேற விருப்பமின்றி
இன்னும் நட்பில் திளைத்தபடி...

பொய்மை

சாயம் பூசிய உதடுகளைவிட
எவ்வளவோ மெலடி
நிஜம் கூறும்
மை பூசிய உனது கண்கள்...

மதி

இரவினில் நில மதி நீ
நடமாடாத காரணம் கண்டு தான்
தைரியமாய் நடமாடுகிறது
வான் மதி...

மௌனம்

காதல் சொல்ல மறக்கும்
பெண்ணே உனக்கு
மௌனமே
தாய்மொழியா?

தோல்வி

வாழக்கையின்
மறுக்கபடா
அனுபவ ஆசான்...
தோல்வி..

மழலை

வயதென்னும்
உடையணிந்து
உலா வரும் மனிதன்
மழலை...

பெண்மை

ஆணென்ற காயத்திலும்
கண்டுகொண்டேன் பெண்மையை
உன் காதலில்...

தேடல்

தேடுதல் எவ்வளவாயினும்
திருப்தி மட்டும்
கிடைத்திடா ஆசை..

பந்தம்

கண்ணிற்கு புலப்படா
அழகிய முடிச்சு....
நெகிழ்ந்திடும் - இரு மனம்
புரளும் பொழுது...

காதல்

வாழ்க்கையை
வாழ்ந்து பார்க்க
ஓர் அழகிய ஒத்திகை...

கைம்பெண்

சுபமுகுர்த்தப் பட்டு.
நெய்வதோ
வெள்ளைப் புடைவை...

விலைவாசி

இப்பொழுதுள்ள
விலைவாசியில்
காய்கறிகளின்
"விலை"யை "வாசி"க்க தானே
முடிகிறது...


நினைவுகள்

கனவிலாவது உன்னுடன்
வாழ்ந்துவிடலாமென்று
நினைத்தால்,
எங்கே அன்பே
உறங்க விடுகிறது
உனது நினைவுகள்...

கனவுகள்

உறக்கமின்றி
கனவுகள் எப்படி
சாத்தியமென
வினவுகிறான் தோழன்...
கனவுகளாய் வருவது
அன்று மனம் கூடி
இன்று மூடி மறந்த
எனது காதல்
நிஜங்கள் தானென்று
தெரியாமல்...

Wednesday, 2 February, 2011

கருவா

என் நிறத்தைப் பற்றி
கூறினால் எத்தனையோ முறை
சினம் கொண்டுள்ளேன்...
இப்பொழுது மட்டும்
சினம் மாறி புன்முறுவல்
எட்டிப்பார்க்கிறதே அன்பே
நீ "கருவா" என்றழைக்கும் பொழுது...

Tuesday, 1 February, 2011

அடுத்து?

ஒவ்வொரு முடிவிலும்
திருப்தியின்றி
கேட்கப்படும்
ஒரே கேள்வி...