Monday 25 October, 2010

என் நிலை

என்னவள் ஆசை பட்டதையெல்லாம்
நிறைவேற்றி வைத்திடுவேன்...
அவள் கேட்காததாயினும்..
ஆனாலும் அவளை கேட்டும்
நிறைவேற்றிடத் தயக்கம்...
என்னைப் போலே மகன் வேண்டுமாம்.
இதில் தயக்கமாஎன வினவாதிர்.
என்னைப் போன்று பிறந்திடுகையில்
என்னிடம் காட்டும் பாசமும்
அவனிடத்தில் என்றுமே செலுத்திடுவாள்...
என் பெயரைக் கொண்ட குழந்தைக்கே
முத்தத்தால் மூச்சு முட்டிடச் செய்தவள்
என்னைப் போன்று பிறந்திட்டால்
சொல்லவா வேண்டும் என் நிலையை...

வலியும், வேதனையும்

அடிக்கு அடி.
உதைக்கு
உதை.
மேற்கூறிய தண்டனை
காதலுக்கும் வேண்டுகிறேன்...
காதலுக்கான காத்திருப்புகளையும்,
பதிலுக்கு ஏங்கிடும்
பரிதவிப்புகளையும் ,
தனிமையில் கொன்றிடும்
அவஸ்தைகளையும்,
நீயும் அனுபவிக்க வேண்டுமடி..
அப்போழுதாயின் தெரியும் அல்லவே
காதலனாய் நான் ஏற்றிருக்கும்
பாத்திரத்தின் வலியும், வேதனையும்....

தந்தையானேன்


திருமணமின்றி
மனைவியுமின்றி
உயிருமின்றி
தந்தையானேன்
என் குழந்தையான
காதலிக்கு...

வண்ணத்துப் பூச்சி

மகரந்தச் சேர்க்கை
பூக்களில் தான் சாத்தியமென
கேள்விப்பட்டு கண்டுள்ளேன்...
என் வாழ்வில் நடப்பதும்
நிஜம் தானோ? - அப்படியெனில்
எந்த வண்ணத்துப் பூச்சி
தூவிச் சென்றது காதல் விதையை
எந்தன் நெஞ்சில்...
சிறகுகளென படபடத்திடும்
உந்தன் கண்கள் தானோ?

முரண்பாடுகள்

விட்டுச் செல்லாதே என்று
உன்னிடம் மன்றாடிய பொழுது
சிறிதேனும் செவி சாய்க்காமல்
எனைவிடுத்துப் பிரிந்து சென்றாய்...

என்னை விட்டுப் போய்விடு என
மன்றாடி கெஞ்சிக் கூத்தாடியும்
பிரிந்து போக மறுக்கிறது
உனது மிச்சமான நினைவுகள்...

உனக்கும் உந்தன் நினைவிற்கும்தான்
எத்துணை முரண்பாடுகள்..
எத்துணை
க் காதல் தான்
என் மேல்...


சமம்


காதலின் முன்
அனைவரும் சமம் என்கையில்
உனக்கு மட்டும் திருமணம்
எனக்கு மட்டும் கண்ணீர் ஏனடி...

Sunday 24 October, 2010

என் காதலி

செங்காந்தள் மலருடையாள்,
தும்பைப் பூ மனமுடையாள்.
செல்லச் சினம் எட்டிப் பார்க்க
காதற்சொல் கதைக்கும் மொழியாள்
விழியில் பாதி உயிரெடுத்து
காதலில் மீதி நிரப்பிட்டாள்.
இதயம் மட்டும் திருடிச் சென்று
காதல் வரம் தந்த கயல்விழியாள்.
என் விழியில் கருவாய் மாறி
பாசம் காட்டி என் தாயோடு
மல்லுக்கு நிற்கும் குணவதியாள்...

தாயும், காதலியும்


என்னைப் படைத்த
இறைவனுக்கும் என்மீது
பொறாமை வந்திடும் போலே..
தன் உயிரில் பாதியை உதிர்த்தவள்,
தன் உயிரில் மீதியை நிரப்பி
வாழ்வை நிறைத்தவள் என
இரு தாயால்...

மிகச் சிறியது


உலகம் மிகச் சிறியது...
வேண்டியவர்கள் அடிக்கடி
சந்தித்தாக வேண்டும் என கூற்று...
எனக்கு மட்டும் என் வாழ்வில்
உலகம் அதைவிடச் சிறியது போலும்...
அடிக்கடி என் விழியில்
நீ விழுந்துவிடுகிறாயே...

முரண்பாடு


அது எப்படி அன்பே
உன்னால் மட்டும் சாத்தியம்?
கண்களில் காதல் சொல்லி,
ஆசையில் ஈர்த்து நெருங்கிவர
இதழ்களில் மறுப்பு கூற...

Saturday 23 October, 2010

சண்டையிடாமல் காதலா

சண்டையிடாமல் காதலா என
வினவினால் என் தோழி...
ஊடல் இல்லாமல் கூடலில்லை
என்பதனை நானும் அறியேன்...
சண்டையென்று வந்த பிறகு
வெற்றி தோல்வி நிச்சயம்...
காதலில் யாரிடம் யார் தோற்க
ஒரு கண்ணைக் குத்தி
மறு கண்ணுள் காட்சியா?
காதலியின் மனதைப் புண்படுத்தி
தழும்பாக்கிடும் கடுஞ்சொல் பேசி,
பேசாது ஊமை நாட்களை
பரிசாக தருவிக்க மனமில்லாது,
தவறு யார்மீது இருந்தாலும்,
நானே படிந்து விடுவேன்
என் பாசக்காரியிடம்

Wednesday 20 October, 2010

காயச்சுகிறாய்


புதிதாய் வீட்டில் குடியேற
பால் காய்ச்சுவார்களாம்.
நீயும் என் இதயத்தில்
குடியேறியதை தெரிவிக்கத் தானே
உன் நினைவுகளில் இரவினை
காயச்சுகிறாய் தினம் தினம்...

காதலில் மட்டுமே


உடலில் எங்கு அடிபட்டாலும்
முதலில் கலங்குவது கண் தான்...
ஆனால் கண்ணில் பட்டதும்
இதயம் கலங்கிப் போவது
காதலில் மட்டுமே...

உந்தன் நினைவுகள்


புகைவண்டியின் எஞ்சினாய்
என் வாழ்வை இழுத்துச் செல்லுதடி
உந்தன் நினைவுகள்...
ஒட்டாத தண்டவாளமாய்
இணையாத இதயங்களாய்ப் போன
நம் காதலில்....

Tuesday 19 October, 2010

புதைக்கப் பட்ட காதல்

கல்லூரி நாட்கள் ஒன்றில்
உன் பாதச்சுவடு அருகினில்,
உன் நிழல் தாங்கியாய்,
உன்னை தொடர்ந்து வருகையில்,
நீ கனியாத காரணத்தால் என்னவோ
கூந்தல் ஏறிய ரோஜாவாவது
என் கையில் நழுவி விழுந்தது...
நியாபகமாய் வைத்திட்டேன் டைரியில்
இதயம் புதைத்த காதலாய்...

நாட்கள் ஓடி வருடங்கள் கரைய,
ஏதோ ஒரு வேலையாய்
மறைந்த பொருட்களை தேடுகையில்
நியாபகம் மறந்த காதலியின் முகம்
திடிரென கண்ணெதிரே கண்டிட
அனிச்சையாய் தென்பட்டது டைரி...
புதைக்கப்பட்டு காய்ந்து போனாலும்
வாடாது இன்றும் வாசம் வீசியது
ரோஜா என் காதலோடு

காதல்

காதல்
வெள்ளிப் பனியை மேல்போர்த்தி
மானுட நிம்மதியை இரையாக்க
காத்திருக்கும் நெருப்புக் கோளம்...
விரல் விட்டால் சுட்டுவிடும்.
தீண்ட நினைத்து தொட்டவர் பலர்
என்று எச்சரித்தனர் என்னை...
பருவவயது பயம் அறியோம்..
வலியை ருசித்திட எண்ணி
காதலை அறியத் துடித்தேன்...
பட்டவுடன் உணர்ந்திடும் வேளையிலும்,
கட்டாய வெளி ஏற்றத்திலும்,
வெறுமையாய் கரைந்த நாட்களிலும்,
கண்ணீரையே உணவாக உண்ட இரவுகளிலும்,
உயிர் துறக்க எத்தனிக்கும் வேளையிலும்,
கண் விழித்தும் தெளியாத
கண்தழுவிய கனவுகளாய் போகையிலும்,
காதல் நீங்காத தழும்பாய்
நெஞ்சில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...

காதலில் கிடைத்த தாய்க்கு வேண்டுதல்

எந்த தாய்க்கும்
முதல் குழந்தை தானே செல்லம்...
நீ மட்டும் ஏன் தாயே
என்னை அரவணைக்காமல்,
உன் பாசத்திற்க்காகவும்,
வருகைக்காகவும் ஏங்கி தவிக்கவிட்டு,
உன் இரண்டாம் குழந்தையான
நீ பெற்ற பிள்ளையை மட்டும்
கொஞ்சிக் களிக்கிறாய்...
என்ன இருந்தாலும்
வேறொரு அன்னை சுமந்து பெற்ற
பிள்ளை தானே நானும்...

முற்றுப் புள்ளி


இப்படி எல்லாம்
வாழ வேண்டும் என்று
நாம் பேசிய வாக்கியங்களை
வாழ்ந்து முடிக்கும் முன்னரே
முற்றுப் புள்ளி வைத்து விட்டாயடி
உன் பிரிவில்....

கனவிலும்


இன்றும் உன்னை கட்டிப்பிடித்து
உன் மடியினில் சாய்ந்து,
அழுதிட துடிக்கிறது மனம்
காதலிக்கும் பொழுது
நடந்ததைப் போல - ஆனால்
கனவிலும் நடக்காது
போய்விடுகிறது அன்பே...
அப்பொழுதும் நீ வருவது
மாற்றானின் மனைவியாய் தானே...

ஆயுள்


நிஜத்தில் தான்
உன் குடும்பத்திற்கு அஞ்சி,
என்னுடன் வாழவில்லை...
கனவிலும் ஏனடி அச்சம்.
என் ஆயுளைக் காட்டி மிரட்டிய
உன் குடும்பத்திடம் சொல்லடி,
கனவுகளுக்கு
ஆயுள் இல்லையென்று....

பெண் குழந்தை


நாங்கள் காதலித்த நாட்களில்
நான் இல்லாத நேரத்திலும்
என்னைப் பார்த்துக்கொண்டே வாழ,
என்னை போன்ற பையன் வேண்டுமென்று
அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்...
நொடிப் பொழுது கூட - என் நினைவு
வந்துவிடக் கூடாதென்று ,
விதியும் எண்ணி விட்டது போலும்..
பிரசவத்தில் அவளுக்கு
பெண்குழந்தையாம்....

Monday 18 October, 2010

படைத்திட்டான்


என் பிறப்பு முதல்
இறப்பு வரையிலும்,
அன்னையின் அணைப்பிலே
வாழ்ந்திட வேண்டுமென,
இறைவன் எனக்காய்
உன்னை படைத்திட்டான் போலும்,
முதற்பாதியில் என் அன்னையாய்,
பிற்பாதியில் என் துணைவியாய்...

வானவில்


ஒரே நிறத்தில் வானவில்

அதுவும் அருகருகே இரண்டாய்
உனது புருவங்கள்...

பொக்கிச அறை


போதுமடி அன்பே
உனக்குத் தேவை இல்லையென்று
நீ எதையும் தூக்கி வீசிடாதே...
இனிமேலும் இடமில்லை
என் வீட்டு பொக்கிச அறையில்...

Sunday 17 October, 2010

மயிலிறகை


என்றாவது ஒரு நாள்
முட்டையிடும் என்று வைத்திருக்கிறேன்
பத்திரமாய் புத்தகத்துடன்
நீ தந்த மயிலிறகை,
உன்னிடம் சொல்லப்படாமல்
மனதில் பத்திரப்படுத்திருக்கும்
என் காதலைப் போலவே...

முதல் முத்தம்


கொடுத்த நேரம்
ஈரம் காய்ந்து போனாலும்
ஆயுள்மட்டும் பசுமையாய்,
காய்ந்திடாத ஈரமாய்
முதல் முத்தம்...

Thursday 14 October, 2010

பிரித்தெடுக்க


இவ்வுலகில்
அன்னம் இருந்தாலும்
தடுமாறித் தான் போகுமடி..
உன் நினைவுகளை
என்னில் இருந்து பிரித்தெடுக்க...

தெரியவில்லை


பிறருக்கு
கொடுத்தே பழகியதால என்னவோ
உன் இதயம் வாங்கத்
தெரியவில்லையடி எனக்கு...

தலைசாய

அன்றோ உன் மடி சாய காத்திருந்தேன்
உன்னை என் தாயக எண்ணித் தான்
இன்றோ என் மரணத்தின் கடைசி நொடியில்
என் தலைசாய உன் மடி கிடைக்காதா
என காத்திருக்கிறேன்
என் தலை தாங்கும் கல்லறையாக...

பெயர்


எத்தனை முறை
திரும்ப திரும்ப படித்தாலும்
அலுக்காத ஒரே கவிதை
உன் பெயர்...

கல்லாகிவிட்டதா பெண்ணே


கல்லாக இருந்த என்னை
உன் காதலால்
பூவாக மாற்றிய - உன் இதயம்
இன்று கல்லாகிவிட்டதா பெண்ணே...
உன் பிரிவில் கண்நீர்சிந்தும்
என்னைப் பார்க்கையிலும் கூட
மௌனம் கலைக்க மாட்டேன்கிராயடி...

துடிக்கிறது


ஒருமுறை தான்
அவள் என்னைப் பார்த்தாள் -
ஆனால் தினம் தினம்
அவளைப் பார்க்க துடிக்கிறது
என் மனம்...

எதிர் வினை


ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்.
நியூட்டனின் மூன்றாம் விதிக்கு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
என் காதலே...
அவளின் காதலில் அனுபவித்த
எண்ணிலடங்கா
மகிழ்ச்சிகளுக்கு தான்
இப்பொழுது அனுபவித்து வருகிறேன்
அளவிலடங்கா துன்பத்தினை
அவளின் பிரிவில்...

கலந்துவிட்டாள்


தென்றல் வீசும் மாலைப் பொழுதினிலே
மல்லி போன்றே மங்கையும் பூத்திருக்க..
சின்னப் பார்வை என்னைப் பார்த்து
கண்களாலே என்னைச் சிறைபிடித்தாள்..

என்னை நினைக்கும் இதயத்தை
அவளை நினைத்திட கட்டளையிட்டாள்.
சிறு புன்னகையிலே என் வாழ்வை
அவளுக்கென மாற்றிக்கொண்டாள்.

நுழைவு சீட்டாய் பார்வை வீசி
இதயத்தில் அமர்ந்துகொண்டாள்.
என்னருகில் அமரும் பொழுதினிலே
என் மூச்சுக் காற்றாய் கலந்துவிட்டாள்.

கல்வி கற்க மறக்கடித்து
கவிதை எழுத கற்றுக் கொடுத்தாள்.
நிம்மதி என்பதனை மறக்கச் செய்து
கனவிலும் என்னை ஆட்சி செய்தாள்.

கண்களிலே காதல் சொல்லியே
மௌனத்திலே மொழி பெயர்த்தாள்.
காதலில் என்னை கட்டிவைத்து
கூட்டத்திலிருந்து என்னை தனிமை ஆக்கினாள்

காதலை என்னுள் புதைத்து விட்டு
என் உயிரினுள் அனுவாய் கலந்துவிட்டாள்...

சிரிப்பு


நம் காதல் நாட்களில்
நான் சிரிப்பதை பார்த்துவிட்டு
உன் சிரிப்பு எனக்குப் பிடிக்கும்
அதனை தந்துவிடு என்பாய்...
இப்பொழுது நான் கேட்கிறேனடி
உன் பிரிவில் பறித்த
என் சிரிப்பை எனக்குத் தந்துவிடு...

மௌனம்


மொழிபெயர்க்க
அகராதி தேடுகிறேன்
உன் மௌனத்திற்கு ...

Wednesday 13 October, 2010

விரலிடுகில்


என் விரலிடுகில்
சாம்பலாகிக் கொண்டிருப்பது
சிகரெட் மட்டுமில்லையடி
உன் பிரிவால்
உயிர் துறந்த
என் இதயமும் தான்...

ஏனடி கேட்கிறாய்


மண்ணில் வாழும்
மலர்கள் யாவும் வாழ்ந்திட
தண்ணீரை தானடி கேட்கிறது...
நீ மட்டும் ஏனடி கேட்கிறாய்
என் கண்ணீரை...

படிக்கிறேன்


அதிகாலையில் படித்தால்
நன்றாய் பதியுமாம் மனதிலே..
முன்பு படித்தேன்
பாடங்களை...
இன்று படிக்கிறேன்
உன் நினைவுகளை...

கடைக்கண் பார்வை

கடைக்கண் பார்வைதனை
கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்.
சுலபமாய் சொல்லிவிட்டீர் பாரதிதாசனே...
இங்கோ அவள் பார்த்த
கடைக்கண் பார்வைக்கு,
தெரியாத விடையே
மலை போலல்லவா அழுத்துகிறது
என் மனதை....

நிறைவு


உன்னால் நிறைந்தது
என் இதயம் மட்டும் இல்லையடி
என் பக்கங்களும் தான்...

சொர்க்கம்


சொர்கத்தை
தேடி கொண்டிருக்கிறேன் பெண்ணே
நீ இருக்கின்ற இடமே
சொர்க்கம் என்பது தெரியாமல்...

விளையாட்டு


உனக்கு
விளையாட்டுப் பிடிக்கும்
என்பதற்காகவே
எனது வாழ்க்கையோடு
ஏனடி விளையாடுகிறாய்...

உதடுகள்


இளஞ்சிவப்பு நிறத்திலும்
பலாச்சுளை.
மைபூசாத உன் உதடுகள்...

குழந்தையின் ஏக்கம்


சிறு வயது முதலே
குடும்பத்தில் தினம் தினம்
சண்டைகள் சச்சரவுகள்...
தாய் மடியின் அணைப்பு கூட
இதுநாள் வரை கண்டதில்லையடி.
உன்னைக் காதலித்த பின்னே
அச்சுகம் கண்டேனடி உன்னிடத்தில்
உன்னை என் தாயாக மாற்றி...
இன்று தாயை தொலைத்த குழந்தையாக
உன் மடிக்காக ஏங்கிக் கிடக்கிறேன்...
ஆனால் நீயோ
உனது குழந்தையின் அழுகையை நிறுத்த
தாலாட்டிக் கொண்டிருக்கிறாய்
என்னை அழ வைத்துவிட்டு...

கை ரேகை


உன் கையின் ரேகையாவும்
மின்னலின் கீற்றுகளா..
தொட்டதும் உயிர் வரை
சுடுகின்றதே...

விழிப்பில்லா நித்திரை

கனவிலே தான்
நீ என்னுடன் வாழ்வாய் என்றால்
உறக்கத்திலேயே என் வாழ்நாளைக்
கழித்து விடுகிறேன் அன்பே.
விழிப்பிலே களைந்துவிடுமெனில்,
வேண்டிக்கொள்கிறேன்
உன் நினைவுகளோடு
விழிப்பில்லா நித்திரையை...

விதி இல்லை

சுனாமியாய் வந்து
பின் அலையாய் காலை நனைத்த
நம் காதலின் எதிர்ப்பு...

பத்திரிகை, துணி எடுக்கையில் கூட
உன் மதி முகம் பார்த்து
சம்மதம் கேட்டு....

கல்யாண நேரம் நெருங்கிட
நெஞ்சினில் போர்க்கால
பதற்றம் படபடக்க...

நம் காதலைச் சொல்லி
இதயங்கள் பரிமாறிய தினத்தன்றே
திருமணம்....

காதலுக்கு துணை நின்ற
நெஞ்சங்களோடு
முன்தினக் கொண்டாட்டம்...

மனம் கூடி மகிழ்ச்சி பொங்க
உனக்கு மாங்கல்யத்தோடு
எனக்கு பற்றிய உன் கரங்களோடு
நம் வாழ்க்கை தொடங்க...

அன்றைய இரவெல்லாம்
நம் காதல் வெற்றியின் கும்மாளம்...

ஈரைந்து மாதங்களில்
நம் காதல் பரிசை பெற்றிட...

அவளை அரட்டி மிரட்டிட
ஒரு தம்பியும் பிறந்திட...

வார இறுதியில்
நம் கொண்டாட்டம் கண்டு
இன்னும் நீள்வோம் எனறு
வார இறுதியும் கெஞ்சிட...

உன் கைபட்டு பரிமாறும் உணவும்...

உன் மடியில் நான் மழலையாய்
மடியில் இருக்கும்
என்னைக் கொஞ்சிடும் தாயாய்...

இப்படி எல்லாம் வாழ்ந்திட
நமக்கு விதி இல்லை
என்றதால் என்னவோ
நம் எதிர்கால
வாழ்க்கையை எல்லாம்
பேச்சிலும் கற்பனையிளுமே
வாழ்ந்துவிட்டோமடி....

பற்றிக் கொள்ளுமடி

காதலைச் சொல்ல
உன் உதடுள் கூட வேண்டாமடி...
இமைகளை உதடுகளாக்கி
பார்வையினை மொழியாக்கி
சொல்லடி போதும்...
தாய் காணா சேயாய்
ஏங்கிக்கிடக்கும் என் மனம்
பற்றிக் கொள்ளுமடி பெண்ணே...

ஆயுதமும் ஆனாள்

நானின்றி இவ்வுலகில்
வாழ விரும்பாதவள்...
அவளருகில் இல்லையெனில்
காற்றினையும் தழுவிட வெறுத்தவள்....
எனக்கில்லாத உயிரினையும்
துச்சமாய் நினைத்தவள்...
கனவிலும் என்னுடனே
என் மைவியாய் வாழ்ந்தவள்...
இன்னொருவன் கரம் பிடிக்க
எப்படி தயாரானால்....
இன்றோ தாயாரும் ஆனாள்.
அவளின் நினைவிலே
என்னைக் கொன்றிடும்
ஆயுதமும் ஆனாள்...