Tuesday 4 October, 2011

உணவு தேடித் திரியும் பறவையாய் நானும்

உணவு தேடி
புறப்பட்ட பறவையின்
நிலையில் தான்
எனது ஒவ்வொரு விடியலும்
உதயமாகிறது...

உயிர் வாழ
இன்றேனும் நல்ல இரை
சிக்காதாவென
எண்ணத்தின் சாயலிலே ,
உன்னை இன்றேனும் கண்டுவிட
அந்நாளை எதிர்கொள்ள
புறப்படுகிறேன்...

தேவையில்லாக் குப்பையும்
உண்ணப்படா இரையுமாகவே
கண்ணில் புலப்படுகிறது,
ஞாபகம் இல்லாத
முகங்களும் கூட,
அறிமுகம் செய்து
நினைவுபடுத்துவதை போல்...

தூரப் பார்வையில்
காட்சியாய் இரை கிடைக்க,
மனதில் மகிழ்வோடு
விரைந்து போய் பார்த்திட ,
கானல் நீராய்
ஏமாற்றிடும் அற்றினையாய்,
உன் சாயல் பெண்கள்...

பெருத்த உணவுண்டு
சிறிதும் இடமற்ற நாளில்
தானாய் சிக்கி - பசிக்கையில்
கண்ணாம்பூச்சி ஆடிடும் இரையாய்,

காதல் நாட்களில்
அடிக்கடி கண்ணில் விழும்
உந்தன் சரீரம் - ஏனோ
வேண்டித் தேடுகையில் மட்டும்
கைக்கெட்டா கனவாய்..

ஒவ்வொரு வேளையிலும்
ஏமாற்றத்தையே
உணவாய்க் கொண்டு,
நாளைக்கு நல்ல வேட்டை
என்றெண்ணி பசி அடங்கும்
பறவையின் நிலையிலே,
அடங்கிப் போகிறது
நாளைய தேடலுக்கான
எந்தன் நாட்கள்...

No comments:

Post a Comment