Sunday 9 October, 2011

நவராத்திரியில் ஒரு நாள்


ஒவ்வொரு வருடமும்
நவராத்திரி விழா.
பலவித நிகழ்ச்சிகள்
அரங்கேறும் எங்களது ஊர்
அரண்மனைக் கூடம்...

எங்கள் காதல் நிகழ்ச்சியும்
பலமுறை அரங்கேற்றம்...
மாலையின் நிலவோடு
மல்லிகையின் சந்திப்பாய்..

முன்கூட்டியே வரச் சொல்லியும்
தேட வைத்திடும் கள்ளி அவள்...
கொலுவின் பொம்மையாய்
அவளது வருகைக்காய்
எனது காத்திருப்புகள்...

என் பார்வைக்கு பதுங்கி
என்னை ஏமாற்ற
வெளிச்சம் மறைக்கும்
மின்மினிப் பூச்சி அவள்...

இன்று வரவில்லை என்ற குறுஞ்செய்தி
என்னை தீண்டுகையிலே
அவளது வருகை உறுதியாகிடும்...

மொத்தக் கூட்டத்தில்
அவளைத் தேடுவதொன்றும்
சிரமமில்லை எனக்கு...

என்னைத் தேடி
எட்டுத் திசையும் சுழன்றிடும்
தலை அவளது மட்டுமே...
கரு வண்டின் வேகத்தில்
சுழன்றிடும் கண்களும் காட்டித்தரும்...

மொட்டுகளுக்கு நடுவே
மலர்ந்த தாமரையாய்
அவள் முகம்..
எனைக் கண்டதும்
மேலும் சிவந்திடும்...

அழகு கலை நிகழ்ச்சிகள்
கண் முன்னே நடக்கையிலும்,
அவள் பார்வை நிகழ்ச்சியில்
தவிர்த்திடுது மனம்...

கூட்டத்தின் அங்கமாய்
அவளருகே என்னுடல் சங்கமிக்க,
பண்டமாற்று முறையில்
அவளுக்கான வளையல்களும்
எனக்கான பரிசுகளும்
பரிமாற்றம் நடக்கும்...

கூட்டத்திநிரைச்ச்சலும்
மௌனமாய் அடங்கிப் போக,
அவள் இரகசியப் பேச்சு மட்டும்
ஒலிப் பெருக்கியில் அலறிடும்...

வருடங்கள் கடந்த பின்
அவள் குடியோடு அவளும்
என் குடியோடு நானும்
தனித் தனியாய் கூட்டத்தில்...

ஏனோ ஏங்கித் தொலைக்கிறது
பாழாய்ப் போன மனம்
காலம் உண்டு விழுங்கிய
காதலின் நிஜங்களுக்கு...

யார் வராது போனாலும்
வருடா வருடம்
எங்களைத் தேடி தேடி
ஏமாற்றத்தில் பரிதவித்து
தொலைந்து போகிறது
எங்கள் காதல்...

No comments:

Post a Comment