Tuesday 4 October, 2011

கசக்கி எறியப்பட்ட எந்தன் இரவுகள்...

கடிகாரத்தின்
ஓட்டமும் கூட,
இரைச்சலாகிப் போன
இரவொன்றில்
என் தனிமைப் பொழுதுகள்...

ஒவ்வொரு
நொடியின் நகர்த்தலும்,
என்னிதயம் குத்தியபடியே
நகர்ந்து கொண்டிருக்கிறது
ரத்தச் சிவப்பின் இருளில்...

போராட்டங்கள் முடிந்து
செல்லும் உறக்கம் கூட,
போராட்டமாய் எனக்கு...

யுத்த களத்துக்கான
எந்தவொரு அடையாளமும் இன்றி
காட்சியளிக்கிறது
எந்தன் படுக்கை...

விளக்குகள் அணைத்ததும்
தானாகவே எரியத்
தொடங்கி விடுகிறது
உந்தன் நினைவுகள்...

உன் அழகு முகமும்
இதழ் சிரிப்பும்,
அழியாத ஓவியமாய்
இமைகளுக்குள் குடிகொள்ள,
நினைவின் வெளிச்சம்
இன்னும் சற்று
பரவத் தொடங்குகிறது...

மணிகள் சிறுதேனும்
நகராதா எனப் பார்க்கையில்
என்னை வலிப்படுத்தவே
வீம்பாய் நகராது
நிலைகுத்தி நிற்கிறது...

நொடிகள் எனக் கரைந்த
உன்னுடனான மணிகள்,
இன்று மணிகளாய்
கரைந்து கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்...

போர்வை இழுத்து மூடி
வெளிச்சம் மறைக்க முயல,
போர்வையாய் படர்ந்த
உந்தன் நினைவுகள்
மூச்சு முட்ட அமிழ்த்துகிறது...

வாழ்ந்த ஏழு வருடங்களையும்
புதிதாய் தூசுதட்டி
இருளின் திரையில்
இதயம் ஒட்டிக் காண்பிக்கிறது...

போராடிக் களைத்த விடியலில்
என் படுக்கை யாவும்
உந்தன் நினைவுகள்
சுகமாய் உறக்கம் கொள்ள,

ஓரமாய் ஒரு மூலையில்
அனாதையாய் கிடக்கிறது
கசக்கி எறியப்பட்ட
எந்தன் இரவுகள்...

No comments:

Post a Comment