Friday 25 November, 2011

மரத்துப் போன தமிழனாய் நாம்

எங்கே போய் தேடுவது.
யாரை கண்டுபிடிக்கச் சொல்வது.
சுண்ணம் பூசி அழிக்கப்பட்ட அடையாளங்களை.

இரையும் காகங்களுக்கும்
அன்னமிட்டவர்கள் இன்று
பசியில் இரையும் வயிற்றுக்கு
உணவிட மனமில்லை...

ஊர் முழுதும் தெரிந்து வைத்திருந்த
அறிமுக எல்லைகள் ஏனோ
அடுத்த வீட்டினை கூட
எட்டிடாது சுருங்கிப் போனது...

விலங்கும் அடிபடுகையில்
துடித்து வலித்த மனம்,
சக மனிதன் துடிக்கையில்
நடந்தது அறியாது
கடந்து செல்கிறது...

பழமைகள் தூக்கி எறியும் பழக்கத்திலே
பெரும்பாலான வீடுகளில்
புறக்கணித்து எறியப்படுகிறார்கள்
வயதில் பழைய முதியோர்களும்...

மனம் கொண்டு வாழந்த
சந்தோஷங்களை யாவும்
பணத்திற்கு அடகு வைத்து
தனிக்குடித்தனம் வாழ்கிறார்கள்
தனி மரம் தோப்பாகாதாவென தெரிந்தும்...

அநியாயங்கள் நடப்பது
அடுத்த தேசத்திலாகவும்,
ஜன்னல் பார்வைகளே உலகம்,
குடும்பமே சுற்றம் என
சுருங்கிப் போனது வாழ்க்கை.

விருந்தோம்பல், களிவிரக்கம்
சிநேகம், பணிவு
மரியாதை, ரெத்திரம் என
பொங்கிக் தழைத்த மறத்தமிழனை இன்று
அருங்காட்சியகத்திலும் புத்தகத்திலும்
காணும் அவலத்தில்
மரத்துப் போன தமிழனாய் நாம்...

2 comments:

  1. அருமையான பதிவு
    இதுபோன்ற படைப்புகள் அடிக்கடி வந்தால்தான்
    மரத்துப் போன மனத்தில் கொஞ்சமாவது
    இரத்தம் பாயும்.உணர்வு வரும்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா...

      Delete