Sunday 20 November, 2011

விடியலுக்காய் காத்திருக்கும் தெரு விளக்கோடு..

வழக்கம் போலவே
நான் படுக்கையில் படுத்ததும்
எழுந்து விடுகிறது படுக்கைவிட்டு
என் நினைவுகள்...

பூட்டப்பட்ட உடலைவிட்டே
வெளியேறிய நினைவிற்கு
பூட்டப் பட்ட
கதவுகள் பொருட்டல்ல...

வெளியேறி
வெறிச்சோடிய சாலையில் நிற்கையில்
வெளிச்சத்தில் அணைக்கிறது
என் சாயலின் தனிமையில்
தெருவிளக்கு...

அடி வைத்து
நடக்கத் தொடங்குகிறது
இரவுக்குள் மெல்ல...

அடிக்கடி பார்த்தும்
சலிக்காத காதல் படத்தை
பார்த்தபடி நடை போகிறது...

ஊரடங்கிப் போன
அர்த்த ஜாமத்தின்
சோம்பல் முறித்தபடியே,
நடை போட்டு அடைகிறது
பழக்கப்பட்ட நாயாய்
உனது வீட்டினை...

என் வருகைகளின் போது
ஜன்னல் வ்ழிப் பார்வையையும்
புன்னகைப் பரிசையும்
பெற்றுக் கொள்கிறது
நமது காதலின்
கடந்தகால நினைவிடம்...

களைப்பறியா உழைப்பாளி
என் நினைவுகள் என
தெரிந்து கொண்டது இரவும்..

உனது செய்கைகளை எல்லாம்
மறுசுழற்சியில் கண்டுவிட்டு
திரும்பி நடை போடுகிறது
கிளம்பிய இடம் சேர...

எந்தவொரு தடயமும் இன்றி
பயணத்தின் திருப்தியோடு
உறங்கிப் போகிறது,
அணைந்து போக
விடியலுக்காய் காத்திருக்கும்
தெரு விள
க்கோடு...

2 comments:

  1. அந்த மென்மையான பாடலோடு
    தங்கள் கவிதையையும் படிக்க
    சிறிது நேரம் என்னை விட்டு என் நினைவுகள்
    சிறிது நேரம் எங்கெங்கோ
    பறந்து திரும்பியது நிஜம்
    அருமையான மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Thank for ur encouragement sir..

    ReplyDelete