Monday 27 June, 2011

என் காதல் பயணம்

எப்பொழுதாயினும்
மழை பெய்திடுகையில்
வானவில் தோன்றிடுமாம்...

அன்றும் அப்படித் தான்
கொட்டும் அடைமழைக்கு முன்னால்
பவ்யமாய் வானவில்
என் பின்னால் வண்டியில்...

வானவில் கண்டு கைதட்டி
சிரித்திடும் குழந்தையாய்
உன்னை நெருக்கத்தில் கண்டதும்
உருமாறியது இதயம்...

எப்பொழுதும் போகும் பாதை எனினும்
அன்று மட்டும் வெகு சிறப்பாய்...

என் காதோரம் முகம் கொண்டு
மிக நெருங்கிப் பேசுகையில்
தெறித்திடும் எச்சில் துளியில்
சில்லீட்டு சிலாகித்த முகம்...

ஆரம்பத்தில் ஒருபுறம் காலிட்டு
தோள் பிடித்து அமர்கையிலும்,
பின்னர் தைரியமாய்
இருபுறமும் காலிட்டு என்னை
இறுக்க அணைத்தது அமர்கையில்,
மெல்லிதாய்
இழையோடுகிறது
தோழியாய் இருந்து
காதலியான உனது பரிமாற்றம்..

உனது இறுக்கத்தின் அளவு
அதிகரிப்பதற்காகவே கூடியது
எந்தன் வண்டியின் வேகம்...

தெரிந்த முகம் காணும் பயத்தில்
உன் இதயம் படபடத்ததை
தெரிந்து கொண்டேனடி
என் முதுகுப் பகுதியில்
உன் இறுக்கத்தில்...

பேச்சினிடையே சில நேரம்
என் கன்னம் பதித்த முத்தத்தில்
சூடாகித் தானடி போனேன்
வண்டி இஞ்சினைக் காட்டிலும்...

இப்பயணம் இப்படியே
நீளாதா என்று
வேகம் குறைக்கச் சொல்லி
மன்றாடிய இதயம்...

இப்பொழுதும் ஒவ்வொரு முறையும்
அவ்வழியே செல்லும் பயணத்தில்
பின்பக்கம் பார்த்தபடியே
பரிதவிக்கிறது ஏக்கங்களுடன்,
உனது இறுக்கத்திற்கும் முத்தத்திற்கும்
அந்தக் காட்சியை போலவே
என் இதயம் இறுக்கப் பிடித்திருக்கும்
நம் காதலுக்கும்....

No comments:

Post a Comment