Saturday 13 November, 2010

கடவுளுடன் கேள்வி


கடவுளைக் கண்டு
கேள்விகள் கேட்டிட அழைத்தேன்...
என்னை ஏன் படைத்தாய்
எனக்கென சொந்தமாய் ஏதுமின்றி...

பார்த்திட நினைப்பதை கண்டிடாமல்
அவளைக் கண்டிடுவதையே
முதலாய தொழிலாய் செய்திடும் கண்கள்...

வார்த்தைகளுக்கு பதிலாய்
அவளது பெயரினையே

மந்திரமாய்
ஜெபித்திடும் உதடுகள்...

கவிதை எழுத மறுத்து
அவளது பெயரினை எழுதிடும் எண்ணம்...

என் சுயகுறிப்பு எழுதிடாமல்
அவளைப் பற்றிய விவரங்களை
எழுதித் தள்ளும் கைகள்...

பாடங்களைக் கேட்டிடாமல்
அவள் குரலினை வேதமாய்
தேடிக் கேட்டிடும் செவிகள்...

எனக்கென சிறிதும் நகர்ந்திடாமல்
அவளின் நினைவுகளை எண்ணியபடியே
ஊதாரித்தனமாய் கரைந்திடும் நிமிடங்கள்...

நான் வாழ துடிக்க மறந்து
அவளின் உருவத்தை தன்னுள் வைத்து
பெரு மூச்சு விட்டிடும் இதயம்...

என எனக்காய் படைத்தவை யாவும்
எனக்குச் சொந்தமில்லா நிலையில்,
எனக்காய் நீர் படைத்தது
எதுவென்று கேட்க...

அட மூடா இன்னுமா புரியவில்லை
அவளைப் படைத்ததே உனக்காய் தானே,
உன்னுள் உள்ளவை யாவும் அவளைக்
கண்டுகொண்டு சொந்தம் கொண்டாட
உனக்கின்னும் புரியவில்லையா?
என புன்னகைத்தே மறைந்து போனார்..

No comments:

Post a Comment