Sunday 17 June, 2012

என் கல்லூரி நினைவுகள்.


மஞ்சள் வெயில் மாலையில்
நனைந்து கொண்டே
ஏதோ ஒன்றினை
தொலைத்த தவிப்பினில்,
இன்னதென்று சொல்ல முடிந்திடாத
நெருடல் நெஞ்சினுள்...

படபடப்பும்
வலியும் ஒரு சேர
இதயம் கவ்விக் கொள்கிறது.

இயக்கமில்லா இயந்திரமாய்
செயலற்று நிற்கிறது இதயம்.

உன்னைப் பார்த்த
முதல் நாளிலிருந்த பயம்
இப்பொழுதும் அப்படியே
உன்னைப் பிரிவதிலும்…

உன்னால் கிடைத்த
நட்புகளும், அன்புகளும்
அவ்வளவு தானாவென கேட்டவாறே
கண்களை கண்ணீர் மூடுகிறது
கடைசி நேரத்தினை...

எத்தனையோ முறை
உன்னில் தலை சாய்த்து
என் சோர்வு களைந்துள்ளேன்.

வெற்றி பெற்ற நேரங்களில்
காலடியில் முத்தமிட்டு
உன்னை கட்டி அணைத்துள்ளேன்...

முதன் முதலாய்
தாய் பிரிந்து பள்ளி செல்லும்
பிள்ளையின் பிரிவும் அழுகையும்
மொத்தமாய் உனை விடுத்து
இல்லம் செல்லுகையில்...

தொலைக்கப்பட்ட
குழந்தையின் அரற்றல்
என்னை நீ புறம் தள்ளுகையில்..

பிரிந்து விடாதே என
கெஞ்சிக் கதறுகையில்
வழிந்த கண்ணீர் துளிகள்
இன்னும் உன் காலடியில் தான்
சிந்திக் கிடக்கிறது...

என்னை விட உனக்கு
நேற்று வந்தவன்
முக்கியமாகிப் போனதை
எண்ணுகையில் தான்
தாங்கிட முடியாத வலி.

உன் பாதம் பதித்த முத்தங்களும்
உன் பெருமை கூறும் கவிதைகளும்
மர பெஞ்சுகளும், சுவர்களும்
தாங்கிய என் பெயர்கள் தான்
என் காதலை உன்னிடம் சொல்லும்
கடைசி சாட்சியங்கள்.

என்ன சொல்லி
என்ன ஆகப்போகிறது
நீ வேறு நான் வேறு
என்றாகிவிட்ட பின்.

உண்மைகளை எனக்குணர்த்தி
உன்னை மீண்டும் பெற இயலாத
ஆறாத் துயரில்,
அவ்வப்போது என்னில்
எழும் உன் நினைவுகள்
என்னைப் பதம் பார்க்கையில்
பார்த்துக் கொள்கிறேன் உன்னை
நிழற்படத்தினை...

No comments:

Post a Comment