Monday, 27 December 2010

மறந்துவிட்டாய்

என்னை நேசிக்க தெரிந்த நீ
வாசிக்க மறந்து விட்டாயடி
என் நெஞ்சில் செதுக்கிய
உந்தன் நினைவுகளை...

தோழியா? காதலியா?

நீ சொன்னதெல்லாம்
நான் செய்து முடித்திடும் பொழுது
பாராட்டினாய் என் தோழியாய்.
நீ சொல்லாத
ஒன்றினையும் செய்துவிட்டேன்...
உன்னை காதலிக்கும் செயலை.
தோழியாக தண்டிப்பாயா? இல்லை
காதலியாய் வாழ்வில் இனிப்பாயா?

வெளிக்கொனரடி

உனக்குள் திறமை உள்ளது..
இன்னும் எத்தனயோ
திறமை மறைந்து இருக்கலாம்,
தொடர்ந்து எழுது என்று
என் கவிதையை படித்துவிட்டு
உற்சாக மூட்டி
வெளிக் கொணர்ந்ததை போல்
என்னுள்ளே புதைத்துள்ள
என் காதலையும்
வெளிக் கொண்டு வந்துவிடடி...

குடையும் கேள்வி

முத்தமிட்ட பிறகும்
உன் நினைவாய்
கொஞ்ச நேரம் என்னோடு
ஒட்டிக் கொண்டிருக்கட்டும் என்று
என் எச்சில் பட்ட
இடத்தையும் துடைத்திட மாட்டாயே...
இந்நொடி வரையிலும்
என் நினைவுகள் சிறிதேனும்
உன்னில் ஒட்டியுள்ளதா? என்ற
கேள்வு என்னைக் குடைகிறது அன்பே...

காதல் பூகம்பம்

உன்னால் என் நெஞ்சில்
காதல் பூகம்பம்...
சேதாரமாய் -
தூக்கம் தொலைத்த
நிம்மதியற்ற இரவுகளில்
உன் நினைவுகள்...
ஆதாரமாய் -
பொறுமையே கண்டிராத
மனமோ உன் வருகைக்காக
மணிக்கணக்காய்
காத்துக் கிடத்தல்...

வலியும், வேதனையும்

நாம் இணைந்திருந்த நாட்களின்
காதலின் இனிமைகளை
சொல்லிட எண்ணுகின்ற வேளையில்,
உன் பிரிவால் நீயில்லாமல்
வெற்றிடமாகிய என் இதயத்தை
நினைவுகளின் கவ்விக் கொள்ள,
வலிகளும் வேதனைகளுமே
என் வரிகளில் மேலோங்கிவிடுகிறது...

சிகரெட்

சிகரெட்டும் ஆண் தான் போலும்.
உதட்டோடு உறவாடி
தூக்கி வீசப்படும் பொழுது

சித்திரவதை

உன்னை
என் குழந்தையாய்
என் நெஞ்சில் சுமந்தேனடி
இதுநாள் வரையிலும்...
இன்றோ என்னெதிரில்
கைகோர்த்து கணவனோடு,
நெஞ்சில் அணைத்த குழந்தையோடு....
இதற்காகவாவடி காதலித்தோம்.
உனைப் பார்த்த இந்நொடியே
உயிர் துறக்கலாமடி.
மரணம் வரையிலும்
இக்காட்சி அணுவணுவாய்
என்னைச் சித்திரவதை செய்வதை
தடுத்திட...

பேருந்து பயணம்

எப்பொழுதும் நம்மை
முன்னோக்கி அழைத்திடும் பயணம்.
எத்தனையோ முறை
நம்மை ஒன்றாய் அருகருகே
அமரவைத்த தருணம்...
இன்று நான் மட்டும்
தனியே பயணம்.
நம் நினைவுகளுடன்
பின்னோக்கி...

என் நிலை

உன் நிழலைத் தீண்டியதற்கே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
குதித்தவன் நான்..
இன்று என் கையில்
உன் கரங்கள் பற்றிட கிடைக்க
சொல்லவா வேண்டும்
என் நிலையயை...

காதல் மரம்

காதல் விதையை
என் நெஞ்சில் புதைத்து,
உன் பார்வையில் தினம்
உரமிட்டு வளர்த்துச் சென்றாய்.

உன் பிரிவில்
விட்டுப் போன மரத்தைப்
பட்டுப் போக விட
மனம் இல்லையடி அன்பே...

நீ இல்லாத நெஞ்சில்
நீ இட்ட காதலாது
வளரட்டும் நிரந்தரமாய் என்று
வளர்க்கிறேன் நாளொரு வண்ணமாய்
என் கண்ணீர் கொண்டு...

நடிகன்

உன்னிடம்
என் காதலைச் சொல்லி
உன் காதலன்
ஆகிறேனோ இல்லையோ
நல்ல நடிகன் ஆகிவிட்டேனடி.
இரவிலும், தனிமையிலும்
என்னை வாட்டி வதைக்கும்
காதலை உன்னுடன் சொல்லவந்த
ஒவ்வொரு முறையும்
காதலை மறைத்தபடியே
உன்னிடம்
சிரித்துப் பேசுகையிலே ...

ஆகஸ்ட் 23

இறந்து போன சென்ற வருடத்தில்
உனக்கு நிச்சயதார்த்தம்..
நிச்சயமாய் கனவிலும்
நான் எதிர்ப்பார்த்திடா
அபத்தம்...

எதிர் வினை

ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்.
நியூட்டனின் மூன்றாம் விதிக்கு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
என் காதலே...
அவளின் காதலில் அனுபவித்த
எண்ணிலடங்கா
மகிழ்ச்சிகளுக்கு தான்
இப்பொழுது அனுபவித்து வருகிறேன்
அளவிலடங்கா துன்பத்தினை
அவளின் பிரிவில்...

ஜென்மம்

உனக்கு ஜென்மை ஒன்று
போதுமென்று சொல்லியதால்
நீ என்னை சுயநலவாதி என்று
எண்ணி விடாதே பெண்ணே.
நான் வாழப்போகும்
ஜென்மம் ஏழும்
உனைப் பார்த்த நிமிடம்
எனக்கில்லை என்றாகிவிட்டதால் ,
உன்னை ஒரு ஜென்மம் மட்டும்
வாழச் சொல்கிறேனடி
உனைக் காதலிக்க...

மழை

யாரின் மனதை கலைப்பதற்காக
இப்படி அழுகிறாய் மேகமே..
கண்ணீர்த் துளிகளாய்
மழை..

இழப்பு

ஒன்றை இழந்து தான்
மற்றொன்றை பெறவேண்டுமாம்
உண்மை தான் போலும்...
காதலைப் பெற
என் நிம்மதியை
இழக்க வேண்டியாயிற்றே...

உன் நினைவுகள்

இன்றோடு உன் நினைவுகளை
களைத்து எறிந்துவிடலாமேன்று தானடி
கவிதையாய் எழுதுகிறேன்..
ஆனாலும் துரியோதனன் உரித்த
துகிலாகத்தானடி நீள்கிறது
முடிவில்லா நம் காதலின்
நினைவலையில்...

உயிர் தந்துவிடு

உன் உளியின் பார்வையால்
காதலென்னும் சிலையை
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னில் செதுக்கினாயடி
அன்பில், இதயம் தந்த நீ
உன் காதலில் உயிர் தந்துவிடடி...

உனக்கெப்படி தெரியும்

தினம் தினம்
கவிதை சொல்லக் கேட்டாய்
கவிதைத் தொகுப்பாய் உன்னில்,
உனது ஒவ்வொரு செய்கைகளைத் திருடி
வார்த்தையாக்கி கூறுவது
உனக்கெப்படி தெரியும்...

அகராதி

என் வாழ்க்கையின்
விளக்கம் அறிந்து கொள்ள
எனக்கான அகராதி..
நீ தானடி...

பிரிவு

ரொம்பவும்
கர்வம் கொள்ளாதே காலமே!
என் வாழ்க்கையிலிருந்து
அவளது நிஜத்தை தான்
பிரிக்க முடிந்தது...
அவளின் நினைவுகளை பிரிப்பது
என்னாளும், எந்நாளும் இயலாத ஒன்றே...

கை

ரோஜாவைப் பற்றினேன்
முட்கள் குத்தவில்லை
காரணம் தெரிந்தது
உன் கை என்று...

Saturday, 25 December 2010

என் காதல்

வார்த்தைகளில் சொல்ல வலிமையில்லை
என் கற்பனைகளுக்கு...
நிஜத்தின் பதிவுகளைத் தான்
மொழிமாற்றப்பட்டு கவிதைகளாய்....
என் காதல்...

கைப்பேசி

சில நேரம்
உன் கைப்பேசியாய்
மாறிடத் தோன்றுகிறது...
உனது பெரும்பாலான
பேச்சுக்களையும்,
வார்த்தைகளையும்,
கைச்சூட்டின் அணைப்பையும்
நானும் அனுபவித்திட வேண்டி..

அலைபேசி

இனிமேல் அதிகமாய்
அலைபேசியில் பேசிடாதே..
உன் கொஞ்சல் பேச்சும்,
கலகல சிரிப்பும்,
உதட்டு முத்தமும்,
காதலிக்க வைத்திடும்
உனது அலைபேசியினையும்..
எந்திரனும் காதலிக்கும்
காலமால்லவோ இது...

நட்பா? காதலா?

கண்கள் காணும் காட்சிக்கு
உதடுகள் பொய்யென்னும் சாயம்
பூசிக்கொள்கிறது - இனிமேல்
உன் கண்களிடமே
கேட்டுக் கொள்கிறேன் பெண்ணே..
நீ பார்க்கும் பார்வை
நட்பா? காதலா? என்று...

முரண்

பூவெல்லாம் காய்ந்து கனியுமாம்.
நீ மட்டும் முரணில்லையடி..
எனக்காய் பூத்து
பிரிவினில் காய்ந்து,
கூடலின் கனிகிறாய்...

தீண்டல்

ஒருமுறை தேனெடுத்த பின்
மறுமுறை தீண்டப்படாதாம் மலர்.
உன் இதழ்கள் மட்டும் எப்படியடி
தீண்டத் தூண்டுகிறது
மீண்டும் மீண்டும்..

சிரிப்பு

பூக்கள் சிரிக்குமாம்
நான் நம்பவில்லையடி.
இப்பொழுது நம்புகிறேன்
பூக்களுக்குனடுவில்
உன் புன்னகைப் பார்த்து...

திட்டம்

பூந்தோட்டம் செல்லாதே இனிமேல்...
பூக்களும் உன்மேல் ஆசை கொண்டு
உன்னைத் தலைவியாய் மாற்றி
தன் கூட்டத்தோடே வைத்துக்கொள்ள
திட்டமிடுகின்றனவாம்...

கேள்வி

கடைசியாய்
கேட்டே விட்டன தேனிக்கள்..
உன் மலரில் மட்டும்
எப்படி தினமும் தேனுருகிறது...
தினம் நீ பருகிட மட்டும்...

ஏமாற்றம்

கோடைகால வெப்பத்தில்
மலர்கள் யாவும் வாடிட
தேனெடுக்க வழியின்றி
ஆயாசமாய்த் திரிகையில்,
பெரியதொரு தேன்கிண்ண மலரென
உன் இதழ்களை மொய்த்திட
எண்ணி அருகில் வருகையில்,
உன் இதழ்களை
நான் சுவைப்பதைப் பார்த்து
ஏமாந்து தான் போகிறது தேனீக்களும்...

வண்ணத்துப்பூச்சி

நான் செல்லும் வழியெங்கும்
ஒரு வண்ணத்துப் பூச்சியினையும்
காணவில்லையென அப்பாவியாய்
கேட்கிறாய் எல்லாம் செய்துவிட்டு...
உன்னிமைகள் படபடப்பைக் கண்டு
நீ பூப்படைந்த நாள்முதலே
இனியும் இங்கிருத்தல்
அழகில்லையென நாணி
நீ உலவும் இடம்விடுத்து
இடம் பெயர்ந்து விட்டதே...

Friday, 24 December 2010

உன் அழகு

நேற்று நீ
கோவிலுக்குச் சென்றாயா என
என் காதலியை வினவினேன்...
ஆமாம். நீ எப்படி அறிந்தாயென
கேள்வியை திருப்பி வைத்தாள்...
உன் அழகில் மயங்கி
கர்வம் ஒழித்து,
சிற்ப்பங்கள் ஏதுமின்றி
வெறிச்சோடிய கோவிலைக்
கண்டதும் தாண்டி கேட்டேன்...

நீயும் சிலையும்

கோவில் சிற்பமும்
நீயும் ஓன்றுதானடி...
அழகில் மட்டுமில்லை -
என் கோரிக்கைகளுக்கு
செவி சாய்த்திடா
கல் மனதிலும்...

தியானம்

கோவிலில் தியானம்
செய்யாதே என்றால்
எங்கே அன்பே கேட்கிறாய்...
இப்பொழுது பாரடி
உன்னை சிலையென எண்ணி
அலங்கரிக்க தொடங்கிவிட்டனர்...

வேண்டுதல்

கோவில் வந்து வேண்டியதில்
உனது வேண்டுதல்
பழித்ததோ இல்லையோ?
உனது நெற்றியில்
ஏற வேண்டுமென்ற
குங்குமத்தின் வேண்டுதல்
ஈடேரிதான் விட்டது...

பிரகாரம்

வாழ்க்கையில் என்னைத் தான்
உன் பின்னால் சுற்றிட வைத்தாய் என்றால்
கோவிலினுள் சிலையாய் வந்த
பூத கணங்களையும் அல்லவா
உன் பின்னே சுற்ற செய்திட்டாய்
பிரகாரம் சுற்றும் பொழுது...

விளக்கு

நீ
விளக்கேற்றுகையில் மட்டும்
எல்லா விளக்குகளுமே,
அணைவது ஏனோ?
உனைக் கண்டதும்
உயிர் துறந்து
உன் ஏற்றலில் மீண்டும்
உயிர்த்தெழுந்து பிரகாசித்திடவா?

சிலை

கோவில் விட்டு வெளியே வந்து
காலனி மாட்டும் பொழுது தானடி
சிலையொன்று தான் என்னெதிரே
நடமாடுவதை எண்ணி வந்த
எனக்கு உரைத்தது நீ பெண்ணென்று...

Thursday, 23 December 2010

பெயர்

இனிமேலும் அர்ச்சனை செய்திட
நீ செல்லாதடி சகியே...
உன் உதடுகளில்
உன் பெயரைச் சொன்னதும்,
இப்பொழுதெல்லாம் yaraith
உன் பெயரைத் தான்
மந்திரமாய் ஜெபிக்கிறார் அர்ச்சகரும்...

படைப்பு

கோவில் சிற்ப்பங்கள் யாவும்
உன் தந்தையை தேடுகின்றன...
உன்னைப் போலவே அவைகளையும்
அழகாய் படைத்திட வேண்டி..

ஆராதனை

கர்ப்பக்கிரகம் அருகில் சென்று
தரிசனம் செய்யாதே என்று
எத்தனை முறை தாண்டி சொல்வது...
இப்பொழுது பார் - அர்ச்சகர்
உனக்கு தீபாராதனை காட்டுகிறார்...

வாலி

எதிர்ப்பவரின் பலம் பாதி பெற்றிடும்
இராமாயண வாலியின்
ஜாதி போல தானடா நீயும்...
உன்னை நோக்கும் வேளையில்
என் தைரியம் நீ எடுத்து,
என்னைப் பார்க்கிறாய் - என்னை
மண்ணைப் பார்க்க வைத்து விட்டு...

Tuesday, 21 December 2010

சந்திப்பு

மாலை ஆறு மணி..
சந்திக்க வரச் சொன்னாள் தனியே...
நேரத்திற்கு வருவது அவளது வழக்கம்.
நேரத்தை விழுங்கி வருவது
என் பழக்கம்...

வந்த நொடி முதல்
எனைப் பார்த்துக் காத்திருப்பாள்.
நொடிகளையும் நிமிடமாய் நகர
விரட்டிக் கொண்டிருப்பாள்...

இதழ்கள் என்னை கடிந்து கொண்டும்,
என் காதல் அவள் பற்களிடையே
சிக்கிக் கொண்டிருக்கும்...

என் சாயல் தலை காண
அல்லியாய் அவள் முகம் பூத்திருக்கும்..
இல்லையென்ற பின் ஏமாற்றத்தில்
முகத்தில் கடுகு, எள் வெடித்திருக்கும்..

காத்திருக்கும் நொடிகள்
நகர்வதைக் காட்டிலும் - என்
மேலுள்ள கோவம் கூடிருக்கும்.

கீழ்வானம் சிவந்ததைக் கூட - அவள்
கன்னம் சிவந்து உணர்த்திடும்...
சினத்தின் பெருமூச்சின் வெப்பத்தில்
பனியும் அடி ஒன்று
அவளைச் சுற்றியே பொழியும்...

நான் மெல்ல தலை காட்ட
என்னவள் கோபத்தின் எல்லை கண்டு
சூரியனும் இருளில் மறைந்து கொள்ள,
என்ன, ஏதென்று நொடிகள் ஸ்தம்பிக்க,
வந்ததும் கத்தித் தீர்த்தாள் சினத்தை
பெய்து தீர்த்திடும் மேகமாய்...

காத்திருந்த காலத்தையும்
சேர்த்தே காய்ச்சி எடுப்பாள்...

சினம் அமர்த்த கெஞ்சிடுவேன்.
அவளோ மிஞ்சிடுவாள்.

மிஞ்சியதும் முறைத்துக் கொள்வேன்.
என்மேல் தவறில்லா அப்பாவியாய்...
மிஞ்சிய என்னவள் இப்பொழுது
கெஞ்சலில் என்னை மிஞ்சிட,

மிச்ச மீதி நேரத்தையும்
உறைய வைத்திட கட்டிக் கொள்வாள்..
என் முகமேங்கிலும்
முத்தத்தால் நனைத்திடுவாள்..

இரவினைக் குளிர்விக்க வேண்டி
மெல்ல எட்டிப் பார்க்கும் நிலவும்
திரும்பப் போக வேண்டியதாயிற்று
எங்கள் கூடலின் குளுமை கண்டு...

தடை

மார்கழி இரவினை
உன்னோடு கழித்திட
வேண்டுகிறது என்னுடல்...
அவ்வாறு கழியுமென்றால்.
களியாட்ட வெப்பத்தில்,
கடுங்குளிரும் கோடையாகிப்
போகுமென எச்சரித்து
தடை போடுகிறது மனம்...

பஞ்ச பூதம்

பஞ்ச பூதங்கள்
எனக்கு மட்டும்
மூவிரண்டு பூதங்களாயின
காதலோடு..

பாராட்டு

உன் அசைவிலே
ஆயிரம் கவிதைகள் சொல்கிறாய்
ஒன்று ரெண்டாய்
கற்பனையில் கவி தேடும்
என்னைப் புகழ்கிறார்கள்...

காதல்

வார்த்தைகள் சுமந்த
சக்தியும் கூட இன்றி
நம் வாழ்க்கை
காதலில்...

நண்பன்

காரியத்திற்கு
இருப்பவன் அல்ல
என் கடைசி
காரியம் வரை இருப்பவன்...

Monday, 20 December 2010

இப்பவே கண்ண கட்டுதே

என்னைக் காணாத நிலைவந்தால்
என்ன செய்வாயென வினவினாள்.
பட்டினியாய் பசலை நோய் கண்டு
சருகாய் காய்ந்திடுவேன் என
எதிர்பார்த்திட்டாள் போலும்..
வழக்கம் போலவே நானிருப்பேன்
மூவேளை உணவையும் உண்டிடுவேன்
எனச் சொல்லித் தொலைய...

காதல் கண்களில் கோவத் தீப்பொறியிட
பேசாதே என் நிழலோடும் என
சினத்தில் திரும்பிக் கொண்டாளவள்..

நம் பாதம் பதித்த இடமெங்கிலும்
உனைத் தேடிப்பார்த்திடவும்,

கலங்காது கழனிஎங்கும் களைப்புறாமல்
தேடிட வேண்டிடும் கால்களுக்கும்,

உன் நினைவிலே எரிந்து கரையும்
என்னிதயம் பறைசாற்றிட வழிந்திடும்
கண்களுக்காகவும் உண்டிட
வேண்டுமென மொழிந்தேன்...

என் கூற்று மெய்யென நம்பி
கட்டிக் கொண்டு என்னை முழுமையாய்
ஆட்சி செய்தாள் காதல் மகாராணி

ஒரு சான் வயிற்றிக்கு என்னவெல்லாம்
கூற வேண்டியுள்ளதென எண்ணுகையில்,
அடுத்த கேள்விக்கு என்னவள் எத்தனிக்க
கண்ணைக் கட்டுகிறது எனக்கு..

ஆசை

நான் பெண்ணாக மாறிப்போனால்
எப்படி இருப்பேன் எனக் கேட்டேன்
எதிர் நிற்கும் காதலியிடம்...
அடப் போடா பைத்தியம்
இப்பொழுதும் நானாகத் தானடா
நீ வாழ்கிறாய் பிறகென்ன ஆசையென்று
தலை கொட்டிச் செல்கிறாள்...

அழகுக்கு அழகு

தான் தான் அழகென்றும்
அதனால் தான் நீ
சூடிக் கொண்டாய் என
கர்வக் களிப்பில் கெக்கரிக்கிறது
அன்பே ரோஜா...
அழகிற்கு அழகு
சேர்த்திட வேண்டித்தான்
நீ சூடியதெனத் தெரியாமல்...

பாவம்

உன் தலையில்
மல்லிகைப் பூவினைச் சூடியதும்,
ரொம்பவே கர்வப் பட்டு
பிதற்றுகிறது அன்பே
உன்னில் சேர்ந்துவிட்டதென...
விடியும் வரையிலான
நம் காதல் விளையாட்டில்
வெந்து, நசுங்கி, காய்ந்து
உயிர்விடப் போவது தெரியாமல்
- பாவம்...

பூக்களின் பரிசு

பூக்களைப் பரிசளித்து தான்
காதலைச் சொல்வார்களாம்...
பூக்களுக்கும் காதல் வந்து விடில்?
அஞ்சாதே கண்மணி...
உன்னை தான் நான்
இறுகக் கரம் பிடித்து
கட்டி அணைத்துள்ளேனே...

மரணம்

மரணமும்
என்னை அழைத்திட
தடுமாறித்தான் போகுமடி...
ஒரு நாள்
உன்னைப் பிரிந்ததற்க்கே
நான்பட்ட
அவஸ்தைகளை கண்டு...

தேடல்

தேடிக் கொண்டிருக்கிறேன்
காற்றின்றி வாழக்கூடும் இடத்தினை..
என்னைவிடவும் என்னவளை
அதிகம் சீண்டுவது - அந்தக்
களவாணிப் பயல் காற்று தானே...

Friday, 17 December 2010

நன்றி காதலா

என் மடியில் படுத்துக் கொண்டு
என் விரல்களில் சொடுக்கியபடியே
நன்றி சொன்னாள் என்னவள்...
ஏனென்று வினவிக் கேட்கையில்
என் மடியில் நீ படுத்துறங்கும் போது
உன் தலை கோதி, கன்னம் வருடி
நீ தூங்கும் அழகை இரசித்திடும்
ஒரு தாயின் நிலையை
தொட்டடைந்தேன்
காதலா...
தனிமையில் உன் மடியினில்
நானும் தலை சாய்த்திடுகையில்
காதலனின் கதகதப்பும்,
அன்பின் அரவணைப்புமாய்
ஒரு சேரக் கண்டேன் காதலியாய்...
நெஞ்சில் சுமந்த காதலுக்கும்
மனதில் சுமந்த மழலைக்கும்
உண்டான சுகத்தினை தந்தமைக்கு
தானென்று முத்தமிட்டாள்
கண்ணடித்தபடி...

பயணம்

ஆகாய விமானத்தில்
உன்னை அழைத்துச் செல்ல
ஆசையோடு வந்திட்டால்,
நீயோ என்மீது
யானை சவாரி செய்திட
கெஞ்சிக் கேட்கிறாய்...
அது சரி தான்
என் அணைப்பிலே ஆகாயத்தில்
மிதக்கும் உனக்கு முன்
விமானப் பயணம் எடுபடுமா?

போட்டி


யாரின் அன்பு பெரிதெனப் போட்டியில்
என்னைக் கருவில் சுமந்தவளும்
தயங்கித் தவித்து தான் போனாள்,
என்னை இதயத்தில் சுமக்கும்
உன்னைப் பார்த்த மட்டில்...

வள்ளல்


கடைஎழு வள்ளல்களுள்
புதியவனாய் நான்...
என் தனிமைகளையும்
இரவுகளையும்
உன் நினைவுகளுக்காக
அள்ளிக் கொடுத்ததால்...

வார்த்தை


"ஐ லவ் யூ".
உலகின் மிக
நீண்டதொரு வார்த்தை
காதலைச் சொல்லுகையில்...

Monday, 13 December 2010

கர்வம்

உன்னைப் பற்றி
எழுதிய
வார்த்தைகளுக்கு
கர்வம்
ஏறிவிட்டது போலும்...
ஒரு
முறை
உச்சரித்து
விடு அன்பே
எனது
பெயரை...
கர்வம்
தலைக்கேறிய வார்த்தைகள்
உன்
மொழியைக் கேட்டு
நாணிச்
செத்தொழியட்டும்...

Saturday, 11 December 2010

காதலே இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்...

காதலுக்காய் காத்திருப்போருக்கெல்லாம்
எட்டாக் கனியாகி - கனவிலும்
காதலிக்கா என் மனதில் ஏனடி உதித்தாய்....

முட்செடிகளைப் போன்றதொரு வாழ்க்கையினில்
பெரும்பகுதி கழித்த பின்னர்
பூந்த்தோட்டத்திற்கு ஏனடி ஏதிர்பார்க்க வைத்தாய்...

பெயருக்கும் பாசத்தைப் பார்த்திரா
பாலையாகிப் போன பாழான இதயத்தில்
சோலையாக ஏனடி மாற்றிடச் செய்தாய்...

சிரித்துக் கூட பழக்கப்படா என் இதழில்
வாஞ்சையில்லா உன் கன்னம் பிதுங்கும்
சிரிப்பிற்க்காய் ஏனடி என்னை ஏங்கிச் செய்தாய்...

பட்டமரம் போல் வாழ்ந்து
பாசம்பற்றி தெரியாது வளர்ந்து இன்று
உன் அன்பிற்கு
ஏனடி பரிதவிக்க வைத்தாய்....

நொடிக்கணக்கில் சிரிப்பும்
மணிக்கணக்கில் மௌனத்தையும்
தோழனாய் வைத்திருந்த என்னை
உன் பேச்சினில் ஏனடி எதிரியாக்கினாய்...

நீ தான் வாழ்க்கை எனத் தெளிந்து
உனக்காய் மாற்றங்களை
மறுப்பேதுமின்றி அணிந்துகொண்டேன்...

உம்மென்ற கோவத்தையும் சிறிது சிறிதாய்
இதழ்களின் அசைவிலே உடைத்தெறிந்தேன்...

கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து திரிந்த
என் வாழ்க்கையின் நாட்களை
உன் சொற்களில் கடிவாளமிட்டு
அடிபணியச் செய்திட்டேன்...

உன்னை மட்டும் என் உயிரென
எண்ணித்தான் புதியதாய் ஜனனித்தேன்...

ஒவ்வொரு நொடியிலும் உன் அணைப்பிலே
மறுநொடி பிரிய நேரிட - அப்படியே
உறைந்து போக யோசித்திட்டேன்...

வாஞ்சையில் காதலித்து,
கோபத்தில் கண்டித்து
குறும்பாய் கண்ணடித்து
ஆசையாய் முத்தமிட்டு
ஏமாற்றத்தில் கன்னமறைந்து
காதலில் கட்டியணைத்து
தோல்வியில் தோள்கொடுத்து
கனவிலும் உடன்வந்து
அன்னையாய் ஊட்டிவிட்டு
மழலையாய் கரம்பிடித்து
தோழியாய் தோள்சாய்ந்து
அன்பாய் அரவணைத்து
செயலில் துணை நின்று
உறக்கத்தில் மடி தந்து
விரக்தியில் நிழலாக
வெற்றியில் பரிசாக
உடலில் உயிராக
உயிரில் உணர்வாக
ஏனடி இருந்து தொலைந்தாய்...

இப்படி என்னை மட்டும் தவிக்க வைத்து
நீ மட்டும் தொலைந்து போவதற்கா?

உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...

உனக்கும் வலித்திருக்கும்
எனக்கும் நன்றாகவே புரியுமடி...
சந்தோசமாய் உள்ளேன் என பொய்யுரைத்து
உன் எண்ணத்தில் கல்லெறிய
துளியும் மனமில்லையடி எனக்கு...
உனது சந்தோசத்திர்க்காய்
என்னவேண்டுமானாலும் பொய்யுரைப்பேன் என்று
என்னைப் பற்றி உனக்குத் தெரியுமென்பதால்...

நினைவு இனிமையாகத் தான் இருந்தது அன்பே
என்னருகில் நீ இல்லாத பொழு - இன்று
அந்த நினைவோ மிகக் கொடியதாய் மாறிவிட்டது
எனக்காய் நீ இல்லாத பொழுது....

மரணத்தை தள்ளி வைத்திடும்
எண்ணமெல்லாம் எனக்கில்லை அன்பே...
என் ஆயுளையும் இரவினையும்
உண்டு பெருத்து அடங்காப் பசியோடு
என் அடுத்தடுத்த நொடிகளை
ருசித்திட இருக்கும்
நம் காதலின் நினைவுகளுக்காகவே
விரும்பியே எதிர்ப்பார்க்கிறேன் மரணத்தை...

உடல் விட்டுப் போன உயிர்
திரும்பிடாத பிணமாகத் தான் வாழ்கிறேன்...
என் சரீரம் நீ விட்டுப் போனதிலிருந்து,
உணர்ச்சியின்றி, மகிழ்ச்சியின்றி
திரியும் என்னைப் பார்த்து தான்
நடைபினமென்னும் வார்த்தை உண்டானதோ...

நான் படும் வலிகள் யாவும் உனக்கும்
உண்டென்று தானடி என்னிதயம் வலிக்கிறது...
உன்னைக் கலங்கிட விடாமல்
உன் தலைகோதி
தனிமை உனையண்டாது விரட்டியடிக்க,,
உன்னையறிந்த நான் உன்னருகில்
இல்லையென்ற ஏக்கத்துடன்,
நொடிக கணத்திலும் பிரிவென்னும் இருளில்
உன் நினைவுத் தீ கொழுந்துவிட்டு எரிய
இதயம் மெழுகாய் உருகி
வாழ்கிறேன் கண்களில் கண்ணீரோடு ...

Friday, 10 December 2010

தாலாட்டு


உன் காதில்
தவழும் தொங்கட்டானில்
குடியேறிக் கொள்கிறேன்...
தலையாட்டலில்
தாலாட்டாய்
உறங்கிப் போக...

உந்தன் நினைவு


மறக்க முடியாதொரு
நினைவு தான் காதல்...
மரண நொடிகளில்
உயிர் நடை கொள்ளும் பொழுதும்,
உயிரோடு உடனேறி வருகிறது
உன் நினைவுகள்...

Thursday, 9 December 2010

முத்தம்


கன்னத்தில் நீ தந்த முத்தத்தில்
எச்சில் தடம் - அழிக்க மனமில்லை..
மேற்கொண்டு கிடைக்காதாவென
ஏக்கத்தில் இதயம் தேம்பிட,
சட்டென்று பதித்து விட்டாய்
என் இதழ்கள் உன்னோடு...
பெண்மையின் கண்கள்
நாணத்தில் சொருகிட,
ஆண்மையின் நிலையோ சூடேற,
ஆவியாகிக் காய்ந்து போனது
உனது எச்சில் முத்தம்...

Tuesday, 7 December 2010

நிம்மதி


நிம்மதியற்று திரியும் என்னை
நிம்மதி வேண்டி - கோவிலுக்கு
செல்லச் சொல்கிறார்கள்...
அவர்களுக்கெப்படி தெரியும்,
என் நிம்மது போனதற்கு
காரணமே கோவிலினுள்
உன்னைப் பார்த்ததுதானென்று...

சேலை


பகலில் உடுத்திட
ஆயிரம் வண்ணங்களில்
சேலை தேடுகிறாய்
இன்னமும் திருப்தியின்றி
தினம் தினம் - ஆனால்
இரவினில் மட்டும்
ஓரே வண்ணத்திலான
என்னை மட்டும்
உடுத்திக் கொள்கிறாயேயடி...

காதலர்கள்


உன் அழகை அணைக்கும்
இரு காதலர்கள்..
பகலில்
உன் மேற்தோலாய் சேலை...
இரவில்
உன் சேட்டையன் நான்...

மானம் காக்க


அன்பே உன்
மானம் காத்து அணைக்க,
இவ்வளவு நீள சேலை
ஏதற்கடி...
என் ஆறடி சரீரம் போதாதா?

சிக்கனம்


சிக்கன வாழ்க்கையின் சிறப்பை
உணரலாமேயடி அன்பே இனிமேல்...
இரவினில்
ஒரே போர்வையினில் உறக்கம்..
தனிமையில்
ஒரே சட்டையினுள் வாசம்...

தெரியவில்லையா


காதலிக்கும் நாட்களில்
எங்கு பார்த்தாலும்
நானாகத் தான்
தெரிகிறேன் என்பாயடி...
அந்தக் கூற்றெல்லாம் பொய்யோ?
இன்று கொஞ்சமாவது
தெரியவில்லையாயடி நான்,
மணமாகி உன் கணவனோடு
நீ செல்லும் வழி எங்குமே...

வலி


நீ இறந்திருந்தால் கூட
இவ்ளோ வலி
கொண்டிருக்காதடி என்னிதயம்,
எங்கே உன்னைப்
பார்த்துவிடுவேனோ
என்ற பயத்தினில்
வாழ்வதைக் காட்டிலும்...
உன் பிரிவில்...

காரணம்

எத்தனையோ முறை
பதில் வராதக் கேள்வியை
கேட்டுள்ளேன் அவளிடம்...
ஏண்டி என்னை உனக்குப்
பிடிக்குமென்று?
எந்த மகளுக்குத் தான்
தந்தையை பிடிக்காது போகுமேன்றாள்
வழக்கம் போல் சிரித்தபடியே...

அழுகை


பிறக்கும் பொழுது துளியும்
அழுகவில்லையாம் நான்...
என் வாழ்வில் உன்னால்
ஒரு பிரிவுன்டென்று,
அப்பொழுதே கண்டுகொண்டு
கண்ணீரை எல்லாம் சேமிக்க
தொடங்கி விட்டேன் போல...

மோட்சம்


உன்னை அணைக்க நினைத்த
சேலைக்கு இன்று மோட்சம்
தந்து விட்டாய் உடுத்தி...
எனக்கென்று
தரப்போகிறாய் மோட்சம்...

பார்வை

ஈசலின் வாழ்க்கையும்
என் கண்களும்
ஒன்றுதான் போலும்...
உன் பார்வை
கிடைத்துவிட்ட திருப்தியில்
அன்றைய பொழுதின்
உயிரை முடித்துக் கொள்கிறது...

காதல்

உருகும் மெழுகாய்
என் இரவு...
எரியும் நெருப்பாய்
உன் நினைவு...
விரும்பிக் கருகும்
நான் நூலாய்...
ஒளியாய் உன்
காதல் மட்டுமின்றி....

முத்தம்


வேண்டாமடி இனிமேல்
அலைபேசியில் முத்தம்..
உன் எச்சில் முத்தத்திற்கு
நான் ஏங்கிக் கொண்டிருக்க,
நோகாமல் பெறுகிறது
உந்தன் அலைபேசி...

கண்ணீர் சுவடு

நிஜம் தூங்கிடும் பொழுது
நிழல் மெல்ல எட்டிப் பார்க்கிறது..
நிஜ உலகின் நிதர்சன உண்மைகள்
நினைவுகளாய் என்னில் கனவுகளாய்
நிஜமாய்க் காட்டிடுது உறக்கம்...
நித்தமும் உன் மடி படுத்துறங்க,
நிலையாய் உன் காதல் அடிமையாய்,
நிழலாய் உன் அணைப்பில் வாழ,
நிமிடங்கள் உன்னருகில் வரங்களாய்,
நிறம் மாறிடாத உன் புன்னகையாய்,
நீட்டிக்க விரும்பிடும் தனிமைகளும்,
நிம்மதி பெருமூச்சிடும் உன்னிதயமும்,
நித்தமும் இப்படி இம்சிக்கும்
நின் நினைவுகள் என எண்ணுகையில்,
நிதர்சன உண்மையாய் உணர்த்திடுதே,
நித்தம் காலை எழுகையில்
நிரந்தரமாய் கண்ணோரம் கண்ணீர் சுவடு...

கவிதை


நான் எழுதுவதை
கவிதையெனக் கூறுகிறார்கள்...
நான் எழுதுவது
உன்னைப் பற்றிய
சுயகுறிப்பு தாண்டி...
குறிப்பெப்படி கவிதையாகும்..

பெயர்

என் இதயத்தையும்
இரவினையும் தானே
உனதாக்கிக் கொண்டாய்...
இப்பொழுது என் பெயரினையுமா?
என்னை அழைக்கும் போது
திரும்புகிறாயே
உன்னை அழைத்ததாய்..

நீயில்லா நான்

அடிக்கடி உன்னை
உப்பு மூட்டை சுமக்கச்
சொல்லும் பொழுது
பூ மூட்டையான உன்னை
உப்பெனச் சொல்லிக் கொள்ள
உடன்பாடில்லை தானெனக்கு...
சிறிது நாட்களிலே
புரிய வைத்துவிட்டாயடி அன்பே...
நீயில்லா என் வாழ்க்கை
குப்பையில் வாசம் கொள்ளும்
உப்பில்லாப் பண்டமென்று...

ஜூன் 18


உன்னால் தானடா
நானின்று தாயானேன்...
நம் காதல் குழந்தையை
பிரசவிக்கும் பொருட்டு...

ஏமாற்றம்

ஏமாற்றம்.
தாங்கிக் கொள்ளத் தயங்கும்,
புறம்தள்ள முடியா நிகழ்வு.
ஒவ்வொருமுறை ஏமாறும் பொருட்டு
கண்ணீர் பொங்கும் மனம் - இன்று
ஏமாற்றத்திற்காய் ஏங்குகிறது...
நீயென்னை ஏமாற்றி
என் முன் பூக்கும் - கபடமற்ற
உன் சந்தோசச் சிரிப்பில்
இப்படி ஏமாளியாகவே
மாறிடக் கூடாதா என்று...

பாவம்


உன்னை அணைக்க நினைக்கும்
எனக்குத் தான் பார்வையில்
தடை போட்டு தடுக்கிறாய் எனில்
உன்னை நனைக்கி வந்திடும்
மழையையும் தடுக்கிறாயே
குடையை பிடித்து...
ஆண்பாவம் பொல்லாதது அம்மணி...

வெட்கம்


நீ கிள்ளிய இடம்
சிவந்துப் போக
என் வெள்ளை நிறம்
காரணம் இல்லையடா...
நீ தொட்ட இடத்திடம்
அச்சுகம் கேட்டிட வேண்டி,
அவ்விடம் விரையும் குருதியின்
ஆர்வம் தானடா காரணம்...

எதிர்பார்ப்பு


எதிர்பார்க்கும் பொருளை
எதிர்பாரா நேரம் தருவதுதான்
மகிழ்ச்சி என்பாய்...
நான் கவனிக்கா நேரம்
பின்னாலிருந்து நீ அணைப்பாய்,
கன்னத்தில் முத்தம் பதிப்பாய்.
எதிர்பாரா நேரத்தில் கிடைத்ததென
நான் மகிழ்வேனென்று...

இந்த அணைப்பும் முத்தமும்
எந்நொடியும் உன்னிடமிருந்து
எனக்கு வேண்டுமென்பதே
என் ஆசை என்று
இன்று வரை உனக்குத்
தெரியாது மறைத்த இரகிசயம்...

என் காதல்


கரு சுமக்கும் தாயானேன்
என் காதல் சுமக்கும் நான்...
காதலை பிரசவிக்கும் நாள்
இது தானாவென்று
ஒவ்வொரு நாளும் கரைகிறது...
தாயிடத்தில் இறந்து போன
சிசுவாய் என் காதலும்,
உன்னிடம் சொல்லபடாமலே...

Monday, 6 December 2010

தெரியவில்லை

முன்னெல்லாம் தவறு செய்தால்
துளியும் கோபம் கொண்டிடாய்...
இப்பொழுதெல்லாம் கோபம் கொண்டு
முகத்தினை திருப்பிக் கொள்கிறாய்...
ஏனடா இந்தப் பழக்கமென
என்னிடம் கேட்கிறாள்
என் காதல் ராட்சசி...
கோபம் போக்கும் பொருட்டு
என்னை அணைத்தது நீ தரும்
முத்தம் தானடி காரணமென
ஏனோ சொல்லத் தெரியவில்லை...

சோதனை

உன் நினைவுகள் எனக்கே
சொந்தமாக்கிய பின்னரும்
இன்னும் ஏனடி தயக்கம்
உன்னிதயம் தருவதற்கு...
என்னைச் சோதனை செய்வதாயின்
என் காதல்
பிடித்துப் போன காரணத்தால்,
என்னைவிட்டு செல்ல மறுக்கும்
உந்தன் நினைவுகளிடம்
கேட்டுப் பாரடி பெண்ணே
ஒரு நொடியும் உன்னை
மறவாமளிருக்கும் என்
காதலைப் பற்றி...

நேசம்


என்னை விடவும்
என் வார்த்தைகள் தாம்
உன்னை அதிகம்
நேசிக்கிறது போலும் சகியே...
உன்னை நினைத்திடும் வேளையிலே
என் பக்கங்கள் யாவும்
நிரம்பிவிடுகிறதே...

அணைப்பு

இப்பொழுது எல்லாம்
போர்வையும் என்னைப்
போர்த்தி கொள்கிறது காதலா
உன்னைப் போலவே...
அதுக்கெப்படி தெரிந்ததெனத்
தெரியவில்லையடா?
எனக்கு உன் மார்பில்
போர்வையாய் படர்ந்து
உன்னை அணைத்தபடியே
தூங்கிடப் பிடிக்குமென்று...

காதலியின் ஏக்கம்

உன்னை வெறுத்து தடுக்கும்
மனிதரை நனைக்க நினைக்கிறாய்...
உன்னையே எண்ணி
உனக்காய் காத்திருக்கும் என்னையேன்
நினைக்க மறுக்கிறாய்...
எனக்கு மட்டும் சொந்தமான
உன்னை என்னைக் கொண்டு
தடுக்கும் உள்ளங்களுக்கு நன்றி...
இப்படிக்கு
உன் அணைப்பில் நனைய
ஏங்கும் காதலி
குடை...

மோகத் தீ


குளிர்ச்சியிலும்
ஒரு வெப்பமுண்டு - இந்த
மழையில் உன்னோடு
நனைந்த பின் உணர்ந்தேன்
உன் நடுக்கம் கண்டு...
ரத்தமும் சதையுமான உடல்
எங்கே போனது இன்று?
உரசியதும் மோகத் தீ பற்றிட
மாறிவிட்டன சதையும்
கந்தகப் பிண்டமாய்...

தடை

உன்னை நனைத்திட வேண்டி
உன்னோக்கி புன்னகை பூத்து
பூமிக்கு வந்த மழைக்கு
தடை போட்டாய் குடையால்...
உன்னோடு கோபம் கொண்டு
தூரம் தள்ளி வந்த எனக்கு
குடையில் இடம் தந்தாய் மழையால்...

மழை நண்பன்

இதயங்கள் இணைந்த பின்னும்
தூரம் தள்ளி நடை சென்றோம்
புதிதாய் காதலில் ஜனனித்தவராய்...
தானாய் உதவிடும் தோழனாய்
நெருக்கத்தை தருவிக்க வேண்டி
தூரத்தைப் புறம் தள்ளி,
நெருங்கி நடக்க வைத்திட்டான்
தன் மழையால் குடையில்...

விதிவிலக்கா

இப்படியே குடைக்குள்
உன் நெருக்கத்தில்
உன் உடற்சூட்டில்
உன் நேர் பார்வையில்
உன் கதகதப்பில்
உன் நனைந்த அழகில்
உன் துவட்டலில்
உன் மேல்சிந்தும் துளியில்
உன் மழையின் இரசிப்பில்
உன் குளிரின் நடுக்கத்தில்
உன் நெருக்க மூச்சில்
உன் பூனை நடையில்
நிமிடங்களை நகர்த்த
எத்தனிக்கும் வேளையில்
மழையும் நின்று போனதே...
எந்தக் காதலன் தான்.
தான் காதலிக்கும் பெண்ணின்
காதலுக்கு துணை நின்றான்
மழை மட்டும் விதி விலக்கா?