Sunday, 17 June 2012

குத்திடும் முட்களின் சுகம்

என்னை முத்தமிடுகையில்
கன்னம் குத்திடும்
உன் உரோமங்களில்,
ரோஜாவினை குத்திடும்
முட்களின் சுகம் கண்டேனடா...

நீ...

பலவற்றிற்கு
ஓரே பொருள் கொண்ட
என் தமிழிற்கு அடுத்து
நீ...

மீளுகிறேன் நான்...

கடும் வெயிலுக்கு
பட்ட மரத்தினடியில்
ஒதுங்கிய பொழுது தானடி
கண்டுகொண்டேன்,
உன்னை இழந்து
பட்ட மரமான என்னில்
வாழும் குடும்பத்தின் தவிப்பை.
மீளுகிறேன் தளிர்க்க,
எனக்காய் அன்றி
என்னுள் ஒதுங்கிய
குடும்ப நெஞ்சங்களுக்காய்..

நீயின்றி பயணம்

நமக்குப் பிடித்த இள மாலை
நமக்குப் பிடித்த குளிர் வேளை
நமக்குப் பிடித்த வெயில் மறைத்த மேகம்,
நமக்குப் பிடித்த நீர் கோர்த்த காற்று
நமக்குப் பிடித்த மண் வாசனை,
நமக்குப் பிடித்த ஊசிச் சாரல்,
நமக்குப் பிடித்த நுழைவு வாயில் வானவில், 

நமக்குப் பிடித்த மணல் நடுவே தார் சாலை,
நமக்குப் பிடித்த கை கோர்த்த தனிமைப் பயணம்
நமக்குப் பிடித்த காதலோடு
உனக்குப் பிடித்த நான்
எனக்குப் பிடித்த உன்னை
எண்ணியபடியே பயணம் நீயின்றி...

காதல்

பாதுகாக்கப் பட வேண்டிய
காதல் - இன்று
கடற்கரை, பூங்கா சந்தைகளில்,
ஓசையின்றி விற்கப்படுகிறது,
பார்க்கும் வாடிக்கையாளரின்
முகம் சுளிக்க வைத்தும்,
இனிமேல் வாங்க எண்ணிடாத
எண்ணம் வளர்க்கும் வகையில்...

தலைப்பில் நீ..

தலைப்பினுள்
அடைபட்டுக்கிடக்கும் கவிதையாய்,
அடை பட்டுக்கிடக்கிறது
என் வாழ்க்கை உன்னில்.
 

மொத்த கவிதைக்கான
முகவரியாய்,
என் வாழ்க்கைக்கான
தலைப்பில் நீ..

பட்டால் தானா?

காதல் திருமணத்தின்
சந்தோசங்களை எல்லாம்
அனுபவித்திடாமலே
எழுதுகிறேன் கவிதையில்,
உன்னுடன் வாழ்ந்த
காதல் பூரிப்பிலே...

என் கல்லூரி நினைவுகள்.


மஞ்சள் வெயில் மாலையில்
நனைந்து கொண்டே
ஏதோ ஒன்றினை
தொலைத்த தவிப்பினில்,
இன்னதென்று சொல்ல முடிந்திடாத
நெருடல் நெஞ்சினுள்...

படபடப்பும்
வலியும் ஒரு சேர
இதயம் கவ்விக் கொள்கிறது.

இயக்கமில்லா இயந்திரமாய்
செயலற்று நிற்கிறது இதயம்.

உன்னைப் பார்த்த
முதல் நாளிலிருந்த பயம்
இப்பொழுதும் அப்படியே
உன்னைப் பிரிவதிலும்…

உன்னால் கிடைத்த
நட்புகளும், அன்புகளும்
அவ்வளவு தானாவென கேட்டவாறே
கண்களை கண்ணீர் மூடுகிறது
கடைசி நேரத்தினை...

எத்தனையோ முறை
உன்னில் தலை சாய்த்து
என் சோர்வு களைந்துள்ளேன்.

வெற்றி பெற்ற நேரங்களில்
காலடியில் முத்தமிட்டு
உன்னை கட்டி அணைத்துள்ளேன்...

முதன் முதலாய்
தாய் பிரிந்து பள்ளி செல்லும்
பிள்ளையின் பிரிவும் அழுகையும்
மொத்தமாய் உனை விடுத்து
இல்லம் செல்லுகையில்...

தொலைக்கப்பட்ட
குழந்தையின் அரற்றல்
என்னை நீ புறம் தள்ளுகையில்..

பிரிந்து விடாதே என
கெஞ்சிக் கதறுகையில்
வழிந்த கண்ணீர் துளிகள்
இன்னும் உன் காலடியில் தான்
சிந்திக் கிடக்கிறது...

என்னை விட உனக்கு
நேற்று வந்தவன்
முக்கியமாகிப் போனதை
எண்ணுகையில் தான்
தாங்கிட முடியாத வலி.

உன் பாதம் பதித்த முத்தங்களும்
உன் பெருமை கூறும் கவிதைகளும்
மர பெஞ்சுகளும், சுவர்களும்
தாங்கிய என் பெயர்கள் தான்
என் காதலை உன்னிடம் சொல்லும்
கடைசி சாட்சியங்கள்.

என்ன சொல்லி
என்ன ஆகப்போகிறது
நீ வேறு நான் வேறு
என்றாகிவிட்ட பின்.

உண்மைகளை எனக்குணர்த்தி
உன்னை மீண்டும் பெற இயலாத
ஆறாத் துயரில்,
அவ்வப்போது என்னில்
எழும் உன் நினைவுகள்
என்னைப் பதம் பார்க்கையில்
பார்த்துக் கொள்கிறேன் உன்னை
நிழற்படத்தினை...

Sunday, 15 April 2012

விழுந்த மை துளி

பிறந்த பயனின்
மோட்சம் கிட்டவில்லையென
நொந்தபடியே
உயிர் துறக்கிறது...
உனக்கான கடிதம் எழுதுகையில்
உதறிய பேனையின்
விழுந்த மை துளி...

கிணறு

நீச்சல் தெரிந்தவனும்
தற்கொலை செய்து கொள்ளும்
கிணறு இந்தக் காதல்..

பிடித்த ஒரே விஷயமாய்

வண்ணம் முதல்
நடிகர்கள் வரை நம்மிடயே
பிடிக்காத விஷயங்கள்
ஆயிரம் உண்டு..
பிடித்த ஒரே விஷயமாய்
காதல்...

தவிக்க வைத்திடுது

உன்னைக் காதலிக்கும் முன்னர்
நான் இழந்த இருபது வருடங்கள்
ஒரு பொருட்டல்ல..
காதல் வந்த பின்பு
உன்னைக் காணாத
இருபது நொடிகள் நொடிகளுக்காய்
தவிக்க வைத்திடுது
இந்தக் காதல்
...

Saturday, 14 April 2012

விசமக்காரன்

உனக்காய் காத்திருக்கையில்
ஒரு நொடிக்குள்
ஒராயிரம் நிமிடங்களை
ஒளித்து வைக்கும்
விசமக்காரன் - காதல்...

காதல்

என்னை உனக்கு
பிடிக்காமல் இருக்கையிலும்,
உன்னை அதிகமாய்
எனக்கு பிடிக்கச் செய்வது..
காதல்
...

கிறுக்கன்

ஏறத்தாழ
எல்லா மொழிகளின்
அகராதி வார்த்தைகளுக்கும்
எதிர்மறை விளக்கம் கொடுக்கும்
கிறுக்கன் இந்தக் காதல்
...

பாழாய்ப் போன காதல்

உன் நிழலிடத்தும்
ஸ்பரிசம் கேட்கவைக்கிறது
இந்த பாழாய்ப் போன காதல்
...

கெஞ்சிட வைக்கிறது காதல்

உன்னை விட்டுக் கிளம்புகையில்
கடல் அலையில்
விளையாடும் குழந்தையாய்
இன்னும் கொஞ்ச நேரம் என
கெஞ்சிட வைக்கிறது காதல்