Monday, 16 July 2012

எனக்கு மட்டும் காதலாய்...

இருவருக்கும்
ஒரே இடம்.
ஒரே நேரம் தான்.
பிறகு ஏனடி
நட்பாய் என் தோளில்
நீ கை போடுகையில்,
காதலாய் தெரிகிறது எனக்கு...

இறுகும் அணைப்பு

ஒருவருக்குப் போதுமென
எண்ணுகின்ற வேளைகளில்
மற்றவருக்குப் போதவில்லையென
மேலும் இறுகுகிறது
நமது அணைப்பு....

கட்டுண்டு போகிறது காதலும்...

இறுக்க அணைத்த நம் உறக்கத்திலே
எங்கே நான் முழித்தால்
உன் உறக்கம் கலையுமென நானும்,
உன் முழிப்பில்
என் உறக்கம் கலையுமென நீயும்,
கண் மூடியபடியே படுத்திருக்க,
கட்டுண்டு போகிறது காதலும்...

நீயும், நானுமாய்

என் மார்புக்கூட்டின் தலையணையில்
நீ தலை சாய்த்திருக்கையில்
என் கழுத்து தங்கச் சங்கிலியில்
உன் கருத்த உரோமச் சங்கிலியும் 
உறவாடுகிறதடி நீயும், நானுமாய்…

நட்பு.

இனம் பார்த்து
அமரா வண்டினாய்
முகம் பார்த்து
நெஞ்சில் அமரும் பூ...

புன்னகை நடுப்புள்ளி

நீள அகலங்களற்ற
சதுரத்தின் நடுப்புள்ளியாய்
உன் புன்னகையில் இருந்தே
தொடங்கப்படுகிறது
என் காதல்...

பணம்

பாசம் குடியிருந்த
கருவறை அகற்றி
கும்பாபிசேகம்
பணத்திற்கு...

காத்துக் கிடக்கும்

உன் கொஞ்சல்களுக்கும்
வர்ணனைகளுக்கும்
காத்துக் கிடக்கிறது
என் பால்ய வயது
புகைப்படங்கள்...

அணைப்பு

உனது வியர்வையில்
என்னுடல் நனைக்கும்
அணைப்பு வேண்டும்...

இன்றைய நிலவரம்

எனக்கானவள் எங்கோ
காதலித்துக் கொண்டிருக்க,
அவளுக்காய் நான் இங்கே
காத்துக் கொண்டிருக்கிறேன் 
அவளைக் காதலிக்க...

பிழை

கவிதையில் திருத்தப்படா
பிழை. 
உன் பிரிவு...

விலை ஏற்றம்

வருடத்திற்கு 100 ருபாய்
வருமானம் ஏறுகையில்,
வாரத்திற்கு 100 ருபாய்
விலை ஏறுகிறது...

நியாயம் இல்லா தேடல்

தொலைந்தது என
உறுதி செய்ததை தேடுவதில்
நியாயம் இருந்திட,
தொலைந்ததா இல்லையா என
தெரிந்திடாமலே என் தேடல்
நீண்டு கொண்டிருக்கிறது

தேடல்

கூட்டம் அனைத்தும்
கலைந்த பின்னரும்,
உன்னைக் கண்டிட
என் தேடுதல் தொடர்கிறது,
நீ வந்து சென்ற
தடயமாது கண்டிட...

உன் பார்வை

தேரிழுக்கும் வடமாய்
என்னை இழுத்துச் செல்கிறது
உன் பார்வை...

அலைபேசி

அலை பேசியின் வரவினால்
அழிவது குருவிகள் மட்டுமல்ல,
நொடியும் பேசிக் கொண்டே
கலையும் காதலும் தான்...

குழந்தையில்லா தாயின் ஏக்கம்

வெற்றி பெற்ற பாடல்களைக்
கேட்டிடும் வேளைகளில்
எனக்கொரு குழந்தை
இல்லையென வருந்துகிறேன்
அந்தப் பாடலை பாடிட...

Wednesday, 4 July 2012

என் கோபம்

நெருப்பின் மேல் 
படர்ந்திருக்கும் பனியாய் 
உன் அருகாமையில் 
என் கோபம்...

பிடித்த பாடல் நீ


புதுமைகள் பல
அலைவீசுகையிலும்
பால்ய வயது
பிடித்தப் பாடல் நீ...

நிலைக்க மறுக்கும்

தேவையானவர்களுக்கு
கிடைத்திடாத மின்சாரமாய்
உண்மையானவர்களிடம்
நிலைக்க மறுக்கும்
உண்மைக் காதல்...