Sunday, 26 June 2011

உன்னுடன்

நான் நேசிக்கும் காதலும்
உன் நெருக்கமான ஸ்பரிசமும்
நீ தந்திடாமலே அதிகமாய்
என்னிடம் உரிமையாகக்
கொண்டிருக்கிறேன்
உன்னுடன் நான் வாழும்
நிழலுலகில்...

முடியவில்லை

முடியாத ஒன்றை
முடித்துக் காட்டும்
எந்தன் மனதிற்கு,
முடியா தொடர்கதையாய் ,
உன் காதலை எனக்குச்
சொந்தமாக்கிடவோ அல்லது
உன் நினைவுகளை
என்னிடம் அந்நியமாக்கிடவும்...

வண்ணம்

நம் காதல் கரை
படிந்து போன
எந்தன் வெள்ளை
மனச் சுவற்றில்,
எந்த வண்ணத்தை
தீட்டி மறைக்க...

Monday, 13 June 2011

இதழ் முத்தம்

எனது
கருத்த நிறம் பார்த்து
ஏளனம் செய்த
மருதாணி பூசிய விரல்கள்
இன்று மருகிப் போய்
பார்க்கிறது அன்பே...
உன் இதழ் முத்தத்தில்
சிவந்து போன,
கன்னங்கள் பார்த்து...

முத்தம்

உனது
முத்தத்தில் சிவந்த
என் கன்னங்களைப் பார்த்து,
உள்ளத்திலே ஒரு கேள்வி...
உடல் மொத்தமும்
சிவப்பாகி விடலாமா
உன் முத்தத்திலே என்று...

அம்மா...

தாயை பற்றி
கவிதை எழுதக் கேட்டார்கள்...
...அம்மா...
இதை விட
வேறென்ன சொல்லிட..
மொழியின் முதல் எழுத்தை
கொண்டவளிடம் தான்
அனைத்தும் அடங்கிவிட்டதே...

ஏமாற்றம்

நிலவைக் காட்டி
சோறுட்டும்
அன்னையின் இடத்தில்,
உன்னைக் காட்டி
ஏமாற்றுகிறது
காதல்...

விழி

விழி திறந்து
பார்க்கையில் தான்
உயிர் பறிக்கிறாய் என்றால்,
விழி மூடியும்
உறக்கம் கெடுக்கிறது
உன் நினைவு...

காதலித்துப் பார்.

காதலித்துப் பார்.
உன் பின்பம் பார்த்தே
கண்ணாடி உடையுமென
சொன்ன கவிப்பேரரசு,
அவள் வார்த்தையில்
வாழ்க்கை உடையுமென
ஏனோ சொல்ல தவறிவிட்டார்...

அதிகம்

வெந்த புண்ணில்
விரல் பாய்ச்சி
சுகம் காணும்
மிருகங்கள் தான் அதிகம்
நான் வாழ்ந்த காட்டினுள்..

அல்லல்

நாய் பெற்ற
தெங்கம்பழமாய்
அல்லல் படுகிறது
எந்தன் இரவுகள்
உந்தன் நினைவுகளில்...

பிறை நிலவு

அங்கே பாரடி
நீ கடித்து துப்பிய
நகத்தினை,
தேவதை தந்த
பிறை நிலவென்று
எறும்புகள் கொண்டாடுவதை...

அனுமதிச் சீட்டு

இப்பொழுதெல்லாம்
காதல் பேருந்தில்
பயணம் செய்திட தேவைப்படும்
அனுமதிச் சீட்டு:
தூங்க இரவுகள்,
ஏமாற்றம் தாங்கும் இதயம்,
கண்ணீர் கண்களும்,
பிரிவையே பழக்கமாய்
ஏற்றுக் கொண்ட வாழ்க்கையும்....


வாழ்க்கை

ஏமாற்றங்களும்
தோல்விகளும்
இல்லாத வாழ்க்கை,
ரசிக்கும் இயற்க்கை இல்லா
வெறிச்சோடிய
சாலைப் பயணமானது...

காதல்

விசித்திர கால சக்கரம்
காதல்..

உன்னுடன் இருக்கும் நேரத்தில்
எதிர் காலம் யாவும்
நிமிடத்தில்
நிகழ்காலமாய் மாறிட,
நிகழ்காலங்கள்
நொடியில்
கடந்த காலமாய்
சுழன்று விடுகிறதே...

சுமை

சுமைகள்
சுகம் தானென்று
நம்பி வந்தேன் பெண்ணே..
உன்னை நானும்
சுமக்கையிலே...

அந்தச் சுகமே
இன்று சொல்லமுடியா
சுமையாகிப் போனதடி
நீ இன்றி தனியே
தவிக்கையிலே...

உடன்கட்டை

என்னோடு ஒன்றாக
உடன்கட்டை
ஏறினாய் இன்று,
நாம் ஒன்றாய் வாழ்ந்த
புகைப்பட சிதையில்..

ஆசை

குழந்தையின்
கன்னம் பார்த்தால்
கிள்ளி முத்தமிட தோன்றும்...
இங்கோ உனது
கன்னம் பார்த்து
முத்தமிடும் குழந்தையின்
ஆசையில்,
உன்னுடனே இருக்கும்
எனது ஆசையும்..

கொஞ்சல்

நீ கொஞ்சுகையில்
சிரித்து மகிழ்ந்திடும்
மழலையைப் பார்க்கையில்,
யார் யாரை
கொஞ்சுகிறார்கள் என்றே
தெரியவில்லையடி...

இன்பம்

உலகின்
மொத்த இன்பமும்
ஒரு சேர
எந்தன் கைகளில்,
என் காதலியாய்...
ஆனாலும் சில நேரம்
தவிக்கிறது
கூடுதல் இன்பத்திற்கு,
என் மகளையும்
சேர்த்து சுமந்திட...