பெண்களிடம் மறைக்கும் பழக்கம் அதிகமென பலபேர் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால் இன்று தான் புரிந்து கொண்டேன் தாயே குடிகார தந்தையிடம் மறைத்து எனக்காய் சேர்த்து வைத்த திருமண நகைகளில்...
உன்னை கண்டிடாத இடத்திற்கு சென்றிட வேண்டுமென ஆசை பட்டேனடி.. கண் காணாமல் போனாலும் அது நடந்திடாதென, கனவிலும் உன் பிம்பம் தந்து வெறுப்பேற்றுகிறது காதல்...
அளவில் பெரிய பூந்தோட்டத்தில் அழகிய வண்ணத்துப் பூச்சியை தேடுவதே பெரும்பாடாய் இருக்க, உன்னைப் போலொரு அழகு ரோஜாவை தேடிட வைக்கிறான் இறைவன் இந்த நிஜ உலகில் உன்னை தொலைத்த என்னை...
கடும் வெயிலுக்கு பட்ட மரத்தினடியில் ஒதுங்கிய பொழுது தானடி கண்டுகொண்டேன், உன்னை இழந்து பட்ட மரமான என்னில் வாழும் குடும்பத்தின் தவிப்பை. மீளுகிறேன் தளிர்க்க, எனக்காய் அன்றி என்னுள் ஒதுங்கிய குடும்ப நெஞ்சங்களுக்காய்..
நமக்குப் பிடித்த இள மாலை நமக்குப் பிடித்த குளிர் வேளை நமக்குப் பிடித்த வெயில் மறைத்த மேகம், நமக்குப் பிடித்த நீர் கோர்த்த காற்று நமக்குப் பிடித்த மண் வாசனை, நமக்குப் பிடித்த ஊசிச் சாரல், நமக்குப் பிடித்த நுழைவு வாயில் வானவில், நமக்குப் பிடித்த மணல் நடுவே தார் சாலை, நமக்குப் பிடித்த கை கோர்த்த தனிமைப் பயணம் நமக்குப் பிடித்த காதலோடு உனக்குப் பிடித்த நான் எனக்குப் பிடித்த உன்னை எண்ணியபடியே பயணம் நீயின்றி...
பாதுகாக்கப் பட வேண்டிய காதல் - இன்று கடற்கரை, பூங்கா சந்தைகளில், ஓசையின்றி விற்கப்படுகிறது, பார்க்கும் வாடிக்கையாளரின் முகம் சுளிக்க வைத்தும், இனிமேல் வாங்க எண்ணிடாத எண்ணம் வளர்க்கும் வகையில்...
படபடப்பும் வலியும் ஒரு சேர இதயம் கவ்விக் கொள்கிறது.
இயக்கமில்லா இயந்திரமாய் செயலற்று நிற்கிறது இதயம்.
உன்னைப் பார்த்த முதல் நாளிலிருந்த பயம் இப்பொழுதும் அப்படியே உன்னைப் பிரிவதிலும்…
உன்னால் கிடைத்த நட்புகளும், அன்புகளும் அவ்வளவு தானாவென கேட்டவாறே கண்களை கண்ணீர் மூடுகிறது கடைசி நேரத்தினை...
எத்தனையோ முறை உன்னில் தலை சாய்த்து என் சோர்வு களைந்துள்ளேன்.
வெற்றி பெற்ற நேரங்களில் காலடியில் முத்தமிட்டு உன்னை கட்டி அணைத்துள்ளேன்...
முதன் முதலாய் தாய் பிரிந்து பள்ளி செல்லும் பிள்ளையின் பிரிவும் அழுகையும் மொத்தமாய் உனை விடுத்து இல்லம் செல்லுகையில்...
தொலைக்கப்பட்ட குழந்தையின் அரற்றல் என்னை நீ புறம் தள்ளுகையில்..
பிரிந்து விடாதே என கெஞ்சிக் கதறுகையில் வழிந்த கண்ணீர் துளிகள் இன்னும் உன் காலடியில் தான் சிந்திக் கிடக்கிறது...
என்னை விட உனக்கு நேற்று வந்தவன் முக்கியமாகிப் போனதை எண்ணுகையில் தான் தாங்கிட முடியாத வலி.
உன் பாதம் பதித்த முத்தங்களும் உன் பெருமை கூறும் கவிதைகளும் மர பெஞ்சுகளும், சுவர்களும் தாங்கிய என் பெயர்கள் தான் என் காதலை உன்னிடம் சொல்லும் கடைசி சாட்சியங்கள்.
என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது நீ வேறு நான் வேறு என்றாகிவிட்ட பின்.
உண்மைகளை எனக்குணர்த்தி உன்னை மீண்டும் பெற இயலாத ஆறாத் துயரில், அவ்வப்போது என்னில் எழும் உன் நினைவுகள் என்னைப் பதம் பார்க்கையில் பார்த்துக் கொள்கிறேன் உன்னை நிழற்படத்தினை...