Saturday, 26 February 2011

உனக்காக வளர்த்த ஆசைகள் எல்லாம்
நீ எங்கே என்று கேட்குதடி..
நான் கொண்ட தேகம் மண்ணோடு போனால்
உன் நினைவில் மீண்டு உயிர்த்தெழுமே...

ஏக்கம்

விடை பெறும் நேரம் கண்டு
மருகும் இதயம்,
சில நேரம் அதற்காக
ஏங்கவும் செய்கிறது...
விடை பெற்று செல்லும் பொழுது
என்னைக் கண்ணுக்குளேயே
பூட்டி வைத்திருந்தும்,
காணத் துடித்திடும்
உனது பார்வையிலும்,
எனது திசை பார்த்திடும்
தலை திருப்பலிலும்,
உனது அதிகப்படியான
அடங்காத காதலைக் கண்டிட...

காத்திருப்பு

கடிகாரத்தின்
ஒவ்வொரு நொடியும்
நகர்த்தலாக..
உனது வருகைக்காய்
காத்திருக்கும் எனக்கு மட்டும்
மனம் படபடக்க
பெருகிச் செல்லும்
எடைக் கற்களாய்...

உன் காதலால்

அளவுக்கு மீறிய
உந்தன் நினைவுகளால்
நிரம்பி வழியும்
இன்பக் காதலில்,
எந்தன் மேனியும்
சுற்றமும் ஒருவித
பூரிப்போடு தான்
இயங்குகிறது ஒளிவீசும்
தாமரை இலைத் தண்ணீராய்...

ஆசை

உன் முகம் படரும்
கூந்தலாய்
மாறிப் போகவும் ஆசை
உன் விரலில் களையப்பட...

ஆவல்

நீ எப்பொழுது
தூங்குவாயென
காத்திருக்கிறதடி அன்பே
உனது கூந்தல்
முகம் படரும் ஆவலில்.
முழித்திருக்கும் போது தான்
ஒதுக்கி விடுகிறதே
உனது விரல்கள்...

வேண்டுகிறது

நீ துணி காயப்போட
ஆடை உதறியதில்
தெறித்த சாரலில்
சிலாகித்து தானடி போனேன்..
உன் அருகாமையோடு
குளுமையுமாய் திரும்பவும்
உள்ளம் வேண்டுகிறது...

புருவங்கள்

தற்காலிகமானதை எல்லாம்
வானவில் என்றால்
உனது புருவங்களை
என்னவென்று சொல்ல...

கெஞ்சல்

எழுத்துக்கள்
உயிரும் மெய்யும்
எனது பெயரில்
சேர்த்துக் கொள்ள
கெஞ்சுகிறது அன்பே,
உன் இதழ்கள்
என் பெயர்
உச்சரிக்கும் பொருட்டு..

பாக்கியம்

பிள்ளைகள் பெறாமலே
பெயர் வைத்துக் கொஞ்சும்
பாக்கியம் கொண்டவன் நான்
என் காதலிக்கு
செல்லப் பெயர் வைத்ததில்...

கர்வம்

யார் சொல்லி அழைத்தாலும்
எனது மூளைக்கு ஏற்றி
திரும்ப மறுக்கிறது அன்பே
எனது பெயர்..
நீ சொல்லி அழைத்தது போல்
இனிமை இல்லையென்ற
கர்வத்தில்...

முறையீடு

உன்னைப் பிடித்த
உன்னவளுக்கு என்னைப்
பிடிக்கவில்லையா என
முறையிடுகிறது அன்பே
எனது பெயர்..
செல்லப் பெயரில் நீ அழைக்க
அதுக்காகப்பட்ட தனிமையில்...

என் பெயர் நீ அழைக்க

சிலநேரம்
மயக்கத்தில் உள்ளவரை
தட்டி எழுப்பிட வேண்டித் தான்
பெயர் சொல்லி அழைப்பார்கள்...
முதல் முறையாய்
மயக்க நிலையில்
சொக்கிப் போனேனடி சகியே
என் பெயர் நீ அழைக்க .

காதல்

லட்சம் கவிதைகள்
தனக்குள் வைத்துக் கொண்டும்
கர்வமில்லா மூன்றெழுத்து
அன்புக் களஞ்சியம்
காதல்...

வேண்டுதல்

உண்மையான
அன்பை வேண்டிடும்
இதயத்தின் வெளிப்பாடு...
உன் உள்ளங்கையில் வைத்து
என்னைத் தாங்கிட கூட
வேணாமடி காதலி,
உன் உள்ளத்திலே
என் உண்மைக் காதல்,
உன் உயிருள்ளவரை
உணர்வோடிருந்தாலே போதும்...

பெயர்

படித்தவருக்கோ
வாசித்தவருக்கோ
புரிந்திடாமல்,
நெஞ்சில் நேசிக்கும்
எனக்கு மட்டும் இனித்திடும்
ஒரு வரிக் கவிதை
உனது பெயர்...

பெயர்

உனது பேனையில் எழுத்தாகி
வார்த்தையாகும் பொழுதே
இவ்வளவு அழகென்றால்,
உன் உதட்டில்
வார்த்தையாகி பிறக்கும்
எனது பெயருக்குள் தான்
எத்தனை அழகு
ஒளிந்துள்ளது என தெரிய
கூறடி அன்பே
ஒருமுறை எனது பெயரை...

Wednesday, 23 February 2011

இமைகள்

வண்ணத்துப் பூச்சியின்
படபடக்கும்
சிறகினைப் பார்த்து
இப்படி பூரிக்கிறாயேடி..
அடி அசடே...
கண்ணாடி பாரடி தெரியும்..
வண்ணத்துப் பூச்சியா?
உன்னிமைகளா?

அழகு எதுவென்று..

அழகு

அழகும் சில நேரம்
பிரச்சனை தான் போலும்..
காற்றில் அடங்க மறுத்து
உன் முகத்தில் உலாவிட,
உன் விரலில் ஒதுக்கப்படுகையில்
அழகாகும் கூந்தலே,
சில நேரம் நான் இரசிக்க
உன் முகம் மறைக்கிறதே...

பொறாமை

எனக்கு முன்னதாய்
உன் கூந்தல் ஏறிவிட்டதாய்
பிதற்றிய ரோஜாவும்,
என்னைப் பார்த்து
பொறாமை கொண்டிருக்கும்,

வாடி போன பின்
உன்னை விட்டுப் பிரிகையில்,
உன் நெஞ்சில் என்னை
சூடிக்கொண்டது பார்த்து...