.
Monday, 16 July 2012
மனம் வதை தடுப்புச் சட்டம்
மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு
அடுத்ததாய் ஆண் மனம் வதை
தடுப்புச் சட்டம் போட்டுப் பாருங்கள்.
பெண்கள் இல்லா
புது உலகம் காணலாம்.
அபூர்வப் பட்டியல்
பாலை நிலத்து மழையாய்
உண்மைக் காதலும்.
ஏனோ இரண்டும்
அபூர்வப் பட்டியலில்
தூக்கி எறிந்த காதல்...
தூக்கி வளர்த்த குடும்பத்தை
தூக்கி எறிந்து
மணம் முடிக்கையில்
இருந்த காதல் ஏனோ
தொலைக்கப்பட்டு விடுகிறது,
புரிதல் இன்றி
கோபத்தில் தூக்கி எறிந்து
பேசிடும் வார்த்தைகளில்...
தொடரும் என் விடியல்
எங்கு பார்த்தாலும்
உனது முகமாய்,
என் ஒவ்வொரு நிமிடமும்
உன் நினைவாகவே நகர்கிறது...
நீண்ட நேரமாய்
ஓரே இடத்தினில் பார்வையினை
நிலை நிறுத்துகிறது
என் தனிமை...
எப்பொழுதாவது உன்னைக்
கண்டிடமாட்டோமா என்றவாறே
என் விடியல் தொடர்கிறது....
கருணைக் கொலைகள்
நீயற்ற தனிமைகளை
கருணைக் கொலை செய்திட
தோன்றுகிறது உன் பிரிவில்...
ஏய்ப்பு காட்டும் நீ
ஆரம்பமும் முடிவும்
இல்லா தேடலில் நான்.
என் பின்னே ஒளிந்து
ஏய்ப்பு காட்டும் நீ...
மொத்தமாய் சிவந்திட
மடிக்கப்படும் வெற்றிலையுடனே
சேர்க்கப் படுகிறது
உன் முத்தமும்.
மொத்தமாய் சிவந்துட...
இருவரி குறள் என் காதல்
சுருங்கச் சொன்னால்
தனித்துப் பிரித்தால்
பொருள் தராத
இருவரி குறள் என் காதல்.
முதல் வரி காதல்.
இரண்டாம் வரி காமம்.
ஏனோ
தனக்கானவள்
காதலனையும், நண்பனையும்
தன்னிடமே எதிர்பார்க்க வேண்டுமென
எண்ணிடும் பலர் ஏனோ
காதலியையும், தோழியையும்
தனித்தே கேட்கின்றனர்.
எனக்கு மட்டும் காதலாய்...
இருவருக்கும்
ஒரே இடம்.
ஒரே நேரம் தான்.
பிறகு ஏனடி
நட்பாய் என் தோளில்
நீ கை போடுகையில்,
காதலாய் தெரிகிறது எனக்கு...
இறுகும் அணைப்பு
ஒருவருக்குப் போதுமென
எண்ணுகின்ற வேளைகளில்
மற்றவருக்குப் போதவில்லையென
மேலும் இறுகுகிறது
நமது அணைப்பு....
கட்டுண்டு போகிறது காதலும்...
இறுக்க அணைத்த நம் உறக்கத்திலே
எங்கே நான் முழித்தால்
உன் உறக்கம் கலையுமென நானும்,
உன் முழிப்பில்
என் உறக்கம் கலையுமென நீயும்,
கண் மூடியபடியே படுத்திருக்க,
கட்டுண்டு போகிறது காதலும்...
நீயும், நானுமாய்
என் மார்புக்கூட்டின் தலையணையில்
நீ தலை சாய்த்திருக்கையில்
என் கழுத்து தங்கச் சங்கிலியில்
உன் கருத்த உரோமச் சங்கிலியும்
உறவாடுகிறதடி நீயும், நானுமாய்…
நட்பு.
இனம் பார்த்து
அமரா வண்டினாய்
முகம் பார்த்து
நெஞ்சில் அமரும் பூ...
புன்னகை நடுப்புள்ளி
நீள அகலங்களற்ற
சதுரத்தின் நடுப்புள்ளியாய்
உன் புன்னகையில் இருந்தே
தொடங்கப்படுகிறது
என் காதல்...
பணம்
பாசம் குடியிருந்த
கருவறை அகற்றி
கும்பாபிசேகம்
பணத்திற்கு...
காத்துக் கிடக்கும்
உன் கொஞ்சல்களுக்கும்
வர்ணனைகளுக்கும்
காத்துக் கிடக்கிறது
என் பால்ய வயது
புகைப்படங்கள்...
அணைப்பு
உனது வியர்வையில்
என்னுடல் நனைக்கும்
அணைப்பு வேண்டும்...
இன்றைய நிலவரம்
எனக்கானவள் எங்கோ
காதலித்துக் கொண்டிருக்க,
அவளுக்காய் நான் இங்கே
காத்துக் கொண்டிருக்கிறேன்
அவளைக் காதலிக்க...
பிழை
கவிதையில் திருத்தப்படா
பிழை.
உன் பிரிவு...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)