Thursday 28 July, 2011

என்னவென்று சொல்ல

வெகு வருடங்களுக்கு பிறகு
சந்தித்தேன் அவளை.
முதன்முதலாய்
பார்த்த அதே கோவிலில்...

அன்று பார்த்த
அதே அழகி தான்...
குடும்பச் சுமையில்
அவளது உடலும் சற்று
சுமை சேர்த்திருந்தது...

காட்சியாய் கண்கள் கண்டதும்
இதயம் பின்னோக்கி செலுத்தியது
அவளுடையதான என் நாட்களை...
மூளை உண்மையை சொல்லி
முன்னோக்கி கொண்டு வந்தது...

என்னுடைய காதலியான
உருவத்தையும்,
மாற்றான் மனைவியான
உருவத்தையும் ,
வேறுபடுத்திக் காட்டியது
நெற்றிவகிட்டுக் குங்குமமும்
தாய்மையின் சாந்தமும்...

அவளைப் பார்த்ததும்
சந்திப்புகள் தவிர்க்க
வெளியேற எத்தனித்தேன்...
அதற்கு முன் அவள்
கவனித்துவிட்டாள்...
சிறு புன்னகை பூத்தேன்
உதட்டின் வழி(லி)யால்...

தயங்கித் தயங்கி
பேச்சுக்கள் ஆரம்பித்து
சம்பிராதய விசாரிப்புகள்...
எங்களின் கற்பனையின் படியே
ஆணும் பெண்ணுமாய்
இரண்டு குழந்தைகளாம்....

மனதில் சின்னதாய்
ஒரு ஏக்கம்...
எங்கள் காதல் அவளின்
நினைவில் உள்ளதா என
தெரிந்து கொள்ள அவளது
குழந்தைகளின் பெயரைக் கேட்டேன்...

என் பெயரோ
எங்களது கற்பனைக் குழந்தையின்
பெயரோ இருக்குமென
சின்னதாய் ஆசையில்..

அமுதன், இனியாள் என்றாள்.
ஒருபுறம் சந்தோசம்.
என்னை மறந்து
சந்தோஷ வாழ்க்கை
வாழ்கிறாள் என்று...
மறுபுறம் வருத்தம்
என் ஞாபகம் இல்லையென...

அலைபேசி அழைக்க
விலகிப் போனாள்...
அமுதன் எனை நெருங்கி
மெல்ல வினவினான்...
உங்கள் பெயரும்,
என் செல்லப் பெயரான
தமிழ்' என்று...

No comments:

Post a Comment