Saturday 23 April, 2011

தொலைபேசியின் ஏக்கக் குரல்

ஏக்கங்கள் பலவோடும்
சந்தோசப் பெருக்கோடும்
காத்திருக்கும் நொடிகள் யாவும்
நினைவிலே தித்தித்திட,
கேட்கப் போகும் குரலுக்காய்
இரவிலும் செவிகள் விழித்திடும்...

எனை எடுத்துப் பேசிட
கொஞ்சல்களும், கெஞ்சல்களும்
காதலும் களிப்பும்
அலையோடிக் கொண்டிருக்கும்..

இந்நிமிஷம் இப்படியே
வருடமாய் நீளாதா என
ஏக்கம் கொள்ள வைக்கும்.

குரலைக் கேட்டிடவே
தவமிருக்கும் நேரத்தில்,
சண்டை, சந்தேகங்களுக்கு
வார்த்தையில் இடம் கிடைத்ததாய்
என்னிடம் வரலாறில்லை...

காதல் என்றால்
இவ்வளவு இனிமையா என்று
என் கண்ணே பட்டதோ என்னவோ,
உருவெடுத்தான் என் பங்காளி
காதுகளின் உடன் பிறப்பாய்
விரல்களின் நகக்கண்ணாய் ,
உடலின் உறுப்பு ஒன்று
உருமாறி அலைபேசியாய்...

சொல்ல விஷயங்கள் ஆயிரம் இருக்க
பேசிட மணிகள் சிறிதாயிருக்க,
களிப்புகளை மட்டுமே
காதல் மொழி பேசினார்,
வைத்திட மனமின்றி
என்னை அணைத்துச் சென்றனர்...

இன்றோ இயந்திரத்தின் விசையில்
உயிரோடிருக்கும் உலகத்தில்,
காதலும் அடிமைப்பட்டதே..

அலைபேசியின் இணைப்பில்
நொடிப்பொழுதும் பேச்சு,
கடந்த நொடியில் விட்ட மூச்சும்
பரிமாறிய பின்பு ஏதுள்ளது பேச,
நிமிடங்கள் மௌனமாய் பயணிக்க,
சமாளிக்க செய்த பொய்கள் தெளிய
அடுத்து பேசிட சண்டைகள்...

எனை வைத்திட மனமில்லாது
ஏங்கிய காலம் கடந்து,
எப்பொழுது வைத்திடுவோமென்று
எண்ண வைக்கிறது...

காதலில் ஊடல் சகஜம்தான்
ஊடலே காதலாகிப் போனால்,
சக்கரையும் எட்டிக்காய் தான்...
கசந்த பின்பு
வாழ்க்கைப் பந்தியில்
எட்டிக்க்காயக்கு இடமேது...
சேர்ந்த வேகத்தை விட
மிகவும் வேகமாய் பிரிவு...

பிரிந்து போன ஜோடிகளை
சேர்த்திட எண்ணி நான் அழைக்கையில்,
பெண்ணின் எண்ணோ
"தற்பொழுது உபயோகத்தில் இல்லை"
ஆணின் எண்ணோ
"தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
வேறொரு இணைப்பில் உள்ளார்"...

No comments:

Post a Comment