Thursday 13 January, 2011

பால்ய நாட்கள்

எங்கு போனது
பசுமை போர்த்திய
எனது பால்ய நாட்கள்...

செம்மண் சாயம்
பூசிக்கொண்ட உடலுமாய்,
காலெல்லாம் புழுதியோடு
கால்வலிக்க ஆட்டமும்,

காத தூரம் ஓடி வந்து
ருசித்த கள் மாங்காயும்,

தண்டவாள காசிற்க்காய்
பறிபோன மிட்டாய்களும்,

ஒன்றுமில்லா காரணத்திற்கு
அடிபிடித்த சண்டைகளும்,

கிரிக்கெட் ஆட்டத்திற்கு
பலியான ஜன்னல்களும்,

பங்குபோடும் பங்காளிகளாய்
பகுத்துண்ட பண்டங்களும்,

அடிக்கு பயந்து நானே போட்ட
அப்பாவின் கையெழுத்தும்,

அதையும் தவறாய் செய்து
அடி வாங்கிய தலையெழுத்தும்,

முதல் நாள் மட்டும்
முட்டிப் படித்த தேர்வுகளும்,

பரிட்சையில் பேப்பர் காட்டாத
பையன் வாங்கிய அடிகளும்,

வேலி ஓணான் பிடித்து
கழுவேற்றி ரசித்ததும்,

கபடி ஆட்டமும்
கண்ணாமூச்சி ஓட்டமும்,
மலையேறி விட்டன
எனக்கேறிப் போன வயதோடும்,

நான் மட்டும் கண்ட களித்த
கட்டுண்டு ஆடி திளைத்த
கட்டுப்பாடின்றி ஓடி திரிந்த
எல்லையின்றி பரந்து விரிந்த
பால்ய நாட்கள்

சுருங்கிப் போன
உருண்டையாய்,
இல்லமே உலகமாய்,
ஓய்வே பொழுபோக்காய்,

கால்களில் கேண்வாசும்,
கைகளில் வீடியோ கேம்சுமாய்,
கூட்டுப் புழுவாய்
வீட்டில் கிடக்கும்
என் சந்ததிக்கும் கிடைக்குமா?

No comments:

Post a Comment