Friday 7 January, 2011

காத்திருந்தா காலமுண்டு
இந்த மொழி நெசமாக்க,
என் பொறப்ப நீ பாக்க
கஷ்டத்தோடு காத்து நின்ன...


பத்து
மாசம் நீ சுமக்க
பட்ட பாடு என்ன சொல்ல,
வாந்தி நோவுன்னு வந்தாலும்
என்னை நோவாமல் பார்த்தியே...

அம்மான்னு நா சொல்ல
என் ஆன்மா நு கேட்குதேமா,
அந்தக் கடவுளும் முன் வந்தா
உனக்கே தான் முதல் பூசை...


உன் உசிரை பாதியாக்கி
ஊன், உசிரு நீ தந்த,
பிண்டமாய் என்ன படைச்ச
நீ தானே முதல் கடவுள்...

குறை உசிர முழுசாக்கி
முழு உருவம் நீ தந்த,
போய் வந்த உசிரோடு
என்னைய நீயும் பிரசவிச்ச...

என் வளர்ச்சில
சுகம் நீ அடைஞ்ச,
என்னோட சிரிப்புல தானே
உன் சோகம் நீ மறந்த...

காசிருந்தா உலகமுன்னு
உறவெல்லாம் அத்துப் போக
கால் காசென்று தந்தாலும்
கோடியாய் நீ பாத்த...

தப்பென்று செய்கையிலே
தண்டிக்காத என் தாயே,
தண்டித்து பேரெடுத்த
மன்னரெல்லாம் உன் அடிம....

பசியென்று வந்து சொல்லி
உன் முன்னே நா நிக்க
இருந்த சோத்த எனக்கிட்டு
என் வயிறு நீ பாத்து
ஆத்தா நீ பசியாற...

எதிர்பாக்கும் பந்தமெல்லாம்
பாந்தமாய் என்னோடு,
என் பெரும மட்டும் போதுமென
நிறைஞ்ச உன் மனசோடு...

உருவத்தில உன்னவிட
உசரமாத்தான் வளர்ந்தாலும்
அண்ணாந்து பாக்க வச்ச
பாசத்துல ஆகாசம் நீ...

நீ பட்ட கஷ்டமெல்லாம்
எனக்காக ஏத்துக்கிட்ட
உன் புள்ள பெரும சொல்லி
கோபுரமாய் உசந்து நின்ன...

நோவுன்னு நான் படுத்தா
குளமாச்சு உன் கண்ணு,
எனக்காக நீ பட்ட வலியைவிட
இதுவொன்னும் பெருசில்ல...

வளமான நிலத்துக்கு
மழை தான் கடவுள் னா,
என்னையும் மனுசனாக்கிய
ஆத்தா நீயும் மழைதானே....

பொன்னு, மண்ணுன்னு
என்னவெல்லாம் நீ கேளு,
என் உசிர மட்டும்
என்னோட விட்டு விட்டு...

கேட்டதெல்லாம் நெசமாக்கி
என் கண்ணீரில் கால் கழுவி
நீ தந்த உசுருக்கும்
அர்த்தமொன்னு தேடிக்கொள்ள...

உன் நிலை நான் எட்ட
எத்தன சென்மம் நானெடுக்க
எவ்வளவு தான் செஞ்சாலும்
உன் கால் தூசி ஆவேனோ?

அடுத்த சென்மமுன்னு
நிச்சயம் நமக்கிருந்தா,
என் மகளா நீ வந்து
என் வயித்துல பிற தாயீ...
கடவுள சுமந்த வரத்த
எனக்கும் தந்திடு தாயீ....

No comments:

Post a Comment