Monday 20 December, 2010

இப்பவே கண்ண கட்டுதே

என்னைக் காணாத நிலைவந்தால்
என்ன செய்வாயென வினவினாள்.
பட்டினியாய் பசலை நோய் கண்டு
சருகாய் காய்ந்திடுவேன் என
எதிர்பார்த்திட்டாள் போலும்..
வழக்கம் போலவே நானிருப்பேன்
மூவேளை உணவையும் உண்டிடுவேன்
எனச் சொல்லித் தொலைய...

காதல் கண்களில் கோவத் தீப்பொறியிட
பேசாதே என் நிழலோடும் என
சினத்தில் திரும்பிக் கொண்டாளவள்..

நம் பாதம் பதித்த இடமெங்கிலும்
உனைத் தேடிப்பார்த்திடவும்,

கலங்காது கழனிஎங்கும் களைப்புறாமல்
தேடிட வேண்டிடும் கால்களுக்கும்,

உன் நினைவிலே எரிந்து கரையும்
என்னிதயம் பறைசாற்றிட வழிந்திடும்
கண்களுக்காகவும் உண்டிட
வேண்டுமென மொழிந்தேன்...

என் கூற்று மெய்யென நம்பி
கட்டிக் கொண்டு என்னை முழுமையாய்
ஆட்சி செய்தாள் காதல் மகாராணி

ஒரு சான் வயிற்றிக்கு என்னவெல்லாம்
கூற வேண்டியுள்ளதென எண்ணுகையில்,
அடுத்த கேள்விக்கு என்னவள் எத்தனிக்க
கண்ணைக் கட்டுகிறது எனக்கு..

No comments:

Post a Comment