Tuesday 21 December, 2010

சந்திப்பு

மாலை ஆறு மணி..
சந்திக்க வரச் சொன்னாள் தனியே...
நேரத்திற்கு வருவது அவளது வழக்கம்.
நேரத்தை விழுங்கி வருவது
என் பழக்கம்...

வந்த நொடி முதல்
எனைப் பார்த்துக் காத்திருப்பாள்.
நொடிகளையும் நிமிடமாய் நகர
விரட்டிக் கொண்டிருப்பாள்...

இதழ்கள் என்னை கடிந்து கொண்டும்,
என் காதல் அவள் பற்களிடையே
சிக்கிக் கொண்டிருக்கும்...

என் சாயல் தலை காண
அல்லியாய் அவள் முகம் பூத்திருக்கும்..
இல்லையென்ற பின் ஏமாற்றத்தில்
முகத்தில் கடுகு, எள் வெடித்திருக்கும்..

காத்திருக்கும் நொடிகள்
நகர்வதைக் காட்டிலும் - என்
மேலுள்ள கோவம் கூடிருக்கும்.

கீழ்வானம் சிவந்ததைக் கூட - அவள்
கன்னம் சிவந்து உணர்த்திடும்...
சினத்தின் பெருமூச்சின் வெப்பத்தில்
பனியும் அடி ஒன்று
அவளைச் சுற்றியே பொழியும்...

நான் மெல்ல தலை காட்ட
என்னவள் கோபத்தின் எல்லை கண்டு
சூரியனும் இருளில் மறைந்து கொள்ள,
என்ன, ஏதென்று நொடிகள் ஸ்தம்பிக்க,
வந்ததும் கத்தித் தீர்த்தாள் சினத்தை
பெய்து தீர்த்திடும் மேகமாய்...

காத்திருந்த காலத்தையும்
சேர்த்தே காய்ச்சி எடுப்பாள்...

சினம் அமர்த்த கெஞ்சிடுவேன்.
அவளோ மிஞ்சிடுவாள்.

மிஞ்சியதும் முறைத்துக் கொள்வேன்.
என்மேல் தவறில்லா அப்பாவியாய்...
மிஞ்சிய என்னவள் இப்பொழுது
கெஞ்சலில் என்னை மிஞ்சிட,

மிச்ச மீதி நேரத்தையும்
உறைய வைத்திட கட்டிக் கொள்வாள்..
என் முகமேங்கிலும்
முத்தத்தால் நனைத்திடுவாள்..

இரவினைக் குளிர்விக்க வேண்டி
மெல்ல எட்டிப் பார்க்கும் நிலவும்
திரும்பப் போக வேண்டியதாயிற்று
எங்கள் கூடலின் குளுமை கண்டு...

1 comment: