Monday 27 December, 2010

காதல் நாடகம்

வெகுநாட்களாய் நடைபெற்ற
அழகிய நாடகம்...
நானும் நீயும் மட்டும் நடிகர்கள் - ஆனால்
ஏற்க வேண்டிய பாத்திரத்தை மறைத்து
நண்பர்களாய்...

உனது அழகிய தோழி நடிப்பிற்கு
நம்மைச் சார்ந்தவர்களே
கருத்து கூறினார் காதலென்று...
இல்லை இல்லை என்று
உன் காதலை மல்லிகைப் பூவாய்
பொத்தி வைத்தாய்
யாரும் அறியக் கூடாதென்று...

காற்றும் காதலும் ஒன்றென்று
அறியவில்லையாடி நீ.
பூவின் வாசமும், காதலின் வெளிப்பாடும்
மறைத்தாலும் மறையாது என்பது
எல்லாருக்கும் தெரியும்
பூ விற்பனை செய்பவரையும்
காதலிப்பவரையும் தவிர....

ஆனாலும் நீ செய்யும்
ஒவ்வொரு விசயங்களும்
உன்னிடம் இருந்து கொண்டு,
உனக்கெதிராய் எனக்காய்
செயல்பட என்ன செய்வேன்...

இன்னும் எத்தனை நாட்களுக்கு தாண்டி
பொத்தி வைத்து மறைக்கப் போகிறாய்
மல்லிகைப் பூவாய் மணக்கும் நம் காதலை...

அப்படித்தானடி அன்றொருநாள்
நீ அழைக்கும் பொழுது
வெகுநேரம் சிக்கவில்லை உன்னிடம்
என் எண்கள்...

வெளியில் செல்ல, விட்டுச் சொல்லும்
குழந்தையின் ஏக்கத்தின் கோபத்தை
உன்னிடம் கண்டேனடி அன்று...

கிடைத்ததும் கோபப்பட்டாய்
யார் என்ன வென்று கேட்டாய்...
நானும் நெருங்கிய தொழிஎனச் சொல்லி
மேலும் நெய்யூற்ற....

இத்தனை நாள் மறைத்து வைத்திருந்து,
முதன் முறையாய் நீ கூறாமல்
தெரிந்து கொண்டேனடி
உன் கோபத்தினை அல்ல
உன் காதலை...

No comments:

Post a Comment